Last Updated : 10 Feb, 2021 05:09 PM

 

Published : 10 Feb 2021 05:09 PM
Last Updated : 10 Feb 2021 05:09 PM

தை அமாவாசை; கண் திருஷ்டி கழிக்க உகந்தநாள்; திருஷ்டி கழியும்; தடைகள் அகலும்! 

தை அமாவாசை நன்னாளில், மாலையில் கண் திருஷ்டி கழித்து வேண்டிக்கொண்டால், திருஷ்டி கழியும், தடைகள் அனைத்தும் அகலும் என்பது ஐதீகம். நாளைய தினம் 11ம் தேதி வியாழக்கிழமை, தை அமாவாசை நன்னாள்.

அமாவாசையும் பெளர்ணமியும் வழிபாட்டுக்கும் பூஜைகளுக்கும் உரிய நாளாகப் போற்றப்படுகிறது. அமாவாசையில் சிவ வழிபாடு செய்வதும் பெளர்ணமியில் மலையைச் சுற்றி வலம் வருவதும் தோஷங்களையெல்லாம் போக்கவல்லது என்பார்கள்.

அமாவாசை நாளில், கடலில் அல்லது ஆற்றில் நீராடுவது இன்னும் விசேஷம். காவிரி, பவானி கூடுதுறை, ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம், தாமிரபரணி முதலான புனித நதிகளிலும் நீர்நிலைகளிலும் நீராடுவதும் வணங்குவதும் நன்மைகளைத் தரவல்லது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

அதேபோல், அமாவாசை என்பதே அனைத்து வழிபாடுகளுக்கும் உரிய நாளாகவே சொல்லிவைத்திருக்கிறது சாஸ்திரம். இந்தநாளில் சிவ வழிபாடு செய்வதும் சிவ தரிசனம் செய்வதும் முக்தியைக் கொடுக்கும். முன்னோர் வழிபாடு செய்துவிட்டு சிவன் கோயிலுக்குச் சென்றால், சென்று வணங்கினால், முக்தி நிச்சயம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

இதேபோல், அமாவாசையில் பெண் தெய்வ வழிபாடு செய்வதும் குலதெய்வத்தை வணங்குவதும் உன்னதமான பலன்களை வழங்கும். முக்கியமாக, கண்ணேறு கழித்தல் என்று சொல்லப்படுகிற திருஷ்டி கழிப்பதை அமாவாசையில் செய்வது இன்னும் சக்தி மிக்கது; வீரியம் கொண்டது. மும்மடங்கு பலன்களைத் தரவல்லது!

பொதுவாக வெள்ளிக்கிழமைகளில் திருஷ்டி சுற்றிப் போடுவார்கள். அதேசமயம், அமாவாசையின் போது அவசியம் திருஷ்டி சுற்றிப் போடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் கடைகளிலும் வியாபார ஸ்தலங்களிலும் அமாவாசை தினத்தில் திருஷ்டி சுற்றிப் போடுவார்கள்.

அதேபோல், அமாவாசை நன்னாளில், குடும்பத்தின் உறுப்பினர்கள் அனைவரையும் நடுஹாலில் அமரச் சொல்லி திருஷ்டி சுற்றிப்போடுவது நன்மைகளை வழங்கும். பூசணிக்காய் கொண்டு முதலிலும் அடுத்து எலுமிச்சை கொண்டும் இதன் பின்னர் தேங்காய் கொண்டும் சூடமேற்றி திருஷ்டி சுற்றிப் போடவேண்டும்.

பின்னர், திருஷ்டி கழித்த பூசணிக்காயையும் தேங்காயையும் வீட்டு வாசலில், தெரு சந்திப்பில் உடைத்து திருஷ்டி கழிக்கலாம். அதேபோல், எலுமிச்சை தீபத்தில் சூடமேற்றி திருஷ்டி கழித்துவிட்டு, பின்னர், எலுமிச்சையை நான்காக்கி, நாலா திசைக்கும் வீசி திருஷ்டி கழிக்கவேண்டும்.
அமாவாசையில் திருஷ்டி கழிப்பது விசேஷம். தை அமாவாசையில் திருஷ்டி கழிப்பது இன்னும் மகத்தான பலன்களைத் தந்தருளும். தீயசக்திகள் அகலும். கண் திருஷ்டி கழியும். தடைகள் அனைத்தும் விலகும். இல்லத்தில் ஒற்றுமையும் சுபிட்சமும் மேலோங்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

நாளைய தினம் 11ம் தேதி தை அமாவாசை. கண் திருஷ்டி கழிப்போம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x