Published : 18 Jan 2021 10:07 PM
Last Updated : 18 Jan 2021 10:07 PM
கஷ்டமும் நஷ்டமும் தீராதா என்பதுதான் நம் எல்லோருடைய எதிர்பார்ப்பும். நம்முடைய துக்கங்களையும் துயரங்களையும் போக்குகிற சக்தி வடிவமாகத்தான் துர்காதேவி அருள்பாலிக்கிறாள் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
சக்தி எனப்படுபவள் பராசக்தி. அவள் தன்னில் இருந்து உருவாக்கிய சக்தியின் பிம்பங்கள் ஏராளம். அந்த சக்தியில் மிக முக்கியமானவள் துர்காதேவி. அதனால்தான் அனைத்து சிவாலயங்களிலும் கோஷ்டத்தில் நம்மை அரவணைக்கவும் அருள் தரவும் காத்துக்கொண்டிருக்கிறாள் துர்கை.
துர்கை என்றாலே துக்கத்தையெல்லாம் அழிப்பவள் என்று அர்த்தம். நம்முடைய வாழ்க்கையில் வரக்கூடிய கஷ்டங்களை தீர்க்கக்கூடியவள் துர்காதேவி என்று சாக்த வழிபாடு செய்பவர்களும் சிலிர்ப்புடன் தெரிவிக்கிறார்கள்.
தடைகளால் முன்னேற முடியாமல் தவித்துக் கொண்டிருப்பவர்களுக்கும் எதிரிகளாலும் சூழ்ச்சிகளாலும் இன்னல்களைச் சந்தித்து வருவோருக்கும் துர்காதேவிதான் சரணாலயம். அவளைச் சரணடைந்து விட்டால், நம் தடைகளை சடுதியில் தகர்த்தெறிவாள் துர்கை.
அனைவரும் ராகுவின் பிடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கின்றோம். போட்டி, பொறாமை, ஏமாற்றம், சிக்கல் இவை அனைத்தும் சூழ்ந்தது தான் இந்த உலகம். ராகுவின் பிடியில் இருந்து தப்பிக்க துர்கை அம்மன் வழிபாடு மிகச் சிறந்த வழிபாடு என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
இதனால்தான் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு தீபம் ஏற்ற வேண்டும் என்ற வழிபாட்டையே கொண்டு வந்தார்கள். ஆனால், நம்முடைய துயரத்தை நொடிப்பொழுதில் போக்கும் துர்கையை வீட்டில் இருந்தபடியே வழிபாடு செய்யலாமா? என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது.
துர்கை அம்மன் படம் வைத்தோ சிலை வைத்தோ வீட்டி வைத்து வழிபடலாம், தவறேதுமில்லை என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
செவ்வாய்க்கிழமை அன்று துர்க்கை அம்மனுக்கு வீட்டில் இருந்தபடியே மண் அகல் தீபம், நல்லெண்ணெய் ஊற்றி திரியிட்டு தீபமேற்றி வாருங்கள். அரளியால் குறிப்பாக செவ்வரளியால் துர்கை அம்மனுக்கு அலங்காரம் செய்து வழிபடுவது விசேஷம்.
எலுமிச்சை பழத்தை எடுத்து நான்காக வெட்டி, அதன் உள்ளே குங்குமத்தை நன்றாகத் தடவி, வைத்துக் கொள்ள வேண்டும். பூஜை அறையிலேயே இந்த பரிகாரத்தைச் செய்யலாம். குங்குமம் தடவி தயாராக வைத்திருக்கும் அந்த எலுமிச்சையை உங்களது வலது கையில் எடுத்து, உங்களுடைய தலையை 27 முறை சுற்றிக் கொள்ள வேண்டும். அப்போது நம்முடைய வேண்டுதலை, பிரார்த்தனையை துர்கையிடம் மனதாரச் சொல்லி வழிபடுங்கள்.
அதன் பின்பு ஒரு பாத்திரத்தில் அந்த எலுமிச்சம் பழத்தை நான்கு துண்டுகளாக கைகளாலேயே பிரித்து போட்டு விட வேண்டும். வீட்டிற்கு வெளியே சென்றுதான் இப்படி செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. பூஜை அறையிலேயே ஒரு பாத்திரத்தில் உங்கள் தலையை சுற்றி எலுமிச்சைப் பழத்தை நசுக்கி போட்டு விடுங்கள். அதுவும் உங்கள் கைகளாலேயே.
உங்களை பிடித்த கஷ்டமும் சிக்கலும் அந்த எலுமிச்சைசையுடன் விலகிச் செல்லும்.
செவ்வாய்க்கிழமைகளில் இப்படியாகத் தொடர்ந்து செய்து வந்தால், இன்னல்களும் சிக்கல்களும் தீரும். எதிர்ப்புகளும் தடைகளும் விலகும்! ராகு முதலான தோஷத்தையெல்லாம் போக்கியருளுவாள் துர்காதேவி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT