Published : 02 Feb 2021 03:54 PM
Last Updated : 02 Feb 2021 03:54 PM
சுவாமிமலை திருத்தலத்துக்கு வருவோருக்கெல்லாம் சுவாமிநாத சுவாமியின் அருளும் பூமாதேவியின் அருளும் கிடைக்கப் பெறும் என்கிறது புராணம்.
புராணங்களில் திருவேரகம் என்று போற்றப்படுகிறது சுவாமிமலை திருத்தலம். திருவேரகம் என்றும் சுவாமிமலை என்றும் அன்றைக்கும் சொல்லப்பட்டு வந்திருப்பதற்கு அருணகிரிநாதரும் அவரின் பாடல்களுமே சாட்சியாக இருக்கின்றன.
சுவாமிமலை திருத்தலத்துக்கு வந்த அருணகரிநாதர், இங்கே உள்ள முருகப் பெருமானைத் தரிசித்து, அவரின் அழகிலும் அருளிலும் மனதைப் பறிகொடுத்தார். அப்போது, 38 பாடல்களை முருகப்பெருமான் மீது பாடியுள்ளார். திருப்புகழில் சுவாமிமலை குறித்த பாடல்கள் இன்றைக்கும் இருக்கின்றன. அதில் சில பாடல்களில் திருவேரகம் என்றும் பாடியிருக்கிறார். சுவாமிமலை என்றும் பாடியிருக்கிறார்.
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழில் அமைந்துள்ள சுவாமிநாத சுவாமியின் பாடல்களை மனம் ஒருமித்து பாடிப்பாராயணம் செய்து வந்தால், நிலைத்த புகழை அடையலாம். இல்லத்தில் ஒற்றுமை மேலோங்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
இதேபோல நக்கீரர் அருளிய ‘திருமுருகாற்றுப்படை’ யும் சக்தி மிக்க பாடல்களாக முருகப்பெருமானின் சாந்நித்தியத்தைச் சொல்லும் பாடல்களாக போற்றப்படுகின்றன. ‘திருமுருகாற்றுப்படை’யில் 177 முதல் 10 வரையிலான பாடல் வரிகள், சுவாமிமலை திருத்தலத்தைக் குறித்துப் பாடப்பட்டிருக்கின்றன.
கும்பகோணத்தில் இருந்து சுமார் ஆறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சுவாமிமலை. மலையே இல்லாத சோழதேசத்தில், சிறு மலையில் அமைக்கப்பட்டுள்ள அற்புதமான ஆலயம் சுவாமிமலை. முருகப்பெருமானின் ஆறுபடைவீடுகளில், நான்காம்படை வீடு எனத் திகழ்கிறது சுவாமிமலை.
பிரம்மா வழிபட்டு அருள்பெற்ற திருத்தலம் சுவாமிமலை. மேலும் பூமாதேவி தவமிருந்து வரம் பெற்ற க்ஷேத்திரம் என்றும் ஸ்தல புராணம் தெரிவிக்கிறது. சுகப்பிரம்ம ரிஷி, இந்திரன், மன்னன் வரகுண பாண்டியன் முதலான மன்னர்களும் சுவாமிநாத சுவாமியை வணங்கி வரம் பெற்றுள்ளனர்.
சுவாமிநாத சுவாமியை குலதெய்வமாகக் கொண்டு வழிபடுகிறவர்கள் உள்ளனர். இஷ்டதெய்வமாக ஏற்றுக் கொண்டு, சுவாமிநாத சுவாமியை மனதாரப் பிரார்த்தனை செய்து வேண்டுக்கொண்டால் கண்கண்ட தெய்வமாக இருந்து நம்மைக் காத்தருளுவார் சுவாமிநாத சுவாமி என்று சிலிர்ப்புடன் தெரிவிக்கின்றனர் பக்தர்கள்.
சுவாமிமலை திருத்தலத்தின் விருட்சமாக அமைந்துள்ளது நெல்லிமரம். முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் தலத்தின் விருட்சமாக நெல்லி வந்தது குறித்து ஸ்தல புராணம் விவரித்துள்ளது.
சிவனாரின் நெற்றிக்கண்ணில் இருந்து தீப்பொறிகளாக அவதரித்த ஆறுமுகப்பெருமான், பூமாதேவியின் மடியில், சரவணக் காட்டில் தவழ்ந்தார். ‘என்னுடைய மடியில் தவழவில்லையே’ என வருந்தினாள் பார்வதிதேவி. கோபமுற்றவள், பூமாதேவியைச் சபித்தாள். இந்த சாபத்துடன் விமோசனம் தேடி அலைந்தாள் பூமாதேவி. எத்தனையோ க்ஷேத்திரங்களுக்குச் சென்று விமோசனம் தேடிய பூமாதேவியானவள், நிறைவாக இந்தத் தலத்துக்கு வந்தாள்.
இங்கு வந்து, சுவாமிநாத சுவாமியைத் தரிசித்தவளுக்கு சாபவிமோசனம் கிடைத்தது. குளிர்ந்து போனாள் பூமாதேவி. இங்கிருந்து கிளம்ப மனமே இல்லை அவளுக்கு. பின்னர், தாத்ரி மரமாகி இங்கேயே இன்றைக்கும் நிலைபெற்று வருகிறாள். சுவாமிமலை திருத்தலத்துக்கு வருவோருக்கெல்லாம் சுவாமிநாத சுவாமியின் அருளும் பூமாதேவியின் அருளும் கிடைக்கப் பெறும் என்கிறது புராணம்.
தாத்ரி என்றால் நெல்லி. சுவாமிமலைக்கு வந்து, சுவாமிநாதசுவாமியை வேண்டினால், நிலம், மனை, வீடு தொடர்பான சிக்கல்களும் பிரச்சினைகளும் தீரும் என்கிறார்கள் பக்தர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment