Published : 24 Jan 2021 02:30 PM
Last Updated : 24 Jan 2021 02:30 PM
வாஸ்து புருஷனை இல்லத்தில் வணங்கி வந்தால், வீட்டில் உள்ள திருஷ்டியைப் போக்குவார். மனையில் உள்ள துர்தேவதைகளைத் துரத்தி அருளுவார். தெரிந்தோ தெரியாமலோ, உரிய நியமங்கள் ஏதுமின்றி வீடு கட்டியிருந்தாலும் வாஸ்து புருஷனை தொடர்ந்து வழிபட்டு வந்தால், நம் இல்லத்தில் சகல செளபாக்கியங்களும் தந்து அருளுவார். சகல ஐஸ்வரியங்களையும் கொடுத்து அருளுவார் வாஸ்து புருஷன்!
வாஸ்து புருஷன் தூங்கும் நேரம், விழிக்கும் நேரம் என்று இருப்பதாக சாஸ்திரங்களும் புராணங்களும் விவரிக்கின்றன. பஞ்சாங்கத்தில், வாஸ்து புருஷனின் தூங்கும் நேரம் குறித்தும் விழிக்கும் நேரம் குறித்தும் குறிப்பிடப்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.
வாஸ்து புருஷன் குறித்து விவரிக்கப்படும் புராணத்தைப் பார்ப்போம்.
அண்டகாசுரன் எனும் அரக்கன், தான் செய்த தவத்தாலும் கிடைத்த வரத்தாலும் கர்வத்துடனும் மமதையுடனும் திரிந்தான். தேவர்களையும் முனிவர் பெருமக்களையும் துன்புறுத்தி வந்தான். கலங்கிப் பதறிய தேவர்களும் முனிவர்களும் ஈசனைச் சரணடைந்தனர். அண்டகாசுரனின் அரக்க ஆட்டத்தைச் சொல்லிப் புலம்பினார்கள்.
அவர்களின் வேண்டுகோளை ஏற்ற சிவனார், அண்டகாசுரனுடன் போரிட்டார். அப்போது பரமேஸ்வரனின் திருமுகத்தில் இருந்து வியர்வைத்துளியானது விழுந்தது. அந்தத் துளியில் இருந்து பிரமாண்டமான மனித உருவம் பூதம் போல் கிளம்பி வந்து நின்றது. அந்த உருவம் பசியால் தவித்தது. ‘பசிக்கிறதே பசிக்கிறதே...’ என்று அரற்றிக் கொண்டே இருந்தது. அண்டகாசுரனை அழித்தொழித்தார் சிவனார். ‘இந்த அரக்கனின் உடலைத் தின்று பசியைப் போக்கிக் கொள்’ என்று அருளினார் ஈசன். அரக்கனின் உடலைத் தின்றது அந்த உருவம். ஆனாலும் பசி அடங்கினபாடில்லை.
அந்த பூத உருவம், தேவலோகம் சென்றது. ‘பசி பசி’ என்று கத்தியது. கோபத்தில் கத்தியது. பொருட்களையெல்லாம் போட்டு உடைத்தது. தேவர்களையெல்லாம் மிரட்டியது. தேவர்கள் எல்லோரும் சேர்ந்த அந்த உருவத்தைக் கீழே தள்ளினார்கள். தேவலோகத்தில் இருந்த ஐம்பத்து மூன்று தேவதைகள் குப்புறக் கிடந்த உருவத்தின் மீது ஏறி அமர்ந்துகொண்டனர். துடித்துப் போனது உருவம்.
தேவதைகளிடம் இருந்து காக்க வேண்டும் என பிரம்மாவிடம் தன்னைக் காப்பாற்றும்படி பிரார்த்தித்தது அந்த உருவம். படைப்புக்கடவுளான பிரம்மா, மனமிரங்கினார். அந்த உருவத்தைக் காத்தருளினார். மேலும் அந்த உருவத்துக்கு பதவியையும் வழங்கினார். அவர்தான்... வாஸ்து புருஷன். ’பூமியின் மீது கட்டடம் கட்டுபவர்கள் யாராக இருந்தாலும் உன்னை வணங்க வேண்டும். மனையில் குடியிருப்பவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் உன்னை வணங்க வேண்டும். அவர்களுக்கு உன் சக்தியை, அருளை, சாந்நித்தியத்தை வெளிப்படுத்துவாயாக’ என அருளினார்.
அன்றில் இருந்து வீடு, மனை முதலானவற்றுக்கு வாஸ்து புருஷனே, கண்கண்ட தெய்வமாகத் திகழ்கிறார் என விவரிக்கிறது புராணம்.
வாஸ்து புருஷனை இல்லத்தில் வணங்கி வந்தால், வீட்டில் உள்ள திருஷ்டியைப் போக்குவார். மனையில் உள்ள துர்தேவதைகளைத் துரத்தி அருளுவார். தெரிந்தோ தெரியாமலோ, உரிய நியமங்கள் ஏதுமின்றி வீடு கட்டியிருந்தாலும் வாஸ்து புருஷனை தொடர்ந்து வழிபட்டு வந்தால், நம் இல்லத்தில் சகல செளபாக்கியங்களும் தந்து அருளுவார். சகல ஐஸ்வரியங்களையும் கொடுத்து அருளுவார் வாஸ்து புருஷன்!
நாளைய தினம் 25ம் தேதி திங்கட்கிழமை, வாஸ்து நாள். காலை 10.41 முதல் 11.17 வரை வாஸ்து நேரம். இந்த நாளில், இந்த நேரத்தில், வீட்டை தூய்மைப்படுத்துவோம். வாசலில் மாவிலைத் தோரணம் கட்டுவோம். கோலமிடுவோம். வாஸ்து பகவானை வணங்குவோம்.
பூஜையறையில் விளக்கேற்றுவோம். நம் இஷ்டதெய்வம், குலதெய்வம் முதலான படங்களுக்கு பூக்களிடுவோம். வீட்டின் சகல இடங்களுக்கும் தூப ஆராதனைகள் செய்வோம். மனம் மகிழ்ந்து அருளுவார் வாஸ்து பகவான்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT