Published : 29 Oct 2015 08:44 AM
Last Updated : 29 Oct 2015 08:44 AM

இங்கே ஒரு திவ்யதேசம்

‘திகழ்தரு திருவயிந்திரபுரமே’ என்று திருமங்கையாழ்வாரால் மங்களா சாசனம் செய்யப்பட்ட திருத்தலம் இது. 108 திவ்யதேசங்களில் ஒன்று. கடலூரில் இருந்து மேற்கே சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் வயல்கள், மலைகள் நதியின் இடையே காணப்படுகிறது.



தேவர்களுக்கு நாதனாக இருந்து எம்பெருமான் யுத்தம் செய்தமையால் ஸ்ரீதேவநாதன் என்ற திருநாமம் உண்டாயிற்று. திருப்பதி திருவேங்கடமுடையான் போல் ஸ்ரீதேவநாதப் பெருமானும் காணத் தெவிட்டாத பேரழகு வாய்ந்தவர் ஆதலால்தான் சுவாமி வேதாந்த தேசிகன் தன்னுடைய நவமணி மாலை என்ற கிரந்தத்தில் “நின் வடிவழகை மறவாதார் பிறவாதாரே” என்று கூறுகின்றார்.

ஸ்ரீ தேவநாதனுடைய திருமேனியொளியும், ஆபரண ஒளியும் கலந்து ஒரு தெய்விக ஒளி தோன்றுவதாகவும் அந்த ஒளி, பக்தர்களின் சகல விதமான நோய்களையும் தீர்ப்பதோடு அல்லாமல் பக்தர்கள் சங்கல்பித்த பலனைத் தவறாது அருள்வதாக சுவாமி வேதாந்த தேசிகர் அச்சுத ஸதகத்தில் அருளியுள்ளார்.

அடியவர்கள் கேட்கும் பலனைத் தவறாது அருள்வதால் இப்பெருமானுக்கு அடியவர்க்கு மெய்யன் என்ற பெயரும் உண்டு. தேவநாதப் பெருமானை நித்தியம் வழிபடுபவர்கள் மோட்சம் அடைந்த பிறகு ஏற்படும் சந்தோஷத்தை வாழும் காலத்திலேயே அனுபவிக்கின்றனர் என்று அச்சுத சதகத்தில் ஸ்வாமி தேசிகர் அருளியுள்ளார்.

கருணையின் மறுபெயர் தாயார்

பக்தியோடு செங்கமலத்தாயாரை வேண்டிக்கொள்ளும் வேண்டுதல்கள் யாவும் அப்படியே நிறைவேறும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தாயாருக்குச் செய்யப்படும் திருமஞ்சனம் சர்வ காரிய சித்தியை உண்டுபண்ணுவதாகவும் கருதப்படுகிறது.

சிங்கநடை போடும் பெருமான்

ஆடிப்பூரத்தன்றும் சித்திரைத் தேர்த் திருவிழா அன்றும், விண்ணதிர கோவிந்தா, கோவிந்தா என்ற கோஷத்துடன் பக்தர்களின் கடலில் நீந்தி தேவநாதப் பெருமான், கம்பீரத்துடன் நடை போட்டுத் தேரில் அமரும் அந்த பத்து நிமிடக் காட்சியானது நமக்கு வைகுண்டத்தில் உள்ளது போல் பரவச நிலையை ஏற்படுத்துவதோடு, செவிகட்கும், கண்களுக்கும் பக்தி பூர்வமான ஞானத்திற்கும் அரிய விருந்தாகவும் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x