Last Updated : 07 Feb, 2021 11:52 AM

 

Published : 07 Feb 2021 11:52 AM
Last Updated : 07 Feb 2021 11:52 AM

உத்தராயன வாசல்; தட்சிணாயன வாசல்; திருவெள்ளறை திருத்தலத்தின் மகிமை! 

பெருமாளை ஆலயத்தின் சந்நிதியில் சென்று தரிசிக்க உத்தராயன வாசல், தட்சிணாயன வாசல் என்றிருக்கும் ஆலயங்கள் வெகு குறைவு. அப்படி உத்தராயன வாசல், தட்சிணாயன வாசல் என இரண்டு வாசல் சந்நிதிகொண்டிருக்கும் ஆலயங்களில் திருவெள்ளறை திருத்தலமும் ஒன்று.

திருச்சியில் இருந்து துறையூர் செல்லும் வழியில் சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருவெள்ளறை திருத்தலம். இந்தத் தலத்தில் பெருமாளின் திருநாமம் ஸ்ரீபுண்டரீகாக்ஷ பெருமாள். அற்புதமான திருக்கோலத்தில் அழகும் கருணையும் ததும்பக் காட்சி தருகிறார் பெருமாள்.

தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உத்தராயன காலம். ஆனி மாதல் மார்கழி மாதம் வரை தட்சிணாயன காலம். புண்டரீகாக்ஷப் பெருமாளைத் தரிசிக்க இப்படி இரண்டு வாசல்கள் உள்ளன. தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உத்தராயன வாசலில் நுழைந்து சென்று சுவாமியைத் தரிசிக்க வேண்டும்.

புண்டரீகாக்ஷன் என்றால், செந்தாமரைக் கண்ணன் என்று அர்த்தம். மேலும் இந்தத் தலத்துப் பெருமாளுக்கு ஸ்வேதபுரிநாதன் எனும் திருநாமமும் உண்டு. சிபிச்சக்கரவர்த்திக்கு ஸ்வேத வராகராக பெருமாள் திருக்காட்சி தந்தருளினார் என்பதால், இந்தத் தலத்துக்கு ஸ்வேதபுரிநாதன் என்றும் அழைக்கப்படுகிறார் என விவரிக்கிறது ஸ்தல புராணம்.

திருவெள்ளறை திருக்கோயில் 108 திவ்விய க்ஷேத்திரங்களில் ஒன்று. அதுமட்டுமா? ஸ்ரீதேவி நாச்சியாருக்கு திருவெள்ளறை திவ்விய க்ஷேத்திரம் பெருமைமிக்க திருத்தலம் என்று போற்றுகிறார்கள் ஆச்சார்யர்கள். பொதுவாகவே பெருமாளைத் தரிசித்துவிட்டு அதன் பின்னரே தாயாரின் சந்நிதிக்குச் செல்வது போல், சென்று தரிசிப்பது போல் ஆலயங்களின் அமைப்பு இருக்கும். வழிபாடுகளும் அப்படித்தான் இருக்கும். ஆனால், திருவெள்ளறையில் நாச்சியாரை முதலில் தரிசித்த பின்னரே பெருமாளைத் தரிசிக்கும்படியான அமைப்பு உள்ளது. அதேபோல், உத்ஸவத்தின் போது திருப்பல்லக்கில் பவனி வரும் வைபவத்தில், திருவெள்ளறையில், முதல் தாயார் பல்லக்கில் செல்வார். பிறகு தாயாரை அடியொற்றி பெருமாள் பின் தொடர்ந்து செல்வார். இது வேறு எந்தத் தலத்திலும் காணக்கிடைக்காத ஒன்று என சிலிர்ப்புடன் தெரிவிக்கின்றனர் பக்தர்கள்.

திருவெள்ளறைத் திருத்தலத்தில் பலிபீடம் ரொம்பவே விசேஷம். எல்லா ஆலயங்களிலும் பலிபீடமும் துவஜஸ்தம்பமும் இருக்கும். இந்தக் கோயிலிலும் உள்ளது. இந்த பலிபீடத்துக்கு உள்ளே சித்தபுருஷர் ஒருவரின் திருச்சமாதி அமைந்திருக்கிறது என்றும் அதனால் இந்த பலிபீடத்தின் முன்னே நின்று கொண்டு, கண்கள் மூடி பிரார்த்தனை செய்வது நினைத்த காரியத்தைச் செவ்வனே நடந்தேற்றித் தரும் என்பது ஐதீகம்.

பெரியாழ்வாரும் திருமங்கையாழ்வாரும் மங்களாசாசனம் செய்த திருத்தலம் எனும் பெருமை கொண்ட திருவெள்ளறைக்கு வந்து பெருமாளை ஸேவித்து, மனதார வேண்டிக்கொண்டால், மங்கல விசேஷங்கள் வீட்டில் இனிதே நடந்தேறும் என்றும் தொழிலிலும் கலையிலும் அபிவிருத்தி ஏற்படும் என்றும் விவரிக்கிறது ஸ்தல புராணம்.
தாயாரின் திருநாமம் ஸ்ரீசெண்பகவல்லித் தாயார். தாயாரின் உத்ஸவருக்கு ஸ்ரீபங்கஜவல்லித் தாயார் எனும் திருநாமம் உண்டு. கிழக்கு நோக்கிய தாயாரை மனமுருகி வேண்டிக்கொண்டால், சகல ஐஸ்வரியங்களையும் தந்தருளுவாள் நாச்சியார். இல்லத்தில் சுபிட்சம் வந்து சேரும் என்பது ஐதீகம்.

மணிகர்ணிகா, க்ஷீரம், திவ்யகந்த என்பன உள்ளிட்ட ஏழு தீர்த்தங்கள் கொண்ட திருத்தலம் திருவெள்ளறை.

பல்லவ மன்னன் நந்திவர்மன் காலம் தொடங்கி சோழர்கள், விஜயநகரப் பேரரசை ஆட்சி செய்த நாயக்கர்கள் என பலராலும் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட ஆலயம் எனும் பெருமை மிக்கது திருவெள்ளறைத் தலம். அழகிய வேலைப்பாடுகளுடன் பிரமாண்ட தூண்களுடன் கம்பீரமாகத் திகழ்கிறது.

திருவெள்ளறை புண்டரீகாக்ஷப் பெருமாளை, புதன்கிழமைகளிலும் சனிக்கிழமைகளிலும் ஏகாதசி முதலான நாட்களிலும் வந்து வணங்கினால், மும்மடங்குப் பலன்களை தந்தருளுவார் செந்தாமரைக் கண்ணன் என்று போற்றுகிறார்கள் பக்தர்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x