Published : 09 Feb 2021 01:19 PM
Last Updated : 09 Feb 2021 01:19 PM
தை செவ்வாய்க்கிழமையில், அம்பாளைத் தரிசிப்பது விசேஷம். செவ்வாய்க்கிழமை என்பது முருகப்பெருமானுக்கு உரிய நாள். சிவபெருமான் பிரதோஷ வழிபாட்டுக்கு உரியவர். இந்த மூவருக்குமான நாளில், அவர்களை வணங்குவோம். அல்லல்களையெல்லாம் தீர்த்து வைப்பார்கள். இன்னல்களையெல்லாம் போக்கி அருளுவார்கள்.
பொதுவாகவே செவ்வாய்க்கிழமை என்பது அம்பாளுக்கு உரிய நாள். அம்பாளைத் தரிசிப்பதற்கு உகந்தநாள். சக்தியை வழிபடுவதற்கு உரிய நாள். உலகில் உள்ள அம்பாளையும் அம்மனையும் மாரியம்மனையும் ஆராதனைகள் மேற்கொள்வதற்கு மிகச்சிறப்பான நாள் என்று செவ்வாய்க்கிழமையைப் போற்றுவார்கள்.
அதேபோல், காலையும் மாலையும் அம்பாளை வழிபடுகிற அதேவேளையில், வீட்டில் விளக்கேற்றி வழிபடுவதும் செய்யலாம். முக்கியமாக, லலிதா சகஸ்ரநாமம், கனகதாரா ஸ்தோத்திரம் சொல்லி பாராயணம் செய்யலாம். அபிராமி அந்தாதி பாராயணம் செய்து வழிபடலாம்.
முக்கியமாக, செவ்வாய்க்கிழமை ராகுகாலம் என்பது மதியம் 3 முதல் 4.30 மணி வரையிலான காலம். இந்தக் காலகட்டத்தில், சிவாலாயத்துக்கோ அல்லது அம்மன் கோயிலுக்கோ அல்லது துர்கை குடிகொண்டிருக்கும் சந்நிதிக்கோ சென்று, துர்கைக்கு எலுமிச்சை தீபமேற்றி வழிபடுவது துஷ்ட சக்திகளையெல்லாம் போக்கும் என்பது ஐதீகம்.
ஆக செவ்வாய்க்கிழமையில் அம்பாள் வழிபாடு மிகுந்த பலன்களை வாரிக்கொடுக்கும். அதேபோல, செவ்வாய்க்கிழமை என்பது முருகக் கடவுளை வணங்குவதற்கான நாளும் கூட. செவ்வாய்க்கு அதிபதியாகத் திகழ்கிறார் வெற்றிவேலன். வேலவனை, ஞானக்குமரனை, சக்தியின் மைந்தனை விளக்கேற்றி வழிபடலாம். கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து வழிபடலாம்.
முடிந்தால், செவ்வாய்க்கிழமைகளில் வேலுக்கு அபிஷேகம் செய்வதும் வைத்தீஸ்வரன் கோவில் அங்காரகனை நினைத்து உரிய மந்திரங்கள் சொல்லி மனதார வழிபட்டால், செவ்வாய் முதலான தோஷங்கள் விலகும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
இன்றைய செவ்வாய்க்கிழமை 9ம் தேதி அம்பாள் தரிசனத்துக்கு முக்கியம் என்பது போல், முருக வழிபாட்டுக்கு சிறப்பு வாய்ந்தது என்பது போல, சிவ வழிபாடு செய்வதற்கும் எண்ணற்ற பலன்கள் வழங்குகின்ற நாளாகக் கொண்டாடப்படுகிறது. இன்று பிரதோஷம்.
தை மாதத்தின் பிரதோஷம். தை மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமை. மதியம் 3 முதல் 4.30 மணி வரையிலான ராகுகாலம் முடிந்ததுமே 4.30 முதல் 6 மணி வரையிலான காலம், பிரதோஷ காலம். நல்ல அதிர்வுகள் ஆலயமெங்கும் வியாபித்திருக்கும் இந்த நாளில், தை செவ்வாய், தை பிரதோஷம் என்றிருக்கும் வேளையில், அம்பாளை தரிசனம் செய்வோம். முருகப் பெருமானை மனமுருகி வேண்டுவோம். நந்திதேவருக்கும் சிவனாருக்கும் நடைபெறுகிற பதினாறு வகையான அபிஷேகங்களை கண் குளிரத் தரிசிப்போம்.
ஓம் சக்தி பராசக்தி... வேலும் மயிலும் துணை... தென்னாடுடைய சிவனே போற்றி!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT