Published : 26 Nov 2015 12:13 PM
Last Updated : 26 Nov 2015 12:13 PM
திபெத்தில் உள்ள லாசாவில் ரகசியமும் புனிதமும் நிறைந்த ஆலயமாக நூற்றாண்டுகளாகப் பராமரிக்கப்படும் லூகாங்கில் உள்ள அற்புதமான சுவரோவியங்களின் புகைப்படங்கள் முதல்முறையாக லண்டனில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ‘வெல்கம் கலெக்ஷன்’ என்ற கண்காட்சிக்கூடத்தில் தான் இந்த ஓவியங்களைக் காட்சிக்கு வைத்துள்ளனர். இந்தக் கண்காட்சிக்கு ‘மைண்ட் ஃபுல்னெஸ்’ என்று பெயர் வைத்துள்ளனர்.
லூகாங் என்றால் ‘தண்ணீர் பிசாசுகளின் ஆலயம்’ என்று அர்த்தம். இந்த ஆலயத்தில் உள்ள ஓவியங்கள் திபெத்திய யோகா மற்றும் தியான நடைமுறைகளை விளக்குவதாகவும் மனநலத்தோடு உடல்நலத்துக்கு இருக்கும் தொடர்பைச் சுட்டிக்காட்டுவதாகவும் உள்ளன. 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த ஓவியங்களோடு தலாய் லாமாக்கள் சேகரித்துவந்த 120 பொருட்களும் இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. சிலைகள், கையெழுத்துப் பிரதிகள், சுருள் சித்திரங்கள், ஒளிப்பட நகல்கள் ஆகியவையும் இதில் அடக்கம். பவுத்த சடங்குகள் சார்ந்த பொருட்களும் சேகரித்துக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
லண்டன் போன்ற பெருநகரங்களில் வசிக்கும் மக்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தம் மற்றும் உடல் நலப்பிரச்சினைகளுக்கும் சரியான தீர்வாக யோகா மற்றும் தியானங்களை இங்கிலாந்து அரசே பரிந்துரைத்துள்ளது. மனதை ஒருமுகப்படுத்தும் செயல்முறையின் மூலம் மனநலம் மேம்படும் என்றும் கூறியுள்ளது.
சுற்றியுள்ள எதையும் கவனிக்காமல் வேகவேகமாக வாழ்க்கையை வாழ்வது சுலபமானதாக இருக்கலாம். தற்பொழுது நடப்பதை ஊன்றிக் கவனிப்பது, எண்ணங்களையும் உணர்வுகளையும் கவனிப்பது, சுற்றியுள்ள உலகை ஆழந்து கவனிப்பது போன்றவற்றால் மனநலம் மேம்படும். மனநலம் என்பது வாழ்க்கை குறித்தும் தனது சுயம் குறித்தும் நன்றாக உணர்வது. விரும்பும் வாழ்க்கையை வாழ்வதற்கான சக்தியைத் தருவது.
வருவாய், சொந்த வீடு, கார், உத்தியோகம் இதுதான் நலமாக இருப்பதற்கான அடையாளங்கள் என்று நீங்கள் கருதலாம். நாம் என்ன செய்கிறோம், என்ன நினைக்கிறோம் என்பதே நமது உள, உடல் நலத்தின் மீது முக்கியமான தாக்கம் செலுத்துகிறது என்பதை ஆய்வுகள் நிரூபித்துள்ளன.
நாம் பார்க்கும் காட்சிகள், முகரும் மணங்கள், கேட்கும் ஒலிகள், ருசிகள் பற்றி விழிப்புணர்வுடன் இருத்தலும் இந்த கணத்திலிருந்து மறுகணத்திற்குப் போகும்போ உண்டாகும் சிந்தனைகள் மற்றும் உணர்வுகளை கூர்ந்து கவனியுங்கள்.
தற்பொழுதில் மனம் மையம் கொண்டிருக்கும்போது இந்த உலகை மேலும் அனுபவிக்கவும் புரிந்துகொள்ளவும் முடியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT