Published : 19 Jan 2021 01:37 PM
Last Updated : 19 Jan 2021 01:37 PM
துரோகத்தால் துன்பப்படுகிறவர்களையும் அநீதியால் தண்டிக்கப்பட்டவர்களையும் காபந்து செய்யும் குணமும் பரோபகார சிந்தனையும் கொண்டு அருளாட்சி புரிபவள் என்று ஸ்ரீபத்ரகாளியம்மனைச் சொல்லிப் பூரிக்கிறார்கள் பக்தர்கள்.
கிராமங்களில் இன்றைக்கும் பல ஊர்களின் எல்லை தெய்வங்களாகவே திகழ்கிறாள். தீமைகளையும் தீயசக்திகளையும் எல்லையைத் தாண்டியும் ஓட ஓட விரட்டி, மக்களைப் பாதுகாக்கிறாள் பத்ரகாளி அன்னை.
பொதுவாகவே, காளி தேவியை வழிபடுவது, சகல விதங்களிலும் பலன்களைக் கொடுக்கும். குடும்பத்தில் உள்ள பகையையெல்லாம் நட்புறவாக மாற்றித் தருவாள். இல்லத்தில் இதுவரை கணவன் மனைவிக்கு இடையே பிரிவுகளோ பிணக்குகளோ இருந்தால், அவர்களுக்குள் ஒற்றுமையை ஏற்படுத்தி அருளுவாள் பத்ரகாளி என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.
ஸ்ரீபத்ரகாளியம்மனின் மந்திரத்தை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஜபித்து வந்தால், சகல துன்பங்களில் இருந்தும் துயரங்களில் இருந்தும் விடுபடலாம். தடைப்பட்ட நற்காரியங்கள் அனைத்தும் நடந்தேறும் என்பது ஐதீகம்.
சக்தி மிக்க ஸ்ரீபத்ரகாளி அம்மன் மந்திரம் :
ஓம் ஸ்ரீ மஹாகாளி மஹாலக்ஷ்மி
மஹா கன்யா ஸரஸ்வதீ தேவ்யை நமோ நமஹ:
இந்தக் கலியுகத்தில் காளி மந்திரத்தை இடைவிடாமல் இடையூறின்றி மனம் ஒருமித்து, தொடர்ந்து ஜபித்து வந்தால், காரியத் தடைகள் நீங்கும். காரியத்தில் வெற்றி கிடைக்கும். தொழிலில் இருந்த நஷ்ட நிலையெல்லாம் மாறும். மிக மிக சக்தி வாய்ந்த பத்ரகாளியின் மந்திரத்தைச் சொல்லி வாருங்கள். மங்கல காரியங்கள் இல்லத்தில் விமரிசையாக நடந்தேறும்.
முடியும் போது, அம்மனுக்கு செந்நிறத்திலான புடவை சார்த்தலாம். செந்நிற மலர்கள் பத்ரகாளியம்மனுக்கு மிகவும் உகந்தவை. தொடர்ந்து ஒவ்வொரு செவ்வாயும் வெள்ளியும் சொல்லி வந்தால், நினைத்ததையெல்லாம் நடத்திக் கொடுப்பாள் பத்ரகாளி அன்னை!
பத்ரகாளி அன்னை, கனிவு காட்டுபவள்தான் என்றாலும் கறார் குணம் கொண்டவளும் கூட. நல்ல காரியங்களுக்கு மட்டுமே காளி செவி சாய்ப்பாள். எனவே தூய மனதுடனும் முழு பக்தியுடனும் இந்த மந்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும் என்பது மிக மிக அவசியம்.
ஸ்ரீபத்ரகாளியம்மனுக்கு, பால் பாயசமும், தூய பசு நெய்யும் நைவேத்தியம் படைத்து வழிபடலாம். அமாவாசை, பெளர்ணமி முதலான நாட்களில், காலையும் மாலையும் பத்ரகாளி மந்திரத்தை ஜபித்து வந்தால், எதிரிகள் அழிவார்கள். வாக்கு பலிதம் உண்டாகும்! பேரும் புகழும் நிலைக்கும் என்று போற்றுகிறார்கள் பக்தர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT