Published : 10 Feb 2021 12:56 PM
Last Updated : 10 Feb 2021 12:56 PM
அமாவாசை என்றதும் முன்னோர்கள் நினைவுக்கு வருவார்கள். முன்னோர்களை நினைக்கும் போது இரண்டு புண்ணிய க்ஷேத்திரங்கள் நினைவுக்கு வரும். ஒன்று... காசி திருத்தலம். வடக்கே உள்ளது. இன்னொன்று தெற்கே அமைந்துள்ள ராமேஸ்வரம்.
உலகில் எந்த மூலையில் இருந்தெல்லாமோ... ராமேஸ்வரம் நோக்கி வருவதும் ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தம் எனப்படும் கடற்கரையில் பித்ரு தர்ப்பண காரியங்களைச் செய்வதும் மகா புண்ணியம் என்கின்றனர் ராமேஸ்வரம் திருத்தலத்தின் ஆச்சார்யப் பெருமக்கள்.
ராமேஸ்வரம் தலத்தின் புண்ணியத் தீர்த்தத்தில் நீராடி, சிவ பூஜையும் தரிசனமும் செய்து, பித்ருக்கடன் செய்தாலே, நம் முந்தைய ஜென்ம பாவங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம். இதற்கு மிகச் சிறந்த உதாரண புருஷர்... உதாரண புருஷரான ஸ்ரீராமபிரான். இவர், ராமேஸ்வரத்துக்கு வந்து புண்ணிய தீர்த்தத்தில் நீராடி, சிவலிங்க பூஜை செய்து, பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து விடுபட்டார் என விவரிக்கிறது ஸ்தல புராணம்.
ராமேஸ்வரம் திருக்கோயில், பிரமாண்டமாகவும் கலைநயத்துடனும் திகழ்கிறது. இதன் மூன்றாம் பிராகாரம், 2,250 அடி சுற்றளவு கொண்டது. அந்தப் பிராகாரத்தில் சுமார் 1,212 அழகிய தூண்கள் அமைந்துள்ளன.
எல்லாவற்றையும் விட இந்தத் தலத்தில் 22 புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன. இந்த இப்பிறவியில் ஒருமுறையேனும் 22 புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடவேண்டும் என்றும் அப்படி நீராடினால், நம் பாவங்களெல்லாம் தொலையும் பலப்பல நன்மைகள் கிடைக்கப் பெறலாம் என்றும் விவரிக்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
மகாலக்ஷ்மி தீர்த்தத்தில் நீராடினால், சகல ஐஸ்வரியங்களும் பெருகும். சாவித்திரி, காயத்ரி, சரஸ்வதி தீர்த்தங்களில் நீராடினால், இதுவரை சடங்குகளைச் செய்யாதவர்களும், சந்ததி இல்லாதவர் களும் நற்கதி பெறலாம்.
சங்கு தீர்த்தத்தில் நீராடினால், நன்றி மறந்த பாவம் நீங்கும். சக்கர தீர்த்தத்தில் நீராடினால் தீராத நோயும் தீரும். சேது மாதவ தீர்த்தத்தில் நீராடினால் செல்வம் கொழிக்கும்.
நள தீர்த்தத்தில் நீராடினால், இறையருளைப் பெற்று சொர்க்கத்தை அடையலாம். நீல தீர்த்தத்தில் நீராடினால், யாகம் செய்த பலனைப் பெறலாம். கவாய தீர்த்தத்தில் நீராடினால், மனவலிமையைப் பெறலாம். கவாட்ச தீர்த்தத்தில் நீராடினால், தேக ஆரோக்கியம் உண்டாகும். கந்தமான தீர்த்தத்தில் நீராடினால், தரித்திரம் நீங்கும்.
பிரம்மஹத்தி விமோசன தீர்த்தத்தில் நீராடினால், பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். பில்லி சூனிய ஏவல்கள் அகலும். சந்திர தீர்த்தத்தில் நீராடினால், கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கலாம். சூரிய தீர்த்தத்தில் நீராடினால், ஞானமும் யோகமும் பெறலாம்.
சாத்யாம்ருத தீர்த்தத்தில் நீராடினால், தேவதைகளின் கோபத்தில் இருந்து விடுபடலாம். சிவ தீர்த்தத்தில் நீராடினால் சகல ஐஸ்வரியங்களையும் பெறலாம். சர்வ தீர்த்தத்தில் நீராடினால், அனைத்து யோகங்களும் கைகூடும். கயா, யமுனா மற்றும் கங்கா தீர்த்தங்களில் நீராடினால் கிடைக்கும் பிறவிப் பயனை அடையலாம்.
நிறைவாக, கோடி தீர்த்தத்தில் நீராடினால், - மகா புண்ணியம் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம். ஸ்ரீராமர், சிவலிங்க அபிஷேகத்துக்குப் பயன்படுத்திய தீர்த்தம் இது. சிவனாரின் அருளையும் ஸ்ரீராமரின் அருளையும் பெற்றுப் பெருவாழ்வு வாழவைக்கும் மகா தீர்த்தம் என்று போற்றுகிறார்கள்.
அக்னி தீர்த்தம் என்று கடலைச் சொல்லுவார்கள். கடலிலேயே கலந்திருக்கிறது அக்னி தீர்த்தம். இதில் நீராடிவிட்டே தரிசனத்துக்குச் செல்கிறார்கள் பக்தர்கள்.
தீர்த்தங்களில் நீராடுவோம். பாவங்கள் தொலையட்டும்; புண்ணியங்கள் பெருகட்டும்! ஸ்ரீராமநாத சுவாமியின் அருளைப் பெறுவோம்! முக்கியமாக, நம் முன்னோரை வழிபடாமல், அவர்களை வணங்காமல், ஆராதிக்காமல் எது செய்தாலும் எந்த தெய்வத்தை வணங்கினாலும் அவற்றால் எந்தப் பலனும் விளையாது. முன்னோருக்குச் செய்கிற ஆராதனைகள்தான், நம்மை முன்னுக்குக் கொண்டு வரவல்லது. பித்ருக்களின் ஆசி இருந்தால்தான் இறைவனின் பரிபூரண அருளைப் பெறமுடியும்.
நாளைய தினம் 11ம் தேதி தை அமாவாசை. முன்னோர்களை வணங்குவோம். அவர்களை ஆராதிப்போம். முடியும்போது ராமேஸ்வரம் திருத்தலத்துக்குச் சென்று பித்ருக் காரியம் செய்து போற்றுவோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT