Published : 05 Feb 2021 11:26 PM
Last Updated : 05 Feb 2021 11:26 PM
அனகாபுத்தூர் அகத்தீஸ்வரர் பெருமானை தரிசித்தால், விரைவில் திருமண பாக்கியம் கைகூடும் என்பது ஐதீகம். வெள்ளிக்கிழமைகளில், ஸ்ரீஆனந்தவல்லி அம்பாளுக்கு அர்ச்சித்து வணங்கி வழிபட்டு வந்தால், விரைவில் கல்யாண வரம் கைகூடும். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும் என்கிறார்கள் பக்தர்கள்.
சென்னை பல்லாவரத்துக்கு அருகில் உள்ளது அனகாபுத்தூர். இங்குதான், அற்புதமாகக் கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீஅகத்தீஸ்வரர். அற்புதமான திருத்தலம் என்று போற்றப்படுகிறது அகஸ்தீஸ்வரம் திருக்கோயில்.
சிவனாருக்கும் உமையவளுக்கும் திருமணம் நடைபெற்ற போது, தென் பகுதி உயர்ந்தது. வடபகுதி தாழ்ந்தது என்கிறது புராணம். சிவனாரின் திருமண வைபவத்தைத் தரிசிக்க வந்த கூட்டத்தால், இப்படியானதாக விவரிக்கிறது புராணம்.
இந்தத் தலத்தின் இறைவனின் திருநாமம் ஸ்ரீஅகத்தீஸ்வரர். அம்பாளின் திருநாமம் ஸ்ரீஆனந்தவல்லி. இந்தப் பக்கம் உயர்ந்து, அந்தப் பக்கம் தாழ்ந்ததை சமன்படுத்த அகத்திய முனிவரை சிவனார் அனுப்பிவைத்தார். இதையொட்டி, அகத்தியர் பெருமான் பல இடங்களில் பூஜைகள் செய்தார். அப்படியான பல தலங்களில், அனகாபுத்தூர் திருத்தலமும் ஒன்று.
யானைகள் பாதுகாக்கப்பட்டு வந்த தலம் என்பதால் யானைகாபுத்தூர் என்று இந்த ஊருக்குப் பெயர் அமைந்தது. பின்னாளில், இதுவே அனகாபுத்தூர் என மருவியதாகச் சொல்கிறது ஸ்தல புராணம்.
மூன்று நிலை கோபுரத்துடன் அற்புதமாகத் திகழ்கிறது ஆலயம். இங்கே உள்ள பைரவர் விசேஷம். தேய்பிறை அஷ்டமியில், பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. அதேபோல் இங்கே உள்ள சனீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
முக்கியமாக, சப்தகன்னியருக்கு சந்நிதிகள் அருகில் அமைந்திருப்பது கூடுதல் விசேஷம்.
அனகாபுத்தூர் அகத்தீஸ்வரர் பெருமானை தரிசித்தால், விரைவில் திருமண பாக்கியம் கைகூடும் என்பது ஐதீகம். வெள்ளிக்கிழமைகளில், ஸ்ரீஆனந்தவல்லி அம்பாளுக்கு அர்ச்சித்து வணங்கி வழிபட்டு வந்தால், விரைவில் கல்யாண வரம் கைகூடும். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும் என்கிறார்கள் பக்தர்கள்.
அனகாபுத்தூர் அகத்தீஸ்வரர் பெருமானையும் ஆனந்தவல்லி அம்பாளையும் தரிசிப்போம். இம்மையிலும் மறுமையிலும் நம்மைக் காத்தருள்வார்கள் அம்மையும் அப்பனும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT