Last Updated : 02 Feb, 2021 06:06 PM

 

Published : 02 Feb 2021 06:06 PM
Last Updated : 02 Feb 2021 06:06 PM

குலம் தழைக்கச் செய்யும் சப்த கன்னியர் வழிபாடு! 

சப்தகன்னியரை வழிபாடு செய்து, சுமங்கலிகளுக்கு மங்கலப் பொருட்கள் வழங்கினால், நம் சந்ததி சிறக்கும் என்றும் தாலி பாக்கியம் நிலைக்கும் என்றும் குலம் தழைக்கும் என்றும் பக்தர்கள் சிலிர்ப்புடன் தெரிவிக்கின்றனர்.

பெண் தெய்வ வழிபாட்டிலும் சக்தி வழிபாட்டிலும் கிராம தெய்வ வழிபாடுகளிலும் சப்த கன்னியருக்கு முக்கியமான இடம் உண்டு. பிராம்மி, மகேஸ்வரி, கெளமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டீஸ்வரி என ஏழு தெய்வங்களும் சப்த கன்னியர் என்று போற்றுகிறது புராணம். இந்த ஏழு தேவியரும் தீமையை அழிக்கவும் தர்மத்தை நிலைநாட்டவும் வந்தவர்கள் என்று போற்றுகின்றன ஞானநூல்கள்.

இவர்களை சப்த கன்னியர் என்று போற்றுகிறோம். நமக்கெல்லாம் அன்னையாகத் திகழ்பவர்கள் என்பதால், சப்த மாதர்கள் என்றும் வணங்குகிறோம்.

சப்தமாதர்களுக்கு என தனிக்கோயில் இல்லை. அதேசமயம் சோழப் பேரரசு காலத்தில் ஆலயங்களில் சப்த மாதர்களுக்கு சந்நிதி எழுப்பப்பட்டு வழிபடுவது தொடங்கியது. கிராமக் கோயில்களிலும் எல்லை தெய்வம் குடிகொண்டிருக்கும் கோயில்களிலும் சப்தமாதர்களுக்கு சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, காவல்தெய்வங்களாக வழிபட்டு வருகிறார்கள் பக்தர்கள்.

ஏழு தெய்வங்களும் ஒவ்வொரு கட்டத்தில், அவதரித்து அசுரர்களை அழித்தவர்கள் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

வழிபாடுகளில் சிவா, விஷ்ணு, பிரம்மா என மூன்று தெய்வ வழிபாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இவர்களில் சக்தி வழிபாடும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் போற்றப்படுகிறது. அந்தகாசுரன் எனும் அரக்கனிடம் இருந்து எண்ணற்ற அரக்கர்கள் வெளிப்பட்டு உலகை உண்டு இல்லையென்று இம்சை பண்ணிக்கொண்டிருந்தார்கள். அதன் பொருட்டு, அவர்களை அழிப்பதற்காகவே யோகேஸ்வரி எனும் சக்தியை தோற்றுவித்தார். அவள், மகேஸ்வரி எனும் சக்தியை உண்டுபண்ணினார். பிரம்மதேவர் உருவாக்கிய சக்தியை, பிராம்மி எனப் போற்றுகிறது புராணம். மகாவிஷ்ணு, நாராயணி எனும் சக்தியைப் படைத்தார். முருகப்பெருமான் கெளமாரியை தோற்றுவித்தார் (முருக வழிபாட்டுக்கு கெளமார வழிபாடு என்றே பெயர்). ஸ்ரீவராக மூர்த்தி வராகியையும் இந்திரன் இந்திராணியையும் தோற்றுவித்தார்கள். யமதருமன் சாமுண்டி தேவியைத் தோற்றுவித்தார்கள் என்றும் புராணம் விவரிக்கிறது.

அந்தகாசுரனை அழிக்கும் பொருட்டு தோன்றியவர்களே சப்த கன்னியர் என்றும் சும்பநிசும்ப அசுர சகோதரர்களை அழித்தொழிப்பதற்காக அவதாரம் எடுத்தவர்கள் சப்தகன்னியர் என்றும் பரமேஸ்வரனின் பணிப்பெண்களாக இருந்தவர்களே சப்தகன்னியர் என்றும் புராணங்கள் விளக்குகின்றன.

சப்த கன்னியர் என்றும் சப்த மாதர்கள் என்றும் போற்றப்படுகிற ஏழு தெய்வங்களையும் சக்தியின் இருப்பிடமாகவே வணங்குகிறார்கள் பக்தர்கள். ஆதிகாலத்தில், சப்த கன்னியர் வழிபாடு, எல்லையைக் காக்கின்ற தெய்வமாகவே போற்றி வணங்கப்பட்டது என்றும் குலத்தைத் தழைக்கச் செய்யவும் விவசாயத்தை செழிக்கச் செய்யவுமான படையல் போடுகிற பூஜையாகவும் சப்த கன்னியர் வழிபாட்டு மேற்கொள்ளப்பட்டதாகவும் சொல்கிறார்கள் ஆய்வாளர்கள்.

சப்த கன்னியருக்கு, ஆலயங்களில் சந்நிதிகள் அமைந்திருப்பதும் வெகு குறைவு. சப்தகன்னியரில் மிக முக்கியமான தெய்வமாக வராஹி போற்றப்படுகிறாள். அதேபோல், கெளமாரியும் வணங்கப்படுகிறாள். கெளமாரியம்மனுக்கு கிராமங்களில் தனிச்சந்நிதியும் தனிக்கோயிலுமே அமைக்கப்பட்டுள்ளது. மகேஸ்வரி என்பவள், சிவாலயங்களில் உள்ள அம்பாள் அம்சம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

விதை நெல் வைத்து சப்த கன்னியரை வழிபடும் முறை இன்றைக்கும் கிராமங்களில் மிக முக்கியமான பூஜையாக அமைந்திருக்கிறது. சப்தகன்னியர் அமைந்திருக்கும் ஆலயங்களுக்குச் செல்லும்போது, சப்தமாதர்களையும் மனதார வேண்டிக்கொண்டால், தனம் தானியம் பெருக்கித் தந்தருள்வார்கள் தேவியர் என்று போற்றுகிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

அதேபோல், சப்தகன்னியர் வழிபாடு செய்து, சுமங்கலிகளுக்கு மங்கலப் பொருட்கள் வழங்கினால், நம் சந்ததி சிறக்கும் என்றும் தாலி பாக்கியம் நிலைக்கும் என்றும் வம்சம் தழைக்கும் என்றும் பக்தர்கள் சிலிர்ப்புடன் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x