Published : 22 Jan 2021 08:58 PM
Last Updated : 22 Jan 2021 08:58 PM
திருச்சியில் இருந்து பெரம்பலூர் செல்லும் வழியில், திருச்சி - சென்னை பைபாஸ் சாலையில் பாடாலூரை அடுத்து உள்ளது ஆலந்தூர் கேட். இங்கிருந்து கிளை பிரிந்து செல்லும் சாலையில், சுமார் 8 கி.மீ. தொலைவு பயணித்தால் செட்டிகுளம் திருத்தலத்தை அடையலாம்.
காஞ்சிபுரம் என்றதும் சைவக்கோயில்களில் ஏகாம்பரேஸ்வரர் கோயில் நினைவுக்கு வரும். பொதுவாகவே, ஏகாம்பரேஸ்வரர் எனும் திருநாமம் சிவனார் குடிகொண்டிருக்கும் கோயில்கள் வெகு குறைவுதான். அப்படியொரு குறைவான கோயில்களில் செட்டிகுளம் தலத்தில் அழகுறக் கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீஏகாம்பரேஸ்வரர்.
முன்னொரு காலத்தில், வியாபாரி ஒருவர் பொருட்களையெல்லாம் எடுத்துக் கொண்டு ஊர் ஊராகச் சென்று வியாபாரம் செய்தார். ஒருநாள், இருட்டத் தொடங்கியதும் கடம்பவனமாக இருந்த பகுதியிலேயே இரவுப் பொழுதைக் கழித்துவிடுவது என தீர்மானித்தார். அன்றிரவு அங்கேயே படுத்துறங்கினார்.
அப்போது ஏதோ சத்தம் கேட்டது. கூர்ந்து கேட்டார். யாரோ பூஜை செய்வது போல் உணர்ந்தார். சப்தம் வந்த இடம் நோக்கிச் சென்றார். அங்கே, சிவலிங்கத் திருமேனிக்கு முனிவர் பெருமக்கள் பூஜை செய்துகொண்டிருந்தனர். பார்த்ததும் பரவசமானார்.
விடிந்ததும் சீராப்பள்ளிக்குச் சென்றார். உறையூரை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த மன்னனிடம் விவரம் சொன்னார். மன்னரும் அமைச்சர்களும் வீரர்களும் அந்த கடம்பவனத்துக்குச் சென்றனர். அங்கே சிவலிங்கம் இருந்த இடம் எதுவெனத் தெரியவில்லை. தேடினார்கள். அப்போது கரும்பை ஏந்தியபடி வந்த வயோதிகர் ஒருவர், ‘நான் காட்டுகிறேன் வாருங்கள்’ என்று மன்னனையும் மற்றவர்களையும் அழைத்துச் சென்றார். ஓரிடத்துக்குச் சென்றதும் வயோதிகர் சட்டென மறைந்து போனார். அங்கே சிவலிங்கம் தோன்றியது.
அப்படி கரும்புடன் வந்தவர், முருகப்பெருமான் என்கிறது ஸ்தல புராணம். பின்னர் கரும்பு முருகனுக்கு அருகில் உள்ள சிறு மலையின் மீது கோயில் எழுப்பப்பட்டது. அதேபோல, சிவலிங்க தரிசனம் கிடைத்த இடத்தில், சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதுவே ஏகாம்பரேஸ்வரர் எனும் திருநாமத்துடன் கோயில் கொண்டதற்கான ஸ்தல வரலாறு என விவரிக்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
அற்புதமான திருக்கோயில். சிவனாரின் திருநாமம் ஸ்ரீஏகாம்பரேஸ்வரர். அம்பாளின் திருநாமம் ஸ்ரீகாமாட்சி அம்பாள். ஊருக்குள் நுழைந்ததுமே பிரமாண்டமாக அமைந்திருக்கிற ஆலயக் கோபுரத்தைத் தரிசிக்கலாம்.
ஏழு நிலை ராஜகோபுரம். அதேபோல், கோபுர வாயிலைக் கடந்து அர்த்த மண்டபம், மகாமண்டபம், கருவறை என மொத்தம் ஏழு வாசல்கள் உள்ளன. ஏழு நிலை கோபுரம் கடந்து, ஏழு வாசல்களைக் கடந்து சென்றால் ஏகாம்பரேஸ்வரரைத் தரிசிக்கலாம் என்றும் இப்படி ஏழு வாசல்களைக் கடந்து சென்று, ஏகாம்பரேஸ்வரை தரிசித்தால், ஏழு ஜென்ம பாவமும் விலகும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT