Published : 04 Feb 2021 10:51 AM
Last Updated : 04 Feb 2021 10:51 AM
தேய்பிறை அஷ்டமியில், பைரவரை தரிசிப்போம். பைரவருக்கு செந்நிற மலர்கள் சூட்டி வேண்டிக்கொள்வோம். முக்கியமாக, தெருநாய்களுக்கு பிஸ்கட் வழங்குவோம்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தெய்வங்களுக்கு உரிய தினங்களாக போற்றப்படுகிறது. வணங்கப்படுகிறது. கொண்டாடப்படுகிறது.
ஏகாதசி திதி என்பது பெருமாளுக்கு உரிய நாளாகப் போற்றப்படுகிறது. அதேபோல் சஷ்டி திதி முருகக் கடவுளுக்கு உரிய நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்தநாட்களில் பெருமாளுக்கும் முருகப்பெருமானுக்கும் விரதம் மேற்கொள்வார்கள் பக்தர்கள்.
பஞ்சமி திதி என்பது சப்தமாதர்களில் ஒருத்தியான வாராஹி தேவிக்கு உரிய நாளாகப் போற்றப்படுகிறது. இந்த நாளில் வாராஹி தேவியின் மூலமந்திரம் சொல்லி, செவ்வரளி மாலை சார்த்தி வணங்குவார்கள் பக்தர்கள்.
இதேபோல், அஷ்டமி திதி என்பது பைரவருக்கு உகந்தநாள். கலியுகத்துக்கு காலபைரவர் என்பார்கள். பைரவர் என்பவரை மகா வலிமை கொண்டவர் என்றும் தீயசக்திகளையும் தீயவர்களையும் துவம்சம் செய்வார் என்றும் அநீதியை அழித்தொழித்து தர்மத்தை நிலைநாட்டுவார் என்றும் சொல்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
அனைத்து சிவாலயங்களிலும் பைரவருக்கு சந்நிதி அமைந்திருக்கிறது. பைரவர், ஆலயத்துக்குப் பாதுகாவலர் என்பார்கள். பைரவரை தொடர்ந்து வணங்கிவந்தால், மனக்கிலேசம் விலகும் என்றும் மனதில் உள்ள குழப்பங்கள் அனைத்தும் விலகும் என்றும் தெரிவிக்கிறார்கள் பக்தர்கள்.
காலபைரவருக்கு செந்நிற மலர்கள் உகந்தவை. செவ்வரளி மலர்கள் சூட்டி பைரவரை வணங்குவது ரொம்பவே விசேஷம்.
அஷ்டமி என்பதே பைரவருக்கு உகந்த நாள்தான். அதிலும் தேய்பிறை அஷ்டமி என்பது பைரவருக்கு மிக மிகச் சிறப்புக்கு உரிய தினம். அவரை அஷ்டமித் திருநாளில், மனதார வழிபடுவோம்.
இன்று தேய்பிறை அஷ்டமி (4ம் தேதி). குருவாரமும் அஷ்டமியும் இணைந்தநாளில், பைரவரை தரிசிப்போம். செவ்வரளி மாலை, வடைமாலை சார்த்தி வேண்டிக்கொள்ளலாம். மிளகு கலந்த சாதம் நைவேத்தியம் செய்து வணங்கலாம். எதிர்ப்புகளையெல்லாம் அழிப்பார். தீயசக்திகளையும் துர்குணங்களையும் விலக்கி அருளுவார் பைரவர். முக்கியமாக தெருநாய்களுக்கு உணவளிப்போம். பிஸ்கட்டாவது கொடுப்போம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT