Last Updated : 28 Jan, 2021 03:11 PM

 

Published : 28 Jan 2021 03:11 PM
Last Updated : 28 Jan 2021 03:11 PM

தைப்பூசம் ஸ்பெஷல்; கவலைகள்  தீர்ப்பான் கந்தன்!  வலிமையைத் தரும் கந்தசஷ்டி கவசம்!  

கந்தனுக்கு அரோகரா கோஷம் எழுப்பி, தைப்பூச நன்னாளில், காலையும் மாலையும் விளக்கேற்றுங்கள். முருகப்பெருமானை வழிபடுங்கள். சொந்த வீடு மனை யோகத்தைத் தந்தருளுவார் வடிவேலன் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

கந்தசஷ்டி கவசத்தை இயற்றி அருளியவர் பாலதேவராய சுவாமிகள். இன்றளவும் கந்த சஷ்டி கவசத்தைப் பாராயணம் செய்து ஆறுமுகப் பெருமானை, வள்ளி மணாளனை, வெற்றி வடிவேலனை வணங்குகிறோம். போற்றுகிறோம். பிரார்த்திக்கிறோம்.

பாலதேவராய சுவாமிகள் கந்த சஷ்டி கவசத்தை உருவாக்கிய சூழ்நிலை உணர்ச்சிபூர்வமானது. ஒருமுறை, அவர் கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்டார். சிகிச்சைகள் பல மேற்கொண்டும் அவரது வயிற்றுவலி குணமாகவில்லை. வெறுத்துப் போனவர் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவோடு திருச்செந்தூருக்கு வந்தார். அவர் அங்கு வந்த நேரம் கந்த சஷ்டி விழா ஆரம்பித்திருந்தது. ஏற்கெனவே பாலதேவராய சுவாமிகள் தீவிர முருக பக்தர் என்பதால் அந்த திருவிழாக் காட்சிகளைப் பார்த்து சற்று மனம் மாறினார்.

விழா முடிந்த பிறகு தற்கொலை செய்துகொள்வோம் என்று நினைத்தவர், முருகப் பெருமானை வேண்டி சஷ்டி விரதம் இருக்கத் தொடங்கினார். முதல் நாள் செந்தூர் கடலில் புனித நீராடி முருகனை வழிபட்டார். கோயில் மண்டபத்தில் கண் மூடி தியானத்தில் அமர்ந்தார். அவருக்கு முருகப்பெருமான் காட்சி தந்து அருள் புரிந்ததுடன், தனக்காக சஷ்டி கவசம் பாடும் திறனையும் ஞானத்தையும் அவருக்கு அளித்தார். அடுத்த நிமிடமே பாலதேவராய சுவாமிகள் மனதில் பக்தி வெள்ளம் பிரவாகம் எடுத்து ஓடியது.

சஷ்டியை நோக்க சரவண பவனார் சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்... என்று துவங்கும் திருச்செந்தூர் திருத்தலத்திற்கான சஷ்டி கவசத்தை முதன் முதலாக எழுதி முடித்தார்.

அதற்கு அடுத்த 5 நாட்களுக்கு, முருகப்பெருமானின் மற்ற வீடுகளான திருப்பரங்குன்றம், பழநி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை திருத்தலங்களுக்கான சஷ்டிக் கவசங்களை இயற்றினார். ஆறுபடை வீட்டுக்கும் சஷ்டி கவசம் இயற்றி முடிக்கும் போது, அவரை வாட்டி வந்த வயிற்றுவலி முற்றிலும் காணாமல் போய் இருந்தது. கந்த சஷ்டி கவசம் இயற்றுவதற்காகவே தன்னை முருகப்பெருமான் சோதித்து திருவிளையாடல் புரிந்துள்ளார் என அறிந்த சுவாமிகள் மிகுந்த பரவசம் ஆனார் என்று தெரிவிக்கிறது திருச்செந்தூர் புராணம்.

தைப்பூசத் திருநாளில், தை வெள்ளிக்கிழமையில் முருகப்பெருமானைப் போற்றி வணங்கும் வகையில், வேலவனை வணங்குவோம். தீப தூப ஆராதனைகள் செய்வோம். தீயசக்திகளை விரட்டியடிப்பான் வேலவன். கண்ட பிணிகளை நீக்கி அருளுவான் கந்தகுமாரன்.
.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x