Published : 08 Feb 2021 10:31 AM
Last Updated : 08 Feb 2021 10:31 AM
தென்னாடுடைய சிவனை உரிய மலர்கள் சூட்டி வணங்குவோம். மலர்களைப் போல் நம் வாழ்க்கையையும் மணக்கச் செய்து அருளுவார் சிவனார்.
சிவ வழிபாட்டுக்கு எப்போதுமே தனித்துவமும் மகத்துவமும் உண்டு என்று சிலாகிக்கிறார்கள் சிவனடியார்கள். ஒவ்வொரு மாதத்துக்கும் சில குணங்கள் உள்ளன. அதேபோல் ஒவ்வொரு மாதத்திலும் சிவனாரை உரிய மலர்கள் சூட்டி வணங்குவதும் வழிபடுவதும் வாழ்வில் நினைத்துப் பார்க்க முடியாத மாற்றங்களையும் ஏற்றங்களையும் தந்தருளும் என்கிறார்கள்.
சித்திரை மாதத்தில் சிவ வழிபாடு செய்யும்போது, பலாசம் எனும் ஒருவகை மலரைக் கொண்டு அர்ச்சித்து வழிபடுவது குடும்பத்தில் ஒற்றுமையையும் நிம்மதியையும் கொடுக்கவல்லது என்பார்கள் பெரியோர். வைகாசி மாதத்தில் புன்னையும் ஆனி மாதத்தில் வெள்ளெருக்கும் கொண்டு அர்ச்சித்து வழிபட்டால் எதிர்ப்புகள் அகலும்.
ஆடி மாதத்தில் அரளி சார்த்தி, ஹரனை வழிபடுவது சிறப்புக்கு உரியது. ஆவணி மாதத்தில் செண்பக மலர்கள் கொண்டு அர்ச்சிப்பதும் அலங்கரிப்பதும் கடன் தொல்லையில் இருந்து நம்மை மீட்டெடுக்கும் என்பது ஐதீகம்.
புரட்டாசி மாதத்தில், கொன்றைப் பூக்களும் ஐப்பசி மாதத்தில் தும்பைப் பூக்களும் கொண்டு சிவலிங்கத் திருமேனியை அர்ச்சித்து வழிபட்டால், தொழில் ஸ்தானமும் உத்தியோக ஸ்தானமும் வலுப்பெறும். தொழிலில் லாபமும் உத்தியோகத்தில் முன்னேற்றமும் அடையலாம் என்கிறார் முத்துக்குமார குருக்கள்.
கார்த்திகை மாதத்தில் கத்திரிப்பூவும் மார்கழி மாதத்தில் பட்டி எனும் ஒருவகைப் பூவும் கொண்டு சிவபெருமானுக்குச் சூட்டி வணங்கி பிரார்த்தனை செய்யவேண்டும். தை மாதத்தில், சிவபெருமானுக்கு தாமரை மலர்கள் கொண்டு அலங்கரிப்பதும் பிரார்த்தனை செய்து கொள்வதும் மிகுந்த பலன்களைக் கொடுக்கவல்லது என்கிறார்.
மேலும் மாசி மாதத்தில், நீலோத்பலம் மலர் கொண்டு சிவனாருக்கு பூஜைகள் செய்வதும் பங்குனி மாதத்தில், மல்லிகை மலர் கொண்டு அர்ச்சித்து வழிபடுவதும் திருமணம் முதலான தடைகளை நீக்கும். வீட்டில் மங்கல காரியங்கள் நடந்தேறும்.
ஒவ்வொரு பூவுக்கும் ஒவ்வொரு விதமான குணங்கள் உள்ளன. அந்தப் பூக்களைக் கொண்டு இறைவனை வணங்கி வந்தால், ஞானம் கிடைக்கப் பெறலாம். இல்லத்திலும் உள்ளத்திலும் எப்போதும் நிம்மதி தவழும். பொருளாதாரத் தடைகள் அகலும் என்கிறார் முத்துக்குமார குருக்கள்.
தென்னாடுடைய சிவனாரை உரிய மலர்கள் சூட்டி, உரிய மாதங்களில் முறையே வழிபடுவோம். வளமும் நலமும் தந்தருளுவார் சிவபெருமான்.
அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் சென்று, சிவலிங்க தரிசனம் செய்வோம். நமசிவாய மந்திரம் சொல்லி வழிபடுவோம். ருத்ரம் பாராயணம் மேற்கொள்வோம். சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமை, மாதந்தோறும் வருகிற திருவாதிரை, மாத சிவராத்திரி, திரயோதசி திதி எனப்படுகிற பிரதோஷம் முதலான நாட்களில், அவசியம் சிவ வழிபாடு மேற்கொள்வது வாழ்வில் உன்னத பலன்களைத் தந்தருளும் என்பது உறுதி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT