Published : 07 Feb 2021 02:15 PM
Last Updated : 07 Feb 2021 02:15 PM
சங்கரன் கோவிலுக்கு வந்து, சங்கரநாராயணரையும் கோமதி அன்னையையும் நாகர் சுனைகளையும் தரிசித்தாலே, கிரக தோஷங்களும் சர்ப்ப தோஷங்களும் விலகும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
சைவமும் வைணவமும் இணைந்த தலம் என்று போற்றப்படுகிற மிக முக்கியமான க்ஷேத்திரம் சங்கரன்கோவில். சங்கர நாராயணர் எனும் திருநாமத்துடன் சிவனாரும் பெருமாளும் இணைந்திருந்து காட்சி தரும் அற்புதமான திருத்தலம் இது.
தென் மாவட்டங்களில் உள்ள மிக முக்கியமான ஆலயங்களில் சங்கரன் கோவிலும் ஒன்று. மிகப்பிரமாண்டமான தலங்களிலும் முக்கியத்துவம் வாய்ந்த தலமாகப் போற்றப்படுகிறது சங்கரன்கோவில்.
சிவனாரும் பெருமாளும் ஒன்றாக நின்ற திருக்கோலத்தில் காட்சி தந்தாலும் இங்கே நாயகிதான் பிரதான தெய்வம். மதுரை மீனாட்சி போல், மயிலை கற்பகாம்பாள் போல, காஞ்சி காமாட்சி போல் திருவேற்காடு கருமாரி போல, நெல்லை காந்திமதி போல, சங்கரன்கோவிலின் நாயகியாகத் திகழ்கிறாள் ஸ்ரீகோமதி அம்பாள்.
காஸ்யப முனிவருக்கு இரண்டு மனைவிகள். அவர்களின் பெயர்கள், விநதை, கத்ரு. இவர்களில் விநதை, கருடனைப் பெற்றெடுத்தாள் என்றும் கத்ரு பாம்புகளைப் பெற்றெடுத்தாள் என்றும் விவரிக்கிறது ஸ்தல புராணம். கருடனுக்கும் பாம்புகளுக்கும் எப்போதுமே தீராத பகையாக இருந்து வந்தது.
அடிக்கடி இரு தரப்புக்கும் சண்டைகள் நடந்து வந்தன. ஒருகட்டத்தில் அனந்தன் முதலான பாம்புகள், கருடனை சரண் அடைந்தன. ஆதிசேஷப் பாம்பு, மகாவிஷ்ணுவுக்குப் படுக்கையானது. வாசுகி எனும் பாம்பு, சிவபெருமானின் கழுத்துக்கு ஆபரணமானது.
சங்கன், பதுமன் இருவரும் பாம்புகள்தான். இந்த இரண்டு பாம்புகளும் சிவா விஷ்ணுவின் பக்தர்களானார்கள். பார்வதிதேவிக்கு, ‘சிவா விஷ்ணுவில் யார் உயந்தவர்’ எனும் கேள்வி வந்தது போல, இவர்களுக்கும் இந்த சந்தேகம் வலுத்தது.
இருவரும் பூமிக்கு வந்தார்கள். அத்திரி முனிவரை தரிசித்தார்கள். அவரிடம் தங்கள் மனதில் இருந்த குழப்பத்தை எடுத்துச் சொன்னார்கள். உடனே அவர், ‘சிவபெருமானே உயர்ந்தவர்’ என பதில் தந்தார். ஆனால் பதுமன் இதை ஏற்கமுடியாமல் இன்னும் குழம்பினார்.
தேவலோகத்துக்கு வந்தார்கள். இந்திரனை வணங்கினார்கள். அவரிடம் தங்களின் சந்தேகத்தைக் கேட்டார்கள். இந்திரனோ, ‘வியாழ பகவானை தரிசித்து உங்கள் சந்தேகத்துக்கு விடை தேடுங்கள்’ என்றார். ‘உமையவள் தவமிருந்து அருள்பெற்ற புன்னைவனத்துக்குச் சென்று அங்கே தீர்த்தம் ஒன்றை ஏற்படுத்தி, இறைவனை வழிபட்டு வாருங்கள், விடை கிடைக்கும்’ என்று தெரிவித்தார்.
அதன்படி, சங்கனும் பதுமனும் பூலோகத்துக்கு வந்தனர். புன்னைவனத்தை அடைந்தனர். சிவனாரை நினைத்து கடும் தவம் மேற்கொண்டனர். அவர்களின் பக்தியிலும் தவத்திலும் மகிழ்ந்து, சிவனாரும் பெருமாளும் சங்கர நாராயணராக திருக்காட்சி தந்தருளினார் என்கிறது புராணம்.
அப்போது, சங்கனும் பதுமனும் சங்கர நாரயணரை வணங்கினார்கள். ‘ஹரியும் சிவனும் ஒன்று’ என்பதை வலியுறுத்தும் வகையில் உணர்த்தும் வகையில் இங்கேயே இருந்து காட்சி தந்து அருள்பாலிக்கவேண்டும்’ என சிவனாரிடம் வேண்டினார்கள். அதன்படியே ஆகட்டும் என்றார் சிவனார்.
‘மேலும் இந்தத் தலம் எங்களின் பெயரைக் கொண்டே அழைக்கவேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார்கள்.
சங்கரன் கோவில் எனும் புண்ணிய க்ஷேத்திரத்தில், நாகர்கள் அமைத்த சுனை, நாகர் சுனை என்று உள்ளது. கோயிலினுள்ளே நடுமண்டபத்தில் உள்ளது நாக சுனை. இந்தத் தலத்தில் நீராடி சிவனாரை வணங்குவது ரொம்பவே விசேஷம். குன்மம் முதலான நோய்கள் நீங்கும். நோய்கள் நீங்குவதுடன் ஆரோக்கியம் மேம்படும்.
நாக சுனையைத் தவிர, அகத்திய தீர்த்தம், அக்னி தீர்த்தம், சூரிய தீர்த்தம், வைரவ தீர்த்தம், கெளரி தீர்த்தம் என பல தீர்த்தங்கள் உள்ளன. மேலும் சிவ சந்நிதியின் நிருதி பகவான் ஆட்சி செய்யும் இந்திர தீர்த்தமும் ஊரின் தென்பகுதியில், ஆவுடைப் பொய்கை எனும் தீர்த்தம் உள்ளது.
தை மாதத்தின் எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் செவ்வாய்க்கிழமைகளிலும் கோமதி அம்பாளை தரிசனம் செய்வது மகத்தான பலன்களைத் தரும். தை மாத கடைசி வெள்ளிக்கிழமையில், இங்குதான் தெப்பத்திருவிழா நடைபெறும்.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ளும் சங்கரன் கோவிலுக்கு வந்து, சங்கரநாராயணரையும் கோமதி அன்னையையும் நாகர் சுனைகளையும் தரிசித்தாலே, கிரக தோஷங்களும் சர்ப்ப தோஷங்களும் விலகும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT