Published : 21 Jan 2021 02:56 PM
Last Updated : 21 Jan 2021 02:56 PM
குருவாரத்தில் நவக்கிரக குரு பகவானை மனதார வணங்குவோம். குருவின் பேரருளைப் பெறுவோம்.
கிரகங்களின் கட்டுப்பாட்டில்தான் மனித வாழ்க்கையின் ஒவ்வொரு இயக்கமும் இருப்பதாகச் சொல்கிறார்கள் ஜோதிட வல்லுநர்கள். கிரகங்கள் ஆதிக்கம் மிக வலிமையானது என்பார்கள்.
கிரகங்களில் குரு பகவானும் ஒருவர். சுபகிரகம் என்று வியாழ கிரகத்தைப் போற்றுவார்கள். நவக்கிரகத்தில் உள்ள குரு பகவானை பிரகஸ்பதி என்பார்கள். பிரகஸ்பதி என்பவர், தேவகுரு என்று போற்றப்படுகிறார்.
தேவகுருவாகத் திகழும் பிரகஸ்பதியை, நவக்கிரகத்தில் ஒரு கிரகமாக சிவனார் அருளி வரம் தந்தார் என்கிறது புராணம். அதனால்தான் நவக்கிரகங்களில் சுபக்கிரகம் என்று போற்றப்பட்டு வணங்கப்பட்டு வருகிறார் குரு பகவான்.
குருவருளின்றி திருவருளில்லை என்பார்கள். குருவருள் இருந்தால்தான் இறையருளையே பெறமுடியும் என்று சொல்லிவைத்திருக்கிறார்கள். எந்தவொரு விஷயத்துக்கும் குருவின் அண்மையும் அருளும் மிக மிக அவசியம்.
வாழ்வில் ஒருவருக்கு திருமணம் முதலான யோகம் கூடிவரவேண்டுமெனில், குருவின் ஆதிக்கம் மிக மிக அவசியம் என்பதை புராணமும் வலியுறுத்துகிறது. ஈசனை மணம் புரிய வேண்டும் என்று உமையவள் ஆசைப்பட்டாலும் அது நிறைவேறாமல் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. அப்போதுதான், குரு யோகம் உமையவளுக்கு இருந்தால்தான் திருமணம் நடந்தேறும் என்று அருளிய நிலையில், பார்வதிதேவி கடும் தவம் மேற்கொண்டார். இதனால் குரு யோகம் கிடைக்கப்பெற்றார். இதையடுத்து சிவனாரை மணம் புரிந்தார் என விவரிக்கிறது புராணம்.
குருவின் அருளைப் பெற வேண்டும், குருவின் யோகம் கிடைக்க வேண்டும். குருவின் கடாக்ஷம் கிடைக்கவேண்டும். இதற்காக, குரு பகவானை வணங்கி பிரார்த்தனை செய்துகொள்வோம்.
அருகில் உள்ள சிவாலயங்களில், முருகப் பெருமான் குடிகொண்டிருக்கும் ஆலயங்களில், அம்மன் கோயில்களில் நவக்கிரக சந்நிதி அமைந்திருக்கும். அங்கே சென்று நவக்கிரகத்தை மாலை வேளையில் வலம் வந்து பிரார்த்தனை செய்வோம். நவக்கிரக குரு பகவானையும் குருவுக்குக் குருவாகத் திகழும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் வழிபடுங்கள்.
குரு பகவானுக்கு மஞ்சள் நிற மலர்கள் சூட்டி வழிபடுங்கள். தை மாத குருவாரம் எனப்படும் வியாழக்கிழமையில் முடிந்தால், குரு பகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சார்த்தி வழிபடுவது இன்னும் மகத்தான பலன்களைத் தந்தருளும்.
குருவருள் இருந்தால்தான் திருவருளைப் பெறமுடியும். குருவருளைப் பெறுவோம். திருவருள் பரிபூரணமாகக் கிடைக்கப் பெறுவோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT