Published : 18 Jan 2021 05:48 PM
Last Updated : 18 Jan 2021 05:48 PM
தை மாத செவ்வாய்க்கிழமைகளில், குலதெய்வப் பிரார்த்தனை செய்யவேண்டும் என்றும் அப்படி குலதெய்வ வழிபாடு மேற்கொண்டால், நம் இல்லத்தையும் வம்சத்தையும் குலதெய்வம் காக்கும் என்றும் சொல்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்லுவார்கள். தை மாதம் என்பதே இயற்கையை வழிபடுவதில் இருந்துதான் தொடங்குகிறது. சூரிய பகவானுக்கு நன்றி சொல்லும் வகையில் மகர சங்கராந்தி என்றும் தைத்திருநாள் என்றும் கொண்டாடப்படுகிறது.
அதேபோல், கால்நடைகளை வணங்கும் விழாவாகவும் நிலத்தை வணங்குவதற்கான உழவுத் திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது.
ஒருவருக்கு வாழ்க்கையில், இஷ்ட தெய்வ வழிபாடு, எல்லை தெய்வங்களின் வழிபாடு என்பது மிகவும் முக்கியம். நமக்கு இஷ்டமான தெய்வங்களையும் மகான்களையும் வழிபாடு செய்வது மிகுந்த பலமும் வளமும் தரக்கூடியது. நம் மனதில் தெம்பையும் ஊக்கத்தையும் தந்தருளும் என்பது உறுதி.
அதேபோல், முன்னோர் வழிபாடு என்பது மிக மிக அவசியம். நம் மூதாதையர்களை அமாவாசை முதலான நாட்களில் அவசியம் வணங்கவேண்டும். அப்படி நாம் வணங்காமல் தவறவிடுவதுதான், பித்ரு சாபம் என்றும் பித்ரு பாபம் என்றுமாக நமக்கு எதிர்வினைகளைத் தருகிறது. முன்னோர் வழிபாட்டைச் செய்யச் செய்யத்தான் நம்முடைய ஏழு தலைமுறை பாவங்களும் விலகும். நமக்கு அடுத்த தலைமுறையானது வாழையடி வாழையென வளரும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
இஷ்ட தெய்வம், எல்லைத் தெய்வம், முன்னோர் வழிபாடு முதலானவற்றையெல்லாம் விட மிக மிக முக்கியமானது குலதெய்வ வழிபாடுதான். குருவருள் இருந்தால்தான் திருவருள் கிடைக்கும் என்பார்களே... அதுபோல, குலதெய்வத்தின் அருள் இருந்தால்தான், முன்னோர்கள் நம்மை ஆசீர்வதிப்பார்கள். நம் வீட்டின் எல்லை தெய்வங்களின் அருளும் இஷ்ட தெய்வங்களின் அருளும் நமக்குப் பரிபூரணமாகக் கிடைக்கும்.
அதனால்தான் குலதெய்வத்தை அவசியம் என்று வலியுறுத்தி வருகிறார்கள் ஆச்சார்யர்கள். மேலும் நாம் எந்த ஹோம பூஜைகள் செய்தாலும் அந்த பூஜையில் குலதெய்வத்தை அழைத்து, குலதெய்வ ஆராதனைகளைச் செய்துவிட்டுத்தான் அடுத்தடுத்த பூஜைகளை மேற்கொள்ளவேண்டும். எனவே அந்த அளவுக்கு குலதெய்வத்துக்கும் குலதெய்வ வழிபாட்டுக்கும் உள்ள முக்கியத்துவத்தை அறிவுறுத்துகிறது சாஸ்திரம் என்று விளக்குகின்றனர் ஆச்சார்யப் பெருமக்கள்.
குலதெய்வ வழிபாட்டை அடிக்கடி மேற்கொள்ளவேண்டும். இயலாதவர்கள் வருடத்துக்கு ஒருமுறையேனும் செய்யவேண்டும். குறிப்பாக, தை மாதத்தில் குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளவேண்டும். தை மாத செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமையில் ஏதேனும் ஒருநாளில், குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளலாம்.
தை மாதம் வந்ததும், குலதெய்வக் கோயிலுக்குச் சென்று பொங்கலோ மற்ற படையலோ இடுவது பலரின் வழக்கம். வீட்டில் இருந்தும் கூட குலதெய்வத்தை வழிபடலாம். வீட்டை கழுவி சுத்தப்படுத்திவிட்டு, வீட்டில் இருந்தும் குலதெய்வத்தின் படத்துக்கு சந்தனம் குங்குமமிட்டு, பூக்களால் அலங்கரித்துக் கொள்ளவேண்டும்.
குலதெய்வத்துக்கு விதம் விதமான, உங்களுக்கு வழக்கப்பட்ட உணவுகளை படையலிட வேண்டும். குலதெய்வத்தை வணங்கிவிட்டு அந்த உணவை காகத்துக்கு வழங்கவேண்டும். அதேபோல, நான்கு பேருக்கேனும் அன்னதானம் செய்வதோ உணவுப்பொட்டலம் வழங்குவதோ பாவங்கள் அனைத்தையும் போக்கவல்லது.
முடிந்தால், குலதெய்வத்துக்கு வேண்டிக்கொண்டு, சுமங்கலிகளுக்கு புடவை, மஞ்சள், சரடு, குங்குமம், வளையல் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை வழங்கலாம்.
குலதெய்வத்தின் அருள் இருந்தால்தான், மற்ற வழிபாடுகளும் முன்னோர் வழிபாடு உள்ளிட்டவையும் நமக்கு பலன்களைக் கொடுக்கும் என அறிவுறுத்துகிறார்கள் ஆச்சார்யர்கள். தை செவ்வாய்க்கிழமையில் குலதெய்வத்தை வணங்குவோம். வெள்ளிக்கிழமையிலும் குலதெய்வ வழிபாடு செய்யலாம். குலதெய்வத்துக்குப் படையலிட்டு குடும்பத்துடன் போற்றுவோம். பிரார்த்திப்போம். நம் குலத்தைக் காக்கும் நம்முடைய குலதெய்வம் என்பது உறுதி!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT