Published : 22 Jan 2021 01:57 PM
Last Updated : 22 Jan 2021 01:57 PM
நெல்லுக்கு வேலியிட்ட சிவனாருக்கு நடைபெறும் சிறப்பு பூஜையிலும் வழிபாட்டிலும் கலந்துகொண்டு தரிசித்தால், இல்லத்தில் தனம் தானியம் பெருகும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
சோழ தேசத்துக் கோயில்கள் என்பது போல், பாண்டிய நாட்டு திருத்தலங்கள் என்று வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வரிசையில் பாண்டிய தேசத்துக்குக் கோயில்களில் மிக முக்கியமான பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றாகத் திகழ்கிறது நெல்லை நெல்லையப்பர் திருக்கோயில். தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்களில் நெல்லையப்பர் கோயிலும் ஒன்று. ஞானசம்பந்தர் பதிகம் பாடிய திருத்தலம் இது.
ஏழாம் நூற்றாண்டில், திருஞானசம்பந்தர் பெருமான் இந்தத் தலத்துக்கு வந்து பதிகம் பாடியுள்ளார். அவற்றில் திருநெல்வேலியையும் நெல்லையப்பரையும் குறிப்பிட்டுள்ளார். எனவே நெல்லையப்பர் திருக்கோயில், ஏழாம் நூற்றாண்டுக்கு முன்னதாகவே அமைந்த திருத்தலம் என்று போற்றுகிறது ஸ்தல வரலாறு.
வேணுவனம், நெல்வேலி, சாலிநகரம், சாலிவாடி, தாருகாவனம் என பல பெயர்கள் கொண்ட திருநெல்வேலி மிகப் பிரமாண்டமான திருக்கோயிலாகத் திகழ்கிறது.
நடராஜர் பெருமானின் சபைகளில் நெல்லையப்பர் கோயில் தாமிர சபை திருத்தலமாகவும் திகழ்கிறது. நெல்லையப்பர் கோயில் கோபுரமும் காந்திமதி அம்பாள் கோபுரமும் அத்தனை அழகுடன் நேர்த்தியுடன் காட்சி தரும் அழகே அழகு.
ஆசியாவின் மிகப்பெரிய சிவாலயங்களில் ஒன்று எனப் பெருமை கொண்ட நெல்லையப்பர் கோயில், தென் வடக்காக 756 அடி நீளம் கொண்டது. மேற்கு கிழக்காக சுமார் 378 அடி அகலமும் கொண்டு பிரமாண்டமாக அமைந்துள்ளது.
அம்பாளுக்கு தனிக்கோயில், கோபுரம். நெல்லையப்பருக்கு தனிக்கோயில். கோபுரம். இந்த இரண்டு கோயில்களையும் இணைக்கும்விதமாக அழகிய, கலைநுட்பத்துடன் கூடிய கல் மண்டபமும் எழுப்பப்பட்டிருக்கிறது.
திருநெல்வேலி எனப் பெயர் அமைந்ததற்காக காரணமும் சிவனார் நிகழ்த்திய திருவிளையாடலும் புராணத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன.
வேதபட்டர் என்பவர் மிகுந்த சிவபக்தராகத் திகழ்ந்தார். சதாசர்வ காலமும் சிவனையே நினைத்து வணங்கி பூஜித்துக் கொண்டிருந்தார். தங்கத்தை உரசிப் பார்ப்பது போல், வேதபட்டரின் உண்மையான பக்தியை சோதித்துப் பார்க்க திருவுளம் கொண்டார் சிவனார்.
ஈசனின் திருவிளையாடல் தொடங்கியது. கொஞ்சம் கொஞ்சமாக வறுமை நிலைக்குச் சென்றார் வேதபட்டர். சிவபெருமானுக்கு நைவேத்தியம் செய்வதற்குக் கூட உணவிட முடியவில்லை. ஆகவே சிவனாருக்காக தினமும் வீடுவீடாகச் சென்று நெல் சேகரிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார் வேதபட்டர்.
அப்படி சேகரித்த நெல்மணிகளையெல்லாம் வெயிலில் உலரப் போடுவது வேதபட்டரின் வழக்கம். அப்படித்தான் அன்றைக்கும் வீடுவீடாகச் சென்று சேகரித்த நெல்மணிகளையெல்லாம் வெயிலில் உலரப் போட்டிருந்தார். பிறகு ஆற்றில் குளிப்பதற்காகச் சென்றார்.
அந்தசமயத்தில் பெய்யத் தொடங்கியது மழை. வெளுத்து வாங்கிய மழையைக் கண்டு அதிர்ந்து கலங்கினார் வேதபட்டர். ‘அடடா... நெல்லெல்லாம் உலர்த்திவிட்டு வந்தோமே. இப்போது மழையில் அவை நனைந்துவிடுமே...’ என்று பதறிய வேதபட்டர், ஓட்டமும் நடையுமாக வந்தார். மூச்சிரைக்க ஓடிவந்தவர், அங்கே நிகழ்ந்த அதிசயத்தைக் கண்டு பிரமித்துப் போனார்.
அங்கே... எல்லா இடங்களிலும் மழை பெய்து கொண்டிருந்தது. பூமியே நனைந்துகொண்டிருந்தது. ஆனால், மழை நீரால் நெல்மணிகள் கொண்டு செல்லமுடியாதபடி, ஒரு வேலி போடப்பட்டிருப்பதையும் அங்கே மட்டும் மழை இல்லாமல், வெயில் அடித்தபடி இருந்ததையும் கண்டு அதிசயித்துப் போனார் வேதபட்டர்.
நெல்லுக்கு வேலியிட்டு காத்தருளியது ஈசனே என உணர்ந்து நெடுஞ்சாண்கிடையாக நெல்வேலியைப் பார்த்து வணங்கி பூரித்தார். ‘எம் சிவனே எம் சிவனே’ என்று அரற்றிக் கதறினார்.
அன்று முதல் நெல்வேலி நாதர் என்றும் நெல்லுக்கு வேலியிட்ட ஈசன் என்றும் திருநாமம் அமைந்தது சிவனாருக்கு!
நெல்லுக்கு வேலியிட்ட சிவபெருமான் குடிகொண்டிருக்கும் அந்தத் தலம் வேணுவனம் என அழைக்கப்பட்டு வந்தது. அதையடுத்து நெல்வேலி என்றும் திருநெல்வேலி என்றும் சுவாமிக்கு நெல்லையப்பர் என்றும் திருநாமங்கள் அமைந்தன என விவரிக்கிறது ஸ்தல புராணம்.
வருடந்தோறும் நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் எனும் திருவிழா நெல்லையப்பர் கோயிலில் வெகு விமரிசையாக நடைபெறுகின்றன.
தை மாதம் என்பது விவசாயிகளுக்கான மாதம். விவசாயத்துக்கான மாதம். உழவுத் தொழிலைக் கொண்டாடுகிற மாதம். இந்த மாதத்தில் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் வைபவம் சிறப்புற நடைபெறும். தைப்பூச திருநாளுக்கு முன்னதாக நெல்லுக்கு வேலியிட்ட திருநாளாக கொண்டாடப்படுகிறது.
தை மாதத்தில் ஏதேனும் ஒரு நாளில், நெல்லையப்பர் கோயிலுக்கு வந்து மனதார வேண்டிக்கொண்டால், நெல்லுக்கு வேலியிட்ட ஈசனான நெல்லையப்பரும் காந்திமதி அம்பாளும் இல்லத்தில் தனம் மற்றும் தானியத்தைப் பெருக்கித் தந்தருளுவார்கள் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
இல்லத்தில் சுபிட்சம் தந்தருளும் நெல்லையப்பரையும் காந்திமதி அம்பாளையும் கண்ணாரத் தரிசிப்போம். மனதாரப் பிரார்த்திப்போம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT