Published : 26 Jan 2021 03:40 PM
Last Updated : 26 Jan 2021 03:40 PM
கும்பகோணம் சாரங்கபாணி ஆலயம், அற்புதமான சிற்ப நுட்பங்களுடன் திகழும் திருத்தலம். சகல பலன்களையும் சகல ஐஸ்வரியங்களையும் தந்தருளும் புண்ணிய க்ஷேத்திரம். சாரங்கபாணி கோயிலுக்கு வந்தால், சங்கடங்கள் தீரும் சந்தோஷம் பெருகும் என்பது ஐதீகம்.
கோயில் நகரம் கும்பகோணத்தில் ஏராளமான கோயில்கள் அமைந்திருக்கின்றன. இந்தக் கோயில்களில் பிரமாண்டமான கோயிலாக ஸ்ரீசாரங்கபாணி ஆலயம் திகழ்கிறது.
இந்தத் தலத்தில் உள்ள பெருமாளின் திருநாமம் ஸ்ரீசார்ங்கபாணி. ஆராவமுதன் எனும் திருநாமமும் உண்டு. சார்ங்கம் என்பது ஒருவித வில். ‘சாரங்கம்’ எனும் வில்லை ஏந்தியபடி பெருமாள் காட்சி தருவதால், சாரங்கபாணி எனும் திருநாமம் அமைந்தது என்கிறது ஸ்தல புராணம்.
இந்தக் கோயிலில், ஸ்ரீசீனிவாச பெருமாளும் சேவை சாதிக்கிறார். திருவேங்கடத்தில் இருந்து இங்கே வந்து எழுந்தருளினார் என்றும் ஸ்ரீநிவாசப் பெருமாள் வேறு ஆராவமுதன் வேறு என்பதை உணர்த்தும் வகையில் காட்சி தந்து அருளுகிறார் என்றும் விவரிக்கிறது ஸ்தல புராணம்.
ஆராவமுதப் பெருமாள் வரப்பிரசாதி. இவருக்கு பால் பாயசம் நைவேத்தியம் செய்து வழிபடுவது ரொம்பவே விசேஷமானது. நன்றாகக் காய்ச்சிய பாலில், சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து, நைவேத்தியம் செய்ய வேண்டும்.
தொடர்ந்து ஆராவமுதப் பெருமாளுக்கு பால் பாயசம் நைவேத்தியம் செய்து மனதாரப் பிரார்த்தனை செய்து கொண்டால், அதில் குளிர்ந்து போகிறார் ஸ்ரீநிவாஸப் பெருமாள். இதனால், சர்வாபீஷ்டங்களையும் நிறைவேற்றி அருளுகிறார் ஸ்ரீநிவாஸப் பெருமாள். சகல ஐஸ்வரியங்களையும் தந்தருளுவார். மோட்சத்தை தந்து அருளுவார் பெருமாள் என்று கும்பகோணம் மகாத்மியம் தனது 51வது அத்தியாயத்தில் விவரித்துள்ளது.
கும்பகோணம் ஸ்ரீசாரங்கபாணிப் பெருமாளை தொடர்ந்து புதன் கிழமைகளிலும் சனிக்கிழமைகளிலும் தரிசித்துப் பிரார்த்தனை செய்து வருவது மகத்தான பலன்களைத் தரும்.
கோயிலின் இன்னொரு சிறப்பு... கருவறையில் ஸ்ரீசாரங்கபாணி குடிகொண்டிருக்கிறார். கருவறையில், ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டிருக்கிறார் குழந்தை கண்ணபிரான். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், கும்பகோணம் ஸ்ரீசாரங்கபாணி கோயிலுக்கு வந்து, குழந்தை கண்ணனை கையில் ஏந்தி மனதாரப் பிரார்த்தனை செய்துகொண்டால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
இங்கே... தாயாரின் திருநாமம் ஸ்ரீகோமளவல்லி நாச்சியார். தனிச்சந்நிதியில், தனிக்கோயில் நாச்சியாராகவே திகழ்கிறார் கோமளவல்லி நாச்சியார். கோமளவல்லி என்றால் பொற்கொடி என்று அர்த்தம். மகாலக்ஷ்மியின் அவதாரத் தலம் எனும் பெருமை மிக்க திருத்தலம் இது. அதனால், மற்ற கோயில்களைப் போல் இல்லாமல், இங்கே தாயாரை தரிசித்துவிட்டுத்தான் பெருமாளைத் தரிசிப்பது என்பது நடைமுறையாக அமைந்துள்ளது.
கும்பகோணம் சாரங்கபாணி ஆலயம், அற்புதமான சிற்ப நுட்பங்களுடன் திகழும் திருத்தலம். சகல பலன்களையும் சகல ஐஸ்வரியங்களையும் தந்தருளும் புண்ணிய க்ஷேத்திரம். சாரங்கபாணி கோயிலுக்கு வந்தால், சங்கடங்கள் தீரும் சந்தோஷம் பெருகும் என்பது ஐதீகம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT