Last Updated : 27 Jan, 2021 01:10 PM

 

Published : 27 Jan 2021 01:10 PM
Last Updated : 27 Jan 2021 01:10 PM

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தைத் தேரோட்டம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

திருச்சி

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோயில் தைத் தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தை மாதத் தேர்த் திருவிழா ஜன.19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 4-ம் நாளான ஜன.22-ம் தேதி தங்கக் கருட வாகனத்தில் நம்பெருமாள் முக்கிய, உத்திர வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவின் 8-ம் நாளான நேற்று மாலை, தங்கக் குதிரை வாகனத்தில் நம்பெருமாள் புறப்பட்டு, உத்திர வீதிகளில் வலம் வந்து வையாளி கண்டருளினார்.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று (ஜன.27) காலை நடைபெற்றது. இதையொட்டி, நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் அதிகாலை 3.45 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு, தைத் தேர் மண்டபத்துக்கு அதிகாலை 4.30 மணிக்கு வந்தார். தொடர்ந்து, காலை 4.45 மணி முதல் 5.15 மணி வரை ரதரோஹணம் (தனுர் லக்னத்தில்) நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னர், அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் எழுந்தருளினார். காலை 6 மணிக்கு பக்தர்கள் ரங்கா, ரங்கா முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

4 உத்திர வீதிகள் வழியாகச் சென்ற தேர், காலை 10 மணிக்கு நிலையை வந்தடைந்தது. அங்கு பக்தர்கள் தேர் முன்பு தேங்காய் உடைத்து, விளக்கு, சூடம் ஏற்றி பெருமாளை வழிபட்டனர்.

நாளை (ஜன.28-ம் தேதி) சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நிறைவு நாளான ஜன.29-ம் தேதி மாலை 3 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு, மாலை 3.30 மணிக்கு ரங்கவிலாச மண்டபம் வருகிறார். அங்கிருந்து இரவு 7 மணிக்குப் புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு வாகன மண்டபம் சென்றடைகிறார். வாகன மண்டபத்தில் இருந்து இரவு 8 மணிக்கு ஆளும் பல்லக்கில் நம்பெருமாள் புறப்பட்டு, 4 உத்திர வீதிகளில் வலம் வந்து இரவு 9 மணிக்கு வாகன மண்டபம் வந்தடைகிறார். பின்னர், அங்கிருந்து இரவு 9.30 மணிக்குப் புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானம் சென்றடைவதுடன் தைத் தேர் திருவிழா நிறைவடைகிறது.

விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் வேணு சீனிவாசன், கோயில் இணை ஆணையர் அசோக்குமார் (கூடுதல் பொறுப்பு), உதவி ஆணையர் கந்தசாமி மற்றும் கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x