Published : 27 Jan 2021 02:15 PM
Last Updated : 27 Jan 2021 02:15 PM
தைப்பூச நன்னாளில் முருக வழிபாடு செய்வது எண்ணற்ற பலன்களைத் தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். தைப்பூச நாளில், வீட்டில் விளக்கேற்றி, கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து வேண்டிக்கொண்டால், எதிர்ப்புகள் தவிடுபொடியாகும். எதிரிகள் தொல்லை ஒழியும். தடைப்பட்ட காரியங்கள் இனிதே நடந்தேறும். வாழ்வில் ஏற்றங்களையும் மாற்றங்களையும் தந்தருளுவார் முருகக்கடவுள் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.
முருகக் கடவுளைக் கொண்டாடவும் வழிபடவும் பல விழாக்கள் இருக்கின்றன. விசேஷங்கள் ஏராளம் அமைந்துள்ளன. ஆடிக் கிருத்திகையும் ஐப்பசி சஷ்டியும் வைகாசி விசாகமும் பங்குனி உத்திரமும் என முருகப்பெருமானுக்கு திருவிழாக்கள் ஏராளம். இந்த விழாக்களில் மிக முக்கியமானது தைப்பூசத் திருவிழா.
தை மாதத்தில் வருகிற பூசத் திருநாள் தைப்பூச விழாவாக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்தநாளில் முருகப்பெருமானின் ஆறுபடைவீடுகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் விமரிசையாக நடைபெறும். அதுமட்டுமின்றி, முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் தலங்களில் விசேஷ பூஜைகள் நடைபெறும்.
உலகெங்கும் உள்ள முருகக் கடவுளின் ஆலயத்தில் தைப்பூசத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் யுத்தம் மூண்டது. அசுரர்களின் அசுர பலத்தால் தேவர்களால் வெல்லமுடியாத நிலை ஏற்பட்டது. இதில் கலங்கித் தவித்த தேவர்கள் அனைவரும் சிவனாரைச் சரணடைந்து முறையிட்டனர். அவர்களின் கோரிக்கையை ஏற்ற சிவபெருமான், தன்னில் இருந்து உருவாக்கியவரே கந்தபெருமான். ஈசனின் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகள் வந்தன. ஆறு தீப்பொறிகளும் ஆறு குழந்தைகளாக அவதரித்தன என்கிறது கந்தபுராணம்.
ஆறு குழந்தைகளையும் கார்த்திகைப் பெண்கள் வளர்த்தனர். அதனால்தான் முருகப்பெருமானுக்கு கார்த்திகேயன் எனும் திருநாமம் அமைந்தது. அந்த ஆறு குழந்தைகளும் ஆறுமுகமாகத் தோன்றி ஒருமுகமாக காட்சி தந்தது தைப்பூசத் திருநாளில்தான் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
அன்னை பார்வதிதேவியானவள், ஞானமே உருவெனக் கொண்டு முருகப்பெருமான் தண்டாயுதபாணியாகத் திகழும் பழநியம்பதியில், வேல் வழங்கியது தைப்பூசத் திருநாளில்தான் என்கிறது பழநி ஸ்தல புராணம்.
எல்லா முருகன் கோயில்களிலும் தைப்பூச விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டாலும் பழநி திருக்கோயிலில் தைப்பூசத் திருவிழாவானது வெகு விமரிசையாக நடைபெறுகின்றன.
தைப்பூசத்தின் முக்கியமான சிறப்பம்சம்... பாதயாத்திரை. தைப்பூசத்தின் போது பழநி முருகப்பெருமானைத் தரிசிக்க, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொள்வார்கள். இதையொட்டி மார்கழி மாதம் தொடங்கும்போதே, விரதம் மேற்கொள்வார்கள். கழுத்தில் துளசி மாலையும் பச்சை நிற வேஷ்டியும் அணிந்துகொண்டு விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள், தைப்பூசத்துக்கு முன்னதாக, அவரவர்களின் ஊர்களில் இருந்து பாதயாத்திரையாக பழநிக்கு வந்து, தைப்பூச நன்னாளில், முருகப்பெருமானை கண் குளிரத் தரிசிப்பார்கள்.
பழநி மலைக்கு அருகில் உள்ள இடும்பன் சந்நிதியிலும் பழநியில் உள்ள சரவணப் பொய்கையிலும் முடி காணிக்கை முதலான நேர்த்திக்கடனைச் செலுத்துவார்கள் பக்தர்கள்.
மேலும் தைப்பூசத்தையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தர்கள், காவடி எடுத்தும் பால்குடம் எடுத்தும் வருவார்கள் பக்தர்கள்.
தைப்பூசத்தையொட்டி, பாதயாத்திரையாகவும் விரதம் மேற்கொண்டும் விரதம் இருந்து பக்தர்கள் முருகக் கடவுளைத் தரிசிப்பார்கள். அதேபோல், தைப்பூச நன்னாளின்போது, விரதம் மேற்கொள்வார்கள் பக்தர்கள். அருகில் உள்ள முருகப்பெருமான் கோயிலுக்குச் சென்று தரிசிப்பார்கள்.
இப்படி தைப்பூச நன்னாளில் முருக வழிபாடு செய்வது எண்ணற்ற பலன்களைத் தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். தைப்பூச நாளில், வீட்டில் விளக்கேற்றி, கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து வேண்டிக்கொண்டால், எதிர்ப்புகள் தவிடுபொடியாகும். எதிரிகள் தொல்லை ஒழியும். தடைப்பட்ட காரியங்கள் இனிதே நடந்தேறும். வாழ்வில் ஏற்றங்களையும் மாற்றங்களையும் தந்தருளுவார் முருகக்கடவுள் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT