Published : 26 Jan 2021 09:31 PM
Last Updated : 26 Jan 2021 09:31 PM
மாசாணியம்மனை மனதார வேண்டிக்கொண்டால், எதிர்ப்புகளையும் எதிரிகளையும் ஒழித்து அருளுவாள். தடைகளில் இருந்து மீட்டெடுத்து காரியத்தில் வெற்றியைக் கொடுப்பாள் மாசாணியம்மன்.
பொள்ளாச்சியில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது ஆனைமலை. இங்கே அழகிய சூழலில் அற்புதமாகக் கோயில் கொண்டிருக்கிறாள் ஸ்ரீமாசாணியம்மன். சக்தியுடனும் சாந்நித்தியத்துடனும் திகழும் பிரமாண்டமான ஆலயம் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.
நன்னன் என்ற மன்னன் ஆனை மலைப்பகுதியை ஆட்சி செய்து வந்தார். ஒருநாள்... மன்னரைச் சந்திக்க துறவி ஒருவர் வந்தார். அவரை வரவேற்றார். வணங்கினார். நீதி பிறழாமல் ஆட்சி செய்யும் மன்னருக்கு, மாங்கனி ஒன்றைப் பரிசாகக் கொடுத்தார் துறவி. ’இந்த மாங்கனி அதிசயமானது. அபூர்வமானது. அற்புதம் நிறைந்தது. இந்த மாங்கனியைச் சாப்பிடுங்கள். பின்னர் இந்தக் கொட்டையை ஆற்றில் விட்டுவிடுங்கள். இல்லையெனில் அதுவே ஆபத்தாகிப்போகும்’ என எச்சரித்து ஆசீர்வதித்தார்.
மன்னர், அந்த மாங்கனியைச் சுவைத்தார். அப்படியொரு சுவையை அதுவரை ருசித்ததில்லை மன்னர். சுவையில் மயங்கிய மன்னர், அரண்மனையில் உள்ள நந்தவனத்தில், ஆற்றங்கரையில் கொட்டையை மண்ணில் ஊன்றி நட்டுவைத்து வளர்த்து வரச்செய்தார்.
அதுவும் வளர்ந்தது. காய் விட்டது. கனியும் வருவதற்கான தருணம் நெருங்கியது. அந்தசமயத்தில், ‘மாங்கனியை எவரும் பறிக்காதீர்கள். சாப்பிடாதீர்கள். சாப்பிட்டால் மரண தண்டனை வழங்கப்படும்’ என அரண்மனை ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
இவை அனைத்தும் துறவிக்குத் தெரியவந்தது. மன்னரைப் பார்க்க வந்தார். ’தவறிழைத்துவிட்டீர்கள். அந்தக் கொட்டையை ஏன் வளர்த்தீர்கள்? அதில் இருந்து ஒரேயொரு கனி வரும். அந்தக் கனியை நீங்கள் சாப்பிடக் கூடாது. வேறு எவரும் சாப்பிடவும் அனுமதிக்காதீர்கள். அந்தக் கனி, தெய்வீகப் பெண்ணுக்கானது. ஒருவேளை அந்தப் பெண்ணைத் தவிர்த்து வேறு எவரேனும் சாப்பிட்டால், உங்கள் தேசம் அழிந்துபோகும்’ எனச் சொன்னார்.
இந்தக் காலகட்டத்தில், தாரகன் என்பவர் தன் மகள் தாரணி என்பவளை அழைத்துக் கொண்டு வியாபார நிமித்தமாக ஆனைமலை எனும் பகுதிக்கு வந்தார். நந்தவனத்துக்கு அருகில் உள்ள கரையில் குளிக்கச் சென்றார் தாரணி. அப்போது அந்த மாமரத்தையும் அதில் இருந்த ஒரேயொரு மாங்கனியையும் கண்டார். அதைப் பறித்துச் சாப்பிட்டார்.
இந்த விஷயம் மன்னர் வரை சென்றது. கடுங்கோபம் கொண்ட மன்னர், தாரணியை கைது செய்ய உத்தரவிட்டார். கைது செய்து அழைத்துவரப்பட்ட தாரணிக்கு மரண தண்டனை அறிவித்தார். ‘ஒரு கனியைச் சாப்பிட்டதற்காக மரணதண்டனையா? நான் இறந்தாலும் என் உயிரே பிரிந்தாலும் என்னுடைய ஆத்மா, இந்த மண்ணில், இந்த தேசத்தில்தான் இருக்கும்’ என சூளுரைத்தாள். அவள் கொல்லப்பட்டாள். அவளின் உடலை மயானத்துக்கு எடுத்துச் சென்றார்கள். பின்னர் அவள் தெய்வீகப் பெண்மணி என துறவி என்பதை உணர்ந்த மன்னர், தாரணியின் உருவத்தைப் போலவே மண்ணில் உருவம் அமைத்து வழிபடத் தொடங்கினார்.
மாங்கனிக்காக உயிர் துறந்த அந்தப் பெண், மாங்கன்னி அம்மன் என்று வணங்கப்பட்டாள். பின்னர், மாங்கனி என்றும் அதுவே மாசாணியம்மன் என்றும் மருவியதாகச் சொல்கிறது ஸ்தல புராணம்.
உக்கிர தெய்வமாக இன்றைக்கும் ஆட்சி செய்துகொண்டிருக்கிறாள் மாசாணியம்மன். துர்குணங்களுடன் எவரையேனும் துன்பப்படுத்தியவர்களை ஒருபோதும் பொறுத்துக் கொண்டிருக்கமாட்டாள் மாசாணியம்மன் என்கின்றனர் பக்தர்கள்.
தங்களின் குறைகளை பிரார்த்தனைச் சீட்டு போல் இங்கு வழங்குவது வழக்கம். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், மாசாணியம்மனை அர்ச்சித்து வழிபட்டு, தங்கள் குறைகளை அவளிடம் சமர்ப்பித்து வேண்டிக்கொண்டால் போதும்... எதிரிகளையும் எதிர்ப்புகளையும் ஒழிப்பாள். இன்னல்களையெல்லாம் போக்குவாள். தடைகளையெல்லாம் தகர்த்து காரியத்தில் வெற்றியைத் தந்திடுவாள் அன்னை மாசாணியம்மன்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT