Last Updated : 15 Jan, 2021 06:11 PM

 

Published : 15 Jan 2021 06:11 PM
Last Updated : 15 Jan 2021 06:11 PM

துளசியில் மகாலக்ஷ்மி; பெருமாளுக்கு துளசி!  

துளசி தீர்த்தம் என்பது பலவிதமான பலன்களைக் கொடுக்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். அதனால்தான் மகாவிஷ்ணு குடிகொண்டிருக்கும் ஆலயங்களில், பெருமாள் சந்நிதிகளிலும் அனுமன் சந்நிதிகளிலும் துளசி தீர்த்தம் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து அதில் இருந்து அமிர்தம் பெறுகிற முயற்சியில் இறங்கினார்கள். அந்தத் தருணத்தில், பாற்கடலில் இருந்து, ஐராவதம், காமதேனு, கற்பகத்தரு, மகாலக்ஷ்மி, சந்திரன் என்றெல்லாம் தோன்றியதாகப் புராணம் விவரிக்கிறது.

மேலும் அந்த சமயத்தில், மகாவிஷ்ணுவின் கண்களில் இருந்து வழிந்த நீரானது, அமிர்த கலசத்தில் விழுந்தது. அப்போது அந்தக் கலசத்தில் இருந்து, பச்சைநிறத்தினளாக துளசி தேவி தோன்றினாள். மகாவிஷ்ணுவானவர், மகாலக்ஷ்மி, துளசி, கெளதுஸ்பம் என வைத்துக்கொண்டு, மற்றவற்றை தேவர்களுக்கு வழங்கி அருளினார்.

மகோன்னதமிக்கது துளசி. அதனால்தான் துளசி வழிபாட்டுக்கு நம் சாஸ்திரத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. வீடுகளில் கொல்லைப்புறத்தில் துளசி மாடம் வைத்து தினமும் பூஜிப்பது எனும் வழக்கமும் அதனால்தான் ஏற்பட்டது. மேலும் துளசியில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள் என்பது ஐதீகம்.

துளசியின் வாசம் எந்த வீட்டில் இருந்தாலும் அந்த வீட்டில் துர்தேவதைகள் நுழைய முடியாது என்கிறது சாஸ்திரம். அதேபோல், துளசிதேவியை தொடர்ந்து வழிபடுபவர்களின் இல்லத்தில் சுபிட்சம் நிறைந்திருக்கும். சகல ஐஸ்வர்யங்களும் குடிகொள்ளும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

துளசிச் செடியில், முப்பத்து முக்கோடி தேவர்களும் வாசம் செய்கிறார்கள் என துளசியைச் சிலாகிக்கிறது புராணம். மேலும் பனிரெண்டு சூரியர்களும் அஷ்ட வசுக்களும் அஸ்வினி தேவர் முதலானோரும் வாசம் செய்கின்றனர்.

இத்தனை பெருமையும் சாந்நித்தியமும் நிறைந்திருக்கும் துளசிச் செடியை வீட்டில் வளர்ப்பதும் பூஜிப்பதும் விசேஷம். பெருமாளுக்கு அதனால்தான் துளசி மாலை சார்த்தப்படுகிறது. பெருமாள் கோயிலுக்குச் சென்றால், அவசியம் துளசி மாலை சார்த்துங்கள். இயலாதெனில், உள்ளங்கை அளவுக்கேனும் துளசியை பெருமாளுக்கு சார்த்துங்கள்.

அதேபோல், துளசி தீர்த்தம் பருகுவதும் மிகப்பெரிய புண்ணியத்தைக் கொடுக்கும். புதன் கிழமைகளிலும் சனிக்கிழமைகளிலும் அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் செல்லுங்கள். பெருமாளுக்கும் அனுமனுக்கும் துளசி மாலை சார்த்துங்கள். நம் துக்கமெல்லாம் பறந்தோடும். மனக்கிலேசமெல்லாம் மாயமாகும். புத்தியில் தெளிவும் ஞானமும் பிறக்கும். காரியத்தில் வெற்றியைத் தேடித் தரும்.

துளசி தீர்த்தம் என்பது பலவிதமான பலன்களைக் கொடுக்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். அதனால்தான் மகாவிஷ்ணு குடிகொண்டிருக்கும் ஆலயங்களில், பெருமாள் சந்நிதிகளிலும் அனுமன் சந்நிதிகளிலும் துளசி தீர்த்தம் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

துளசி தீர்த்தம் பருகி வந்தால், ரத்தம் சுத்தமாகும் என்கிறது விஞ்ஞானம். தலைச்சுற்றல், மூச்சுத்திணறல் முதலானவை சரியாகும் என்கிறார்கள். துளசி தேவியை வணங்குவோம். துளசிச் செடியை வணங்குவோம். பெருமாளுக்கும் அனுமனுக்கும் ஒவ்வொரு சனிக்கிழமையும் துளசி மாலை சார்த்தி வணங்கி வழிபட்டு பிரார்த்திப்போம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x