Published : 10 Feb 2021 04:27 PM
Last Updated : 10 Feb 2021 04:27 PM
திருவோணமும் அமாவாசையும் இணைந்து வரும் நாள் முன்னோரை வணங்குவதற்கு இன்னும் விசேஷமான நாள் என்று போற்றுகின்றனர். இந்தநாளில் தை அமாவாசை நன்னாளில், முன்னோர் வழிபாட்டை அவசியம் செய்வதும் ஆராதித்து பிரார்த்தனை செய்வதும் சுபிட்சத்தைக் கொடுக்கும். கடன் தொல்லையில் இருந்து மீட்டெடுக்கும் என்பது ஐதீகம்.
வாழ்வில் இஷ்ட தெய்வத்தை வணங்குவதையும் முக்கியமான தெய்வத்தை வணங்குவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். அதேசமயம், இந்த வழிபாடுகளைச் செய்து வந்தாலும் முக்கியமான இரண்டு வழிபாடுகள் இருக்கின்றன. இவற்றைச் செய்யத் தவறினால் அதைத்தான் மிகப்பெரிய தோஷமாகவும் பாவமாகவும் சொல்கிறது சாஸ்திரம்.
அந்த இரண்டு வழிபாடுகள்... ஒன்று குலதெய்வ வழிபாடு. இன்னொன்று... குலதெய்வத்தை நமக்குக் காட்டிய முன்னோர் வழிபாடு. இந்த இரண்டை இந்தப் பிறவி முழுவதும் அவசியம் வழிபட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
முதலில் நம் முன்னோர்கள். அவர்களின்றி நாம் இந்த உலகுக்கு வரவில்லை. அவர்களால்தான் நாம் இந்தப் பூவுலகிற்கு வந்தோம். அவர்கள் இன்றைக்கு பித்ரு லோகத்துக்கு இருக்கிறார்கள். தெய்வத்துக்கு நிகரானவர்கள் தெய்வமாகவே ஆகி, பித்ரு லோகத்தில் இருக்கிறார்கள். அவர்களை ஒருபோதும் வணங்காமல் இருக்கக் கூடாது.
அவர்களால்தான், நம் முன்னோர்களால்தான் நம்முடைய குலதெய்வம் யார் என்பதே நமக்குத் தெரிந்திருக்கிறது. எனவே குலதெய்வ வழிபாட்டை தொடர்ந்து மேற்கொள்ளவேண்டும். குலதெய்வத்தை தொடர்ந்து வழிபட்டால் மட்டுமே பலன்கள் கிடைத்துவிடாது என்கிறார்கள். முன்னோர்களைத் தொடர்ந்து ஆராதித்து வந்தால்தான், குலதெய்வத்தின் அருள் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்.
அதன்படி முதலில் முன்னோர் வழிபாடு. அதன் பின்னர் குலதெய்வ வழிபாடு. இந்த இரண்டு வழிபாட்டுக்கும் உகந்த நாளாகப் போற்றப்படுகிறது அமாவாசை. அதிலும் தை அமாவாசை நாளில், முன்னோர் வழிபாட்டை மேற்கொள்ளவேண்டும். எள்ளும் தண்ணீரும் விட்டு தர்ப்பணம் செய்யவேண்டும்.
காலையும் மாலையும் வீட்டில் விளக்கேற்றி, முன்னோர் ஆராதனைகள் செய்யவேண்டும். பித்ருக்களை நினைத்து ஏதேனும் தானங்கள் செய்யவேண்டும். அதேபோல், முன்னோர் வழிபாட்டைச் செய்துவிட்டு, குலதெய்வத்தையும் வணங்குதல் சிறப்புக்குரியது.
முடிந்தால் குலதெய்வம் அருகில் இருந்தால் கோயிலுக்குச் சென்று வழிபடலாம். அல்லது வீட்டில் இருந்தே குலதெய்வ வழிபாட்டை அவரவர் வழக்கப்படி மேற்கொள்ளலாம். குலதெய்வத்துக்குப் படையலிட்டு வணங்கலாம்.
நாளைய தினம் 11ம் தேதி தை அமாவாசை. இந்த தை அமாவாசை, இன்னும் மகிமை மிக்கது. திருவோண நட்சத்திரமும் அமாவாசையும் இணைந்து வருவது இன்னும் சிறப்பானதாகவும் விசேஷமானதாகவும் போற்றப்படுகிறது.
தை அமாவாசையும் திருவோணமும் இணைந்த நாளில், முன்னோர் வழிபாட்டையும் குலதெய்வ வழிபாட்டையும் மறக்காமல் செய்யுங்கள். மங்கல காரியங்கள் தடையின்றி நிகழும். இல்லத்தில் சுபிட்சம் குடிகொள்ளும். சந்ததி சிறக்க வாழ்வார்கள். சந்தான பாக்கியம் கிடைக்கப் பெறுவார்கள்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT