Published : 08 Feb 2021 01:23 PM
Last Updated : 08 Feb 2021 01:23 PM
வாழ்வில் ஒருமுறையேனும் திருநீர்மலை திவ்விய க்ஷேத்திரத்துக்கு வந்து, நான்கு வித பெருமாளையும் கண்ணாரத் தரிசித்து வேண்டினால், நம் முன் ஜென்மத்துப் பாவங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.
பெருமாளின் கோயில்களில் மிக முக்கியமான கோயில்களும் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட கோயில்களும் திவ்விய தேசங்கள் என்று போற்றப்படுகின்றன. மொத்தம் 108 திவ்விய தேசங்கள் என்று போற்றி வணங்கி வருகிறோம். அப்படியான அற்புதத் தலங்களில், திருநீர்மலை திருத்தலமும் ஒன்று.
அஷ்ட சயனங்கள் என்பார்கள். பெருமாளின் அஷ்ட சயன திருக்கோலங்கள் அமைந்துள்ள திருத்தலங்கள் உள்ளன. ஸ்ரீவில்லிபுத்தூரில் வடபத்ர சயனம் என்பார்கள். திருவள்ளூர் திருத்தலத்தில் வீர சயனம் என்று போற்றுவார்கள். திருக்கடல் மல்லை என்று புகழப்படும் மாமல்லபுரத்தில், தல சயனம் என்கிறது ஸ்தல புராணம். திருக்குடந்தை திருத்தலத்தில் உத்தாயன சயனம் என்றும் திருப்புல்லாணி திருத்தலத்தில் தர்ப்ப சயனம் என்றும் சொல்லுவார்கள்.
வைஷ்ணவத்தில் கோயில் என்றாலே ஸ்ரீரங்கம் தலத்தைத்தான் சொல்லுவார்கள். அத்தகைய பெருமைமிக்க தலத்தில், புஜங்க சயனமாக பெருமாள் திருக்காட்சி தருகிறார். திருச்சித்திரக்கூடம் என்று கொண்டாடப்படும் சிதம்பரத்தில், போக சயனத் திருக்கோலத்தில் காட்சி தருகிறார் பெருமாள். எட்டாவதாக திருநீர்மலை திருத்தலத்தில், மாணிக்க சயனக் கோலத்தில் சேவை சாதிக்கிறார் பெருமாள்.
சென்னை பல்லாவரம், பம்மலுக்கு அருகில் உள்ளது திருநீர்மலை திவ்விய க்ஷேத்திரம். அரங்கன் குடிகொண்டிருக்கும் இந்தத் தலத்தை, ஸ்வயம் வயக்த க்ஷேத்திரம் என்று சிலாகிக்கிறது ஸ்தல புராணம். அதாவது, மனிதர்களால் உண்டுபண்ணாமல் தானே ஏற்பட்ட சிலாமேனி என்று அர்த்தம். சைவ திருக்கோயில்களில் சுயம்பு மூர்த்தம் என்று சொல்வது போல், வைஷ்ண தலங்களில், ஸ்வயம் வயக்தம் என்பார்கள்.
இப்படி ஸ்வயம் வயக்த க்ஷேத்திரங்களாக, ஸ்ரீரங்கம் திருத்தலம், திருப்பதி, ஸ்ரீமுஷ்ணம், ஸாளக்கிராமம், நைமிசாரண்யம், புஷ்கரம், பத்ரி, தோத்தாத்ரி எனப்படும் திருநீர்மலை முதாலான க்ஷேத்திரங்களைச் சொல்லுகின்றனர் ஆச்சார்யப் பெருமக்கள்.
பொதுவாக, நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிப்பார் பெருமாள். கிடந்த கோலத்தில் சேவை சாதிப்பார். இருந்த கோலத்திலும் நடந்த கோலத்திலுமாகக் காட்சி தருவார். இங்கே... திருநீர்மலை திவ்விய திருத்தலத்தில் நான்குவிதமாகவும் திருக்காட்சி தருகிறார் பெருமாள் என்பது இந்தத் தலத்தின் இன்னொரு மகத்துவம்.
ஸ்ரீநீர்வண்ணப் பெருமாளாக நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார் பெருமாள். அதேபோல, ஸ்ரீசாந்த நரசிம்மராக இருந்த கோலத்தில் சேவை சாதிக்கிறார். மாணிக்க சயனத்தில், ஸ்ரீரங்கநாதராக கிடந்த கோலத்தில் காட்சி தருகிறார். த்ரிவிக்கிரம பெருமாளாக நடந்த திருக்கோலத்தில் காட்சி தந்து அருளுகிறார்.
இத்தனை பெருமைகளையும் ஒருங்கே பெற்ற திருத்தலமாக திகழ்கிறது திருநீர்மலை புண்ய க்ஷேத்திரம்.
வாழ்வில் ஒருமுறையேனும் திருநீர்மலை திவ்விய க்ஷேத்திரத்துக்கு வந்து, நான்கு வித பெருமாளையும் கண்ணாரத் தரிசித்து வேண்டினால், நம் முன் ஜென்மத்துப் பாவங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம். திருமண யோகம் விரைவில் கிடைக்கப் பெறலாம். கல்யாணத் தடைகள் மொத்தமும் விலகும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
வால்மீகி முனிவருக்கும் தொண்டைமான் மன்னருக்கும் இங்கே திருக்காட்சி தந்து வரமருளிய திருத்தலம் எனும் பெருமைமிக்கது திருநீர்மலை.
திருநீர்மலைக்கு வந்தால், திருப்பங்களும் நல்ல மாற்றங்களும் கிடைக்கப் பெறுவது நிச்சயம் என்று போற்றுகிறார்கள் பக்தர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT