Published : 15 Jan 2021 02:20 PM
Last Updated : 15 Jan 2021 02:20 PM
தை வெள்ளிக்கிழமையில், காளிகாம்பாளை கண்ணார தரிசித்தாலோ, மனதார பிரார்த்தித்துக் கொண்டாலோ, மங்காத செல்வத்தையும் புகழையும் தந்தருளுவாள் சென்னை காளிகாம்பாள்.
சென்னை பாரிமுனை தம்புச்செட்டித் தெருவில் அமைந்துள்ளது ஸ்ரீகாளிகாம்பாள் திருக்கோயில். சக்தியும் சாந்நித்தியமும் நிறைந்தவள் என்றும் கண் கண்ட தெய்வம் என்றும் கொண்டாடுகிறார்கள் பக்தர்கள்.
நமக்கு என்ன தேவை என்பதை நாம் கேட்காமலே உணர்ந்து நமக்கு வழங்குபவர்கள்தான் நம் அம்மாக்கள். காளிகாம்பாளும் அப்படித்தான். லோகமாதா அல்லவா. உலகத்துக்கே அன்னையாகத் திகழ்பவள்தானே பராசக்தி. காளிகாம்பாளிடம் நாம் ஒருமுறையேனும் நின்று அவளை தரிசித்தாலே போதும்.. நாம் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களையெல்லாம் போக்கி, நம்மை அருளிக் காப்பாள் காளிகாம்பாள் அன்னை.
காளிகாம்பாள் பேசும் தெய்வம். அதுமட்டுமா? நாம் அவளிடம் முறையிடாவிட்டாலும் கூட, நாம் நமக்கு என்ன வேண்டும் என்பதைச் சொல்லி கேட்காவிட்டாலும் கூட நமக்கு என்ன தேவை என்பதைப் பார்த்துப் பார்த்து அருள்வழங்கும் அன்னை இவள் என்று சொல்லிப் பூரிக்கின்றனர் பக்தர்கள்.
காஞ்சித் தலைவி என்று போற்றப்படுகிற காமாட்சி அன்னை, சக்தி பீடங்களின் தலைவி. காஞ்சி காமாட்சி தலம் உள்ளிட்ட பல கோயில்களில் ஆதிசங்கரர் ஸ்ரீசக்கர பிரதிஷ்டை செய்தார். அதேபோல், காளிகாம்பாள் சந்நிதியிலும் ஸ்ரீசக்ரப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
காளி என்றாலே உக்கிர தெய்வம் என்பார்கள். ஆனால் சென்னை காளிகாம்பாள் உக்கிர தெய்வம் அல்ல. அதேசமயம், தீயசக்திகளிடமும் துர்குணக்காரர்களிடமும் கண்டிப்பும் உக்கிரமும் காட்டுபவள்; அவர்களை அழித்தொழிப்பவள் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
ஆமாம்... சென்னை காளிகாம்பாள், சாந்த நாயகி. அன்பே உருவானவள். கனிவையே தன் பார்வையாகக் கொண்டவள். காளிகாம்பாள், நம் அன்னைக்கெல்லாம் அன்னையாக, பாசமும் கருணையும் கொண்டவளாகத் திகழ்கிறாள் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.
‘ஒரு முழம் செவ்வரளியும் ஒரேயொரு தாமரைப் பூவும் காளிகாம்பாளுக்கு வழங்கினாலே போதும்... நம் குடும்பத்தில் உள்ள பிரச்சினைகளும் கவலைகளும் என்னென்ன என்பதையெல்லாம் அம்பாளிடம் சொல்லி முறையிடத்தேவையே இல்லை. நம் வாழ்வில் மிகப்பெரிய திருப்பங்களையெல்லாம் ஏற்படுத்தி, நம்மை வளரச் செய்வாள்; வாழச் செய்வாள்’ என்று பெரும்பாலான பக்தர்கள் தெரிவிக்கிறார்கள்.
பொதுவாகவே, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் காளிகாம்பாளைத் தரிசிக்க எங்கிருந்தெல்லாமோ வருவார்கள் பக்தர்கள். அதிலும் தை மாதம் வந்துவிட்டால், செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை என்றில்லாமல் எல்லா நாளும் காளிகாம்பாளைத் தரிசனம் செய்ய வந்துவிடுவார்கள். தை மாத வெள்ளிக்கிழமையில், காளிகாம்பாளை தரிசிப்போம்.
தை முதல் வெள்ளியில், அன்னை காளிகாம்பாளை கண்குளிரத் தரிசிப்போம். நம் கவலைகளையெல்லாம் போக்கி அருளுவாள் அம்பாள். கஷ்டங்களையெல்லாம் நீக்கி வாழச் செய்வாள் அம்பிகை.
தொடர்ந்து தை மாதத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காளிகாம்பாளை தரிசனம் செய்யுங்கள். நம் குடும்பத்தையும் சந்ததியையும் செழிக்கச் செய்து அருளுவாள் தேவி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT