Last Updated : 15 Jan, 2021 08:43 PM

 

Published : 15 Jan 2021 08:43 PM
Last Updated : 15 Jan 2021 08:43 PM

தட்சிணாயன வாசல்; உத்தராயன வாசல்! சாரங்கபாணி கோயிலின் பெருமை

சாரங்கபாணி கோயிலின் வைதீக விமானத்தின் அருகே உத்தராயன வாசல் மகர சங்கராந்தியின் போதும் தட்சிணாயன வாசல் ஆடிப் பதினெட்டின் போதும் திறக்கப்படுகின்றன.

கோயில் நகரம் கும்பகோணம். இங்கே தடுக்கி விழுந்தால் கோயில்கள். கோபுரங்கள். தீர்த்தக்குளங்கள். இத்தனை ஆலயங்களிலும் கும்பகோணத்தின் பிரமாண்டமான ஆலயமாகத் திகழ்கிறது ஸ்ரீசாரங்கபாணி ஆலயம். ஆராவமுதன் என்ற பெயரும் பெருமாளுக்கு உண்டு.

இந்தத் தலத்தில், பாதாள சீனிவாசன் சந்நிதி, சேனை முதலியார் சந்நிதி, தீரா வினைகள் தீர்த்த பெருமாள் சந்நிதி, தீரா வினைகள் தீர்த்த பெருமாள் சந்நிதி, சித்திர சீனிவாசன் சந்நிதி, ஐயா குமாரதாத தேசிகன் சந்நிதி, ராஜகோபாலன் சந்நிதி, ஸ்ரீராமன் சந்நிதி, கண்ணபிரான் சந்நிதி, ஆண்டாள் சந்நிதி, பெரியாழ்வார் சந்நிதி, கிணற்றடி ராமபிரான் சந்நிதி, நிகமாந்த தேசிகன் சந்நிதி மற்றும் ஆழ்வார்கள் சந்நிதிகள் என பல சந்நிதிகள் அமைந்திருக்கின்றன.

ஆலயத்தின் நூற்றுக்கால் மண்டபத் தூண் ஒன்றில் ஆஞ்சநேயர் தன் வாலையே சிம்மாசனமாக்கி ராவணனுக்கு எதிரில் அமர்ந்திருக்கும் திருக்கோலத்தை தரிசிக்கலாம்.
‘உத்தராயனம் உயர்ந்தது, தட்சிணாயனம் தாழ்ந்தது’ என்றொரு வழக்கு இருந்திருக்கிறது. இப்போதும் சிலர் இப்படிச் சொல்லுவார்கள். இதைச் சமன் செய்வதற்காக, உத்தராயனம் மற்றும் தட்சிணாயன தேவதைகள் ஸ்ரீவைகுண்டநாதனிடம் சென்றார்கள். ‘எங்களுக்குச் சமமான பெருமைகளைக் கொடுத்து அருளுங்கள். நிலையான புகழ் கிடைக்க அருளுங்கள்’ என மனமுருக வேண்டினார்கள்.

‘திருக்குடந்தைக்குச் செல்லுங்கள். ஸ்ரீசாரங்கநாதனின் சந்நிதியில் வாசல்களாக இருங்கள். உங்கள் எண்ணங்கள் நிறைவேறும் என்று வைகுண்டப் பெருமாள்.
பெருமாள் அருளியபடி, உத்தராயன தட்சிணாயன தேவதைகள், இங்கே வாசல்களாக நிலை பெற்றிருக்கிறார்கள் என்கிறது ஸ்தல புராணம். ஆகவே, இந்தத் தலத்துக்கு வந்து தரிசித்தாலும் குடந்தை திருத்தலத்தில் வாழ்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் மோட்சத்தை தந்து அருளுகிறார் சாரங்கபாணி பெருமாள் என்பது ஐதீகம்.

இன்னொரு விஷயம்...

பெருமாள் சந்நிதிக்கு செல்ல தெற்குப் பக்கம் தட்சிணாயன வாயில் உள்ளது. வடக்குப் பக்கத்தில் உத்தராயன வாசல் உள்ளது. ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை தட்சிணாயன வாசல் வழியாக பெருமாளை சென்று தரிசிக்க வேண்டும். முதலில் பெருமாள் வெளியே எழுந்தருளியது மகாலக்ஷ்மியை திருக்கல்யாணம் புரிந்ததும் இந்த வாசல் வழியாகத்தான் என்கிறது ஸ்தல புராணம்.

தை மாதம் முதல் ஆனி மாதம் வரை, உத்தராயன வாசல் வழியாகச் சென்றுதான் உள்ளே சென்று தரிசிக்கவேண்டும்.
சாரங்கபாணி கோயிலின் வைதீக விமானத்தின் அருகே வாசல்களில், உத்தராயன வாசல் மகர சங்கராந்தியின் போதும் தட்சிணாயன வாசல் ஆடிப் பதினெட்டின் போதும் திறக்கப்படுகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x