Published : 26 Jan 2021 04:30 PM
Last Updated : 26 Jan 2021 04:30 PM
தைப்பூச திருநாளில், பழநிக்கு பாதயாத்திரை எனும் விஷயத்தை செட்டிநாட்டு மக்கள்தான் தொடங்கினார்கள் என்று சொல்லுவார்கள். சுமார் 180 வருடங்களுக்கு முன்பு, காரைக்குடியைச் சுற்றியுள்ள ஊர்களில் இருந்து பழநி பாதயாத்திரையை இன்றைக்கும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், லட்சக்கணக்கான பக்தர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இறைவனை எப்போது வேண்டுமானாலும் வழிபடலாம். ஆனாலும் குறிப்பிட்ட நாட்களைச் சொல்லி வைத்திருக்கின்றன சாஸ்திரங்களும் புராணங்களும்.
தமிழ்க்கடவுள் முருகப்பெருமானை வணங்குவதற்கும் இப்படி ஏராளமான முக்கியமான நாட்கள் இருக்கின்றன. எல்லா நாளிலும் முருகக் கடவுளை வணங்கலாம். இருந்தாலும் குறிப்பிட்ட நாளில் வணங்குவது இன்னும் வளமும் பலமும் தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
முருகப்பெருமானுக்கு வைகாசி விசாகம் சிறப்பான நாள். அதேபோல் பங்குனி மாதத்தில் வரக்கூடிய உத்திர நட்சத்திரமும் விசேஷமானதாகப் போற்றப்படுகிறது. தை கிருத்திகை நட்சத்திர நாளும் ஆடிக் கிருத்திகை நட்சத்திர நாளும் சிறப்பு வாய்ந்த நாளாக வணங்கப்படுகிறது. இப்படியான முக்கியமான நாட்களில் தை மாதம் வரக்கூடிய பூசம் நட்சத்திர நாளாகும்.
பொதுவாகவே, பூசம் நட்சத்திரம் என்பதே விசேஷமான நட்சத்திரம். அதிலும் தைப்பூசம் என்பது இன்னும் மகத்துவம் வாய்ந்ததான நன்னாள். ஆறு முகங்களாக, ஆறு குழந்தைகளாக இருந்த முருகக் கடவுள் ஒருமுகம் கொண்டு, ஐக்கியமான நாளாக போற்றப்படுகிறது, தைப்பூச நன்னாள்!
ஞானத்தின் வடிவமாக முருகப்பெருமானைச் சொல்கிறது புராணம். ஆணவத்துடன் இருந்த சூரபத்மனை அழிக்கத்தான் வேல் கொண்டு புறப்பட்டான் முருகக் கடவுள். நம் கர்மாவை முடிவுக் கொண்டு வந்து, இம்மையிலும் மறுமையிலும் அருள்பாலிக்கும் குருவாகவும் திகழ்கிறார் கந்த பெருமான்.
அப்படி ஞானத்தை அருளும் முருகப்பெருமானை வழிபடும் திருநாளாக தைப்பூசத் திருநாள் கொண்டாடப்படுகிறது. வழிபடப்படுகிறது. ஆறுபடைவீடுகளில் குடியிருக்கும் முருகப்பெருமான் மட்டுமின்றி அனைத்து சிவாலயங்களிலும் உள்ள முருகக் கடவுளையும் தைப்பூச நாளில் வழிபடலாம் என்றாலும் பழநியம்பதியில், மலை மீது குடியிருக்கும் தண்டாயுதபாணியை தரிசிப்பது இன்னும் சிறப்பானது, விசேஷமானது என்று போற்றுகிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
இதனால்தான் தைப்பூசத் திருநாளின் போது பழநி திருத்தலத்துக்கு பாதயாத்திரை மேற்கொள்கிறார்கள் பக்தர்கள். காவடி எடுத்து வருகிறார்கள். பால் குடம் ஏந்தி வருகிறார்கள். அரோகரா கோஷம் எழுப்பியபடி வருகிறார்கள். அலகு குத்திக்கொண்டு நேர்த்திக்கடன் செலுத்த வருகிறார்கள்.
தைப்பூச திருநாளில், பழநிக்கு பாதயாத்திரை எனும் விஷயத்தை செட்டிநாட்டு மக்கள்தான் தொடங்கினார்கள் என்று சொல்லுவார்கள். சுமார் 180 வருடங்களுக்கு முன்பு, காரைக்குடியைச் சுற்றியுள்ள ஊர்களில் இருந்து பழநி பாதயாத்திரையை இன்றைக்கும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், லட்சக்கணக்கான பக்தர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
பழநி திருத்தலம் என்றில்லாமல், எல்லாக் கோயில்களிலும் முருகக் கடவுளுக்கு சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் விமரிசையாக நடைபெறுகின்றன. அருகில் உள்ள முருகன் கோயிலுக்குச் சென்று தைப்பூசத் திருநாளில், ஞானக் கடவுளை தரிசிப்பதும் பிரார்த்திப்பதும் எண்ணற்ற பலன்களைத் தந்தருளுவார்.
வருகிற 28ம் தேதி தைப்பூசத் திருநாள். வெற்றிவேல் முருகனை வணங்குவோம். ஞானக்குமரனைப் பிரார்த்திப்போம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT