Published : 19 Jan 2021 09:48 PM
Last Updated : 19 Jan 2021 09:48 PM
திருமாந்துறை தலத்துக்கு வந்து ஆம்ரவனேஸ்வரரை மனதார வழிபட்டுப் பிரார்த்தித்தால், ஏழு தலைமுறை பாவங்களும் விலகும்; பாவங்களுக்கு மன்னிப்பும் பிராயச்சித்தமும் கிடைக்கப் பெறலாம் என்று விவரிக்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
திருச்சியில் இருந்து லால்குடி செல்லும் வழியில் லால்குடிக்கு முன்னதாக 3 கி.மீ. தொலைவில் உள்ளது மாந்துறை. திருமாந்துறை என்று போற்றப்படுகிறது. திருச்சியில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ள திருமாந்துறை தலத்தில் அற்புதமாகக் கோயில் கொண்டிருக்கிறார் சிவனார். இங்கே உள்ள சிவனாரின் திருநாமம் ஸ்ரீஆம்ரவனேஸ்வரர்.
மாமரங்கள் அடர்ந்திருந்த வனமாக ஒருகாலத்தில் அமைந்திருந்தது இந்தத் தலம். இங்கே உள்ள முனிவர் ஒருவர், சிவ சாபத்துக்கு ஆளாகி மானாகப் பிறந்தார். முற்பிறவியில் செய்த பாவத்தின் விளைவாக மான்களாகப் பிறந்த தம்பதிக்கு மகனாக, மானாகப் பிறந்தார்.
ஒருகட்டத்தில் அசுரகுலத்தைச் சேர்ந்த தாய் தந்தை மான்களுக்கு வேடனாக வந்து சாப விமோசனம் தந்தார் சிவபெருமான். மானாக, மான் குட்டியாக இருந்த முனிவர் பெற்றவர்களைக் காணாமல் தவித்தார். கலங்கினார். கண்ணீர் விட்டார். பசியும் துக்கமுமாக அல்லாடினார். அப்போது சிவனாரும் உமையவளும் மான் வடிவெடுத்து வந்தார்கள். குட்டிமானுக்கு பார்வதிதேவி உணவிட்டார். பாலிட்டார். பின்னர், ரிஷபாரூடராக சிவபார்வதி திருக்காட்சி தந்தனர். குட்டி மானில் இருந்து விடுபட்டு முனிவர் பழைய உருவத்தைப் பெற்றார்.
முனிவரின் வேண்டுகோளின்படி, மாமரங்கள் கொண்ட வனத்தில் சிவனாரும் பார்வதிதேவியும் கோயில் கொண்டனர் என்கிறது ஸ்தல புராணம். மான்களுக்கு சிவ பார்வதி இருவரும், சதுர்த்தியும் செவ்வாய்க்கிழமையும் இணைந்தநாளில், சாபவிமோசனம் தந்ததாகத் தெரிவிக்கிறது ஸ்தல புராணம். எனவே, செவ்வாய்க்கிழமையும் சதுர்த்தி திதியும் இங்கே வந்து தரிசிப்பது சிறப்பு வாய்ந்ததாகப் போற்றப்படுகிறது .மேலும் செவ்வாய்க்கிழமையும் சதுர்த்தியும் இணைந்த நாளில் தரிசிப்பது இன்னும் மகத்துவம் வாய்ந்தது என்கிறார்கள் பக்தர்கள்.
சுவாமியின் திருநாமம் ஸ்ரீஆம்ரவனேஸ்வரர். திருமாந்துறை தலத்துக்கு வந்து ஆம்ரவனேஸ்வரரை மனதார வழிபட்டுப் பிரார்த்தித்தால், ஏழு தலைமுறை பாவங்களும் விலகும்; பாவங்களுக்கு மன்னிப்பும் பிராயச்சித்தமும் கிடைக்கப் பெறலாம் என்று விவரிக்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
அம்பாளின் திருநாமம் ஸ்ரீபாலாம்பிகை. இவளும் வரப்பிரசாதிதான். செவ்வாய்க்கிழமையிலும் வெள்ளிக்கிழமையிலும் அம்பாளுக்கு புடவை சார்த்தி வழிபட்டு பிரார்த்தனை செய்து கொண்டால், நினைத்த காரியங்கள் அனைத்தையும் நடத்தித் தந்திடுவாள் ஸ்ரீபாலாம்பிகை.
திருஞானசம்பந்தர் பெருமான் பதிகம் பாடிய திருத்தலம் எனும் பெருமையும் இந்தத் தலத்துக்கு உண்டு. திருமாந்துறை ஆம்ரவனேஸ்வரை தரிசிப்போம். நம் பாவமெல்லாம் மன்னித்து அருளுவார் சிவனார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT