Published : 21 Jan 2021 04:27 PM
Last Updated : 21 Jan 2021 04:27 PM
தை மாத 2வது வெள்ளிக்கிழமையில் அம்பாளைத் தரிசிப்போம். அம்பிகையைக் கொண்டாடுவோம். சக்தியின் பேரருளைப் பெறுவோம்.
வழிபாடுகளில் சக்தி வழிபாடு உன்னதமானதாகவும் மகத்துவம் மிக்கதாகவும் போற்றப்படுகிறது. உலகுக்கே சக்தியாகத் திகழும் பராசக்தியானவள், பல்வேறு வடிவங்களுன் அருள்பாலிக்கிறாள். அம்பாளாக, அம்மனாக, மாரியம்மனாக, காளிதேவியாக, பிரத்தியங்கிரா தேவியாக, துர்காதேவியாக என ஒவ்வொரு வடிவங்களில், தன் சக்தியையும் சாந்நித்தியத்தையும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறாள்.
தேவி வழிபாடு செய்யச் செய்ய தீயசக்திகள் அண்டாது என்கிறது சாஸ்திரம். சாக்த வழிபாடு என்று சக்தி வழிபாட்டை மேற்கொண்ட துர்சக்திகளும் நெருங்காது; துன்பங்களும் காணாமல் போய் விடும் என்கிறார்கள் சாக்த வழிபாட்டுக்காரர்கள்.
பொதுவாகவெ, செவ்வாய்க்கிழமையும் வெள்ளிக்கிழமையும் அம்பாளுக்கு உகந்த நாட்கள். அம்பாளை வழிபடுவதற்கு உரிய நாட்கள். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அருகில் உள்ள அம்பாள் குடிகொண்டிருக்கும் ஆலயங்களுக்குச் செல்வதும் அம்பிகையை வழிபடுவதும் இன்னல்களையெல்லாம் தீர்த்தருளும். கடன் முதலான தொல்லைகளையெல்லாம் நிவர்த்தி செய்து அருளுவாள் தேவி என்பது ஐதீகம்.
தை மாதம் என்பதே வழிபாட்டுக்கு உரிய மாதம். பூஜைகளுக்கு உரிய மாதம். தை மாதத்தில் சூரியனையும் பூமியையும் கால்நடைகளையும் வணங்கி வழிபடுகிறோம். அதேபோல், முருகப்பெருமானை வழிபடுவதற்கு உரிய தைப்பூசத் திருநாள் கொண்டாடப்படுகிறது. வள்ளலார் தினமும் தைமாதத்தில்தான் வழிபடப்படுகிறது.
தை மாத செவ்வாய்க்கிழமையிலும் வெள்ளிக்கிழமையிலும் அம்மன் வழிபாடு செய்யுங்கள். அம்மனை தரிசித்து வேண்டிக்கொள்வோம். செவ்வரளி மாலை அம்பாளுக்கு உகந்தது. செந்நிற மலர்கள் அம்பாளுக்கு மிகவும் உகந்தவை.
தை மாத 2வது வெள்ளிக்கிழமை. அற்புதமான இந்த நன்னாளில், அருகில் உள்ள அம்மன் கோயிலுக்குச் சென்று வழிபடுவோம். வீட்டில் விளக்கேற்றி கனகதாரா ஸ்தோத்திரம், அபிராமி அந்தாதி முதலானவற்றை பாராயணம் செய்வோம். முடிந்தால், வெள்ளி விளக்கு இருப்பின், அதைக் கொண்டு விளக்கேற்றுவது இன்னும் மகத்தான பலன்களைத் தரும்.
முடிந்தால், தை வெள்ளிக்கிழமையில் சுமங்கலிக்கு புடவையும் மங்கலப் பொருட்களும் வழங்கினால், கணவரின் ஆயுள் பலம் அதிகரிக்கும். தாலி பாக்கியம் நிலைக்கப் பெறும். தீர்க்க சுமங்கலியாக வாழச் செய்வாள் தேவி. இல்லத்தில் சுபிட்சத்தை குடியிருக்கச் செய்வாள் அம்பாள் என்கின்றனர் பக்தர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT