Published : 08 Feb 2021 12:01 PM
Last Updated : 08 Feb 2021 12:01 PM
வெள்ளூரில் காமேஸ்வரர் கோயிலில் சந்நிதி கொண்டிருக்கும் மகாலக்ஷ்மி அபூர்வமானவள். வில்வ ஐஸ்வர்ய மகாலக்ஷ்மி என்று சொல்லும் இந்த தாயாரை, வெள்ளிக்கிழமைகளில் பதினாறு முறை வலம் வந்து பிரார்த்தனை செய்து வேண்டிக்கொண்டால், சகல ஐஸ்வரியங்களையும் தந்தருளுவார் ஐஸ்வர்ய மகாலக்ஷ்மி!
திருச்சியில் இருந்து நாமக்கல் செல்லும் வழியில், குணசீலம் கோயிலை அடுத்துள்ளது வெள்ளூர். முசிறிக்கு முன்னதாகவே உள்ளது இந்த வெள்ளூர் திருத்தலம். இங்குதான் அற்புதமாகக் கோயில் கொண்டிருக்கிறார் திருக்காமேஸ்வரர். அம்பாளின் திருநாமம் ஸ்ரீசிவகாமசுந்தரி.
இந்தக் கோயிலின் சிறப்பம்சம்... மகாலட்சுமித் தாயார். வேறு எந்த சிவாலயத்திலும் இல்லாத வகையில், இங்கே மகாலட்சுமி அற்புதமாகக் கோயில் கொண்டிருக்கிறார். இந்தத் தலத்துக்கு வந்து சிவகாமி அம்பாள் சமேத திருக்காமேஸ்வரரையும் மகாலக்ஷ்மித் தாயாரையும் மனதாரத் தரிசித்துப் பிரார்த்தனை செய்தால், சகல ஐஸ்வரியங்களையும் தந்தருள்வார்கள் என்பது ஐதீகம்.
சிவபெருமானை எதிர்த்து தட்சன் யாகம் நடத்தியதும் அந்த யாகத்துக்கு சிவனாரை அழைக்கவில்லை என்பதும் விவரிக்கும் புராணத்தை அறிந்திருப்போம். ஆனால் அப்பா நடத்துகிற யாகத்துக்குச் செல்லவேண்டும், அங்கே சென்று என் கணவரை ஏன் அழைக்கவில்லை என்று கேட்கவேண்டும் என தட்சனின் மகளுமான உமையவள் கோபத்துடன் கிளம்பிச் சென்றாள். அங்கே மகளுக்கும் மரியாதை தரப்படவில்லை. அழுகையும் விரக்தியுமாக வந்தாள் பார்வதிதேவி. இதைக் கண்டு சிவனார் இன்னும் கோபமானார். சொல்லச் சொல்லக் கேட்காமல் யாகத்துக்குச் சென்ற பார்வதிதேவியை சுட்டெரித்தார் என்கிறது ஸ்தல புராணம்.
பின்னர் உமையவளுக்கு உயிர் கொடுத்தார். மன்மதனின் உயிரைப் பறித்த சிவனாரிடம் ரதிதேவி கடும் தவம் இருந்து வரம் பெற்றாள். மீண்டும் மன்மதனை உயிர்த்தெழச் செய்தார். இதனால்தான் இங்கே உள்ள சிவபெருமானுக்கு திருக்காமேஸ்வரர் எனும் திருநாமம் அமைந்ததாகச் சொல்கிறது ஸ்தல புராணம்.
பொதுவாக, சிவாலயம் என்றாலே திங்கட்கிழமை, பிரதோஷம் முதலான நாட்கள்தான் விசேஷமானது எனப் போற்றப்படுகிறது. ஆனால் இந்தத் தலத்தில், மகாலக்ஷ்மி குடிகொண்டிருப்பதால், தனிச்சந்நிதியில் அமர்ந்திருப்பதால், சுக்கிர வாரம் எனப்படும் வெள்ளிக்கிழமையும் இன்னும் விசேஷமானதாக, வழிபட உகந்த நாளாகப் போற்றப்படுகிறது.
மகாலக்ஷ்மியின் நெற்றியில் சிவலிங்கத் திருமேனி தரித்திருப்பதும், இங்கே வில்வமாக, வில்வ அம்சமாகவே மகாலட்சுமி திருக்காட்சி தருகிறாள் என்பதும் ஐதீகம்.
வெள்ளிக்கிழமை நாளில் காலை 6 முதல் 7 மணிக்குள் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. பதினாறு நெய்தீபங்களேற்றி, தாமரை மலர்கள் சார்த்தி, செந்தாமரை மலர்கள், செவ்வரளி முதலான மலர்கள் சார்த்தி வில்வமரத்துடன் சேர்த்து பதினாறு முறை வலம் வந்து பிரார்த்தனை செய்து வந்தால், விரைவில் கடன் தொல்லைகள் அனைத்தும் நிவர்த்தியாகும். சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கப் பெறலாம் என்றும் விவரிக்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT