Published : 19 Jan 2021 08:58 PM
Last Updated : 19 Jan 2021 08:58 PM
புதன்கிழமை என்றில்லாமல், நவக்கிரக புதன் பகவானை எந்தநாளில் வேண்டுமானாலும் வந்து வணங்கலாம். நவக்கிரகத்தை ஒன்பது முறை வலம் வந்து மனதார வேண்டிக்கொள்ளுங்கள். வேண்டியதையெல்லாம் தந்தருளுவார் புதன் பகவான்!
நவக்கிரகங்களில் புதன் பகவானும் ஒருவர். நவக்கிரக திருத்தலங்களில் புதன் பகவானுக்கு உரிய திருத்தலமாகத் திகழ்வது திருவெண்காடு. சீர்காழிக்கு அருகில் உள்ளது இந்தத் திருத்தலம். இங்கே உள்ள சிவனாரின் திருநாமம் ஸ்ரீஸ்வேதாரண்யேஸ்வரர்.
புதன் பகவான் என்பவர் நமக்கு புத்தியில் தெளிவைக் கொடுக்கக்கூடியவர். புத்தியில் பலத்தைக் கொடுக்கக் கூடியவர். காரியத்தில் தெளிவைத் தந்தருளக்கூடியவர். புதன் பகவானை வணங்கித் தொழுதால், கல்வியில் மேன்மை கிடைக்கப் பெறலாம். தொழிலில் முன்னேற்றத்தைத் தந்தருளுவார் புதன் பகவான்.
வியாபாரத்தில் அபரிமிதமான ஏற்றத்தையும் மாற்றத்தையும் தருவார் புதன் பகவான். தொடர்ந்து புதன் கிழமைகளில் புதன் பகவானை வணங்கி வந்தால், திருமணத் தடை நீங்கும். முக்கியமான, நோய்களையெல்லாம் தீர்த்தருளுவார் புதன் பகவான்.
புதன் பகவானுக்கு உகந்தது புதன் கிழமை. புதன் பகவானுக்கு உரிய ராசிகள் மிதுனமும் கன்னியும். புதன் பகவானுக்கு உரிய திசையாக வடகிழக்கு திசையைச் சொல்கிறார்கள் ஜோதிட வல்லுநர்கள். புதன் பகவானுக்கு உரிய அதிதேவதை மகாவிஷ்ணு. புதன் பகவானின் பிரத்யதி தேவதையாக ஸ்ரீமந் நாராயணனைச் சொல்லுவார்கள்.
புதனுக்கு உரிய நிறம் வெளிர்பச்சை. உரிய வாகனம் குதிரை. புதன் பகவானுக்கு உரிய உலோகம் பித்தளை. புதன் பகவானுக்கு பச்சை நிற வஸ்திரம் சார்த்தி வேண்டிக்கொள்வது விசேஷமானது.
புதன்கிழமையன்று காலை 6 முதல் 7 மணி வரையிலும் புதன் ஓரை. புதன்கிழமை நாளில், புதன் ஓரையில் அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று, நவக்கிரகத்தில் உள்ள புதன் பகவானை மனதார வேண்டுங்கள். மங்கல காரியங்களை நடத்தித் தந்திடுவார் புதன் பகவான்.
திருவெண்காடு ஸ்ரீஸ்வேதாரண்யேஸ்வரர் கோயிலில் உள்ள புதன் பகவானுக்கு புதன் கிழமையில், புதன் ஓரையில் வந்து வழிபட்டால், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் முழுவதுமாகத் தீரும். மனக்குழப்பமும் மனக்கிலேசமும் தீரும் என்பது ஐதீகம்.
புதன்கிழமை என்றில்லாமல், நவக்கிரக புதன் பகவானை எந்தநாளில் வேண்டுமானாலும் வந்து வணங்கலாம். நவக்கிரகத்தை ஒன்பது முறை வலம் வந்து மனதார வேண்டிக்கொள்ளுங்கள். வேண்டியதையெல்லாம் தந்தருளுவார் புதன் பகவான்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT