Published : 08 Feb 2021 03:17 PM
Last Updated : 08 Feb 2021 03:17 PM
காசி எனும் புண்ணிய நகரத்துக்கு இணையான திருத்தலம் தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில். காசியில் இறந்தால் முக்தி என்பார்கள். ஆனால் தென்காசியில், பிறந்தாலும் முக்தி. இருந்தாலும் முக்தி. இறந்தாலும் முக்தி என்கிறது ஸ்தலபுராணம். ஒருமுறையேனும் தென்காசி க்ஷேத்திரத்துக்கு வந்து காசி விஸ்வநாதரைத் தரிசித்தாலே முக்தி நிச்சயம் என்று போற்றுகிறார்கள் சிவாச்சார்யப் பெருமக்கள்
சச்சிதானந்தபுரம், முத்துதாண்டவ நல்லூர், ஆனந்தக்கூத்தனூர், சைவ மூதூர், தென்புலியூர் என்றெல்லாம் பல பெயர்களைக் கொண்டது தென்காசி திருத்தலம். செண்பகப்பொழில், சித்திர மூலத்தானம், மயிலைக்குடி என இன்னும் ஏராளமான பெயர்கள் தென்காசி க்ஷேத்திரத்துக்கு உள்ளன.
வடக்கே அமைந்திருக்கும் காசிக்கு நிகரான தலம் என்பதால் தெற்கே உள்ள இந்தத் தலத்துக்கு தென்காசி என்று திருநாமம் அமைந்ததாகச் சொல்கிறது ஸ்தல புராணம். தென்காசிக்கு அருகில் உள்ள விந்தன்கோட்டையைத் தலைநகராகக் கொண்ட பராக்கிரம பாண்டிய மன்னன், காசி விஸ்வநாதருக்கு பிரமாண்டமானதொரு கோயிலை எழுப்பினான்.
தென்காசிக்கு அருகில் சாம்பவர் வடகரை எனும் ஊருக்கு அருகில் உள்ளது விந்தன்கோட்டை. இங்கே உள்ள கோட்டையில் இருந்து கொண்டுதான் பராக்கிரம பாண்டிய மன்னன், ஆட்சி செய்து வந்தான் என்கிறது வரலாறு.
பராக்கிரம பாண்டிய மன்னன், கடும் சிவபக்தன். சதாசர்வ காலமும் சதாசிவத்தையே நினைத்து பூஜித்துக் கொண்டிருந்தான். காசியம்பதி என்கிற புண்ணிய க்ஷேத்திரத்துக்குச் சென்று வழிபட்டுவந்தான். அதுவும் எப்படி? விந்தன்கோட்டையில் இருந்து வான்வழியே அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் காசியம்பதிக்குப் பறந்து சென்று சிவனாரைத் தரிசிப்பார். பின்னர் சூரியோதயத்துக்கு முன்னரே தன்னுடைய கோட்டைக்கு வந்து ஆட்சி செய்யத் தொடங்கிவிடுவார்.
இப்படியாகத்தான் மன்னர், காசி விஸ்வநாதரை தரிசிப்பது இருந்து வந்தது. ஒருநாள், மன்னரின் மனைவிக்கும் காசிக்குச் செல்லவேண்டும் விஸ்வநாதரைத் தரிசிக்கவேண்டும் எனும் விருப்பம் மேலிட, தன் எண்ணத்தை மன்னரிடம் தெரிவித்தார். அதன்படி, மகாராணியையும் அழைத்துச் சென்றார் மன்னர். இருவரும் விஸ்வநாத சுவாமியைத் தரிசித்தனர்.
இந்தமுறை காசியில் இருந்து சிவலிங்கம் ஒன்றையும் எடுத்து வந்தார் மன்னர். வழியில், மகாராணி விலக்கானாள். வழியில் அடர்ந்த நந்தவனச் சோலையில் தங்கினர். மூன்று நாட்களுக்குப் பிறகு, மீண்டும் அங்கிருந்து கிளம்பினார்கள். ஆனால், காசியில் இருந்து கொண்டு வந்த லிங்கத்தை நகர்த்தவோ அசைக்கவோ முடியவில்லை. மன்னர் பதைபதைத்துப் போனார். நெஞ்சைப் பிடித்துக் கொண்டு நின்றார். கண்ணீர் விட்டு கதறினார்.
அப்போது, அசரீரி கேட்டது. ‘இந்த லிங்கம் இங்கேயே இருக்கட்டும்’ என அறிவிப்பு கேட்டது. அதன்படி, அந்த நந்தவனத்திலேயே சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து, ஆலயம் எழுப்பி வழிபடத் தொடங்கினார் மன்னர். அந்தத் தலம்... இன்றைக்கும் போற்றப்படுகிறது. சிவகாசி என்று அழைக்கப்படுகிறது.
சிவகாசியில் கோயில் எழுப்பிய மன்னனுக்கு ‘இப்படியொரு லிங்கத்துடன் இங்கே நாம், ஒரு கோயில் கட்டவேண்டும்’ என விரும்பினார். ’இதைவிட பிரமாண்டமாக கோயில் கட்டவேண்டும். அந்த சிவலிங்கத்துக்கு காசி விஸ்வநாதர் என்றே பெயர் சூட்டவேண்டும்’ என்று நினைத்துக் கொண்டே இருந்தார்.
ஒருநாள்... மன்னரின் கனவில் சிவனார் தோன்றினார். ‘உன்னுடைய கோட்டையில் இருந்து கட்டெறும்புகள் வரிசையாக ஊர்ந்து செல்லும். அந்த எறும்புவரிசை நிற்கும் இடத்தில், சிவலிங்கம் இருக்கிறது. அதைக் கொண்டு கோயில் எழுப்பு’ என அருளினார்.
அதன்படி, எறும்புவரிசைக்குக் காத்திருந்தார் மன்னர். எறும்புகள் கோட்டைக்குள் வந்தன. ஊர்ந்தன. வரிசையாக அணிவகுத்துச் சென்றன. மன்னர், எறும்புகளைப் பின் தொடர்ந்து சென்றார். எறும்புகள், சிற்றாற்றின் கரைக்குச் சென்றன. செண்பகத்தோட்டத்தில் நின்றன. அங்கே அழகிய, பிரமாண்ட சிவலிங்கத் திருமேனியைக் கண்டு சிலிர்த்துப் போனார். ‘என் சிவனே என் சிவனே’ சிவலிங்கத்தைச் சுற்றிச்சுற்றி வந்தார். அங்கே... பிரமாண்டமாகக் கோயில் எழுப்பினார். வடக்கே உள்ள காசிக்கு நிகரானதாகப் போற்றப்படும் அந்தத் தலம், தென்காசி என்று இன்றைக்கும் போற்றப்படுகிறது.
மிகப்பிரமாண்டமான ஆலயம். ஏராளமான கல்வெட்டுகளையும் குறிப்புகளையும் சரித்திர சாட்சிகளாகக் கொண்ட திருத்தலம். சிவபெருமானுக்கு மன்னர்கள் வழங்கிய நிலங்கள், தோப்புகள், ஆபரணங்கள், நில எல்லைகள், அவற்றின் மூலம் கிடைக்கக் கூடிய வருமானங்கள் முதலானவை அனைத்துமே கல்வெட்டுக்களாக பொறிக்கப்பட்டுள்ளன.
காசி எனும் புண்ணிய நகரத்துக்கு இணையான திருத்தலம் தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில். காசியில் இறந்தால் முக்தி என்பார்கள். ஆனால் தென்காசியில், பிறந்தாலும் முக்தி. இருந்தாலும் முக்தி. இறந்தாலும் முக்தி என்கிறது ஸ்தலபுராணம். ஒருமுறையேனும் தென்காசி க்ஷேத்திரத்துக்கு வந்து காசி விஸ்வநாதரைத் தரிசித்தாலே முக்தி நிச்சயம் என்று போற்றுகிறார்கள் சிவாச்சார்யப் பெருமக்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT