Published : 13 Jan 2021 04:23 PM
Last Updated : 13 Jan 2021 04:23 PM
எல்லாப் பண்டிகைகளும் கொண்டாட்டம் நிறைந்தவை; குதூகலம் கொடுப்பவை. மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தருபவை. என்றாலும் அத்தனைப் பண்டிகைகளிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் போற்றப்படுகிறது, பொங்கல் திருநாள் பண்டிகை. பொங்கல் பண்டிகையைத்தான் குடும்பமாக இணைந்து கொண்டாடும் விழாவாக பார்க்கப்படுகிறது, பொங்கல் நன்னாள்!
நாம் கொண்டாடுகிற அனைத்துப் பண்டிகைகளிலும் உணவுக்கும் படையலுக்கும் முக்கியத்துவம் உள்ளது. என்றாலும் உணவுக்கு மரியாதை செய்யும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது பொங்கல் பண்டிகை. உணவுக்கு மட்டுமின்றி, உணவை உற்பத்தி செய்து கொடுக்கிற விவசாயிகளுக்கும் விவசாயத்துக்கு உதவுகிற கால்நடைகளுக்கும் விவசாயம் செழிக்க உதவுகிற சூரியனாருக்கும் நன்றி தெரிவிக்கும் விழாவாகவும் அமைந்துள்ளது பொங்கல் திருநாள்.
‘அன்னமயம் ப்ராண மயம் ஜகத்’ என்றொரு வாசகம் உண்டு. அன்னம் எனப்படும் உணவுதான், இந்த உலகையும் உயிர்களையும் இயங்கச் செய்துகொண்டிருக்கின்றன. அதனால்தான் குடும்பத்தார் மொத்தமும் சேர்ந்து இந்தப் பண்டிகையைக் கொண்டாடச் சொல்லியிருக்கிறார்கள் முன்னோர்கள்.
பொங்கல் நன்னாளில், சிலர் புதுப்பானையில் பொங்கல் வைப்பார்கள். மண்பானையில் பொங்கல் வைப்பதுதான் வழக்கம் என்றபோதும் புதிய பாத்திரத்தில் அல்லது குக்கரில் பொங்கல் வைப்பவர்களும் உள்ளனர். இன்னும் பலர், கணவரின் குடும்பத்தில் ஆண்டாண்டு காலமாக பயன்படுத்திய வெண்கலப் பானையைக் கொண்டு பொங்கல் வைப்பார்கள். எதுவாக இருந்தாலும் அந்தப் பாத்திரத்தை நன்றாகக் கழுவி, சுத்தம் செய்து, அந்தப் பாத்திரத்துக்கு சந்தனம் குங்குமமிட்டு, பாத்திரத்தின் கழுத்துப் பகுதியில், மஞ்சள் கிழங்கு, இஞ்சி உள்ளிட்டவற்றைக் கொண்டு அலங்கரித்து, பூஜையறையில் வைத்து, விளக்கேற்றி வேண்டிக்கொள்ளவேண்டும்.
‘இந்தப் பொங்கல் பொங்குவது போலவே, எங்களின் வாழ்க்கையும் எங்களின் குடும்பமும் பால் போல் மணந்து, பொங்கிப் பெருக வேண்டும்’ என்று குடும்பத்தார் அனைவரும் சேர்ந்து வேண்டிக்கொண்டு பொங்கல் வைக்க வேண்டும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
மற்ற நாட்களில் எப்படியோ... பொங்கல் நாளின் போது, வீட்டில் உள்ள பெரியவர்களைக் கொண்டே அடுப்பைப் பற்றவைக்கவேண்டும் என்கிற மரபு உள்ளது. இது இன்றைக்கும் கிராமங்களில் தொன்றுதொட்டு இருந்து வருவதாகத் தெரிவிக்கிறார்கள்.
வெண் பொங்கல், சர்க்கரைப் பொங்கல், பல காய்கறிகளைக் கொண்ட கூட்டு அல்லது சாம்பார், கரும்பு, பழங்கள், வெற்றிலை, பாக்கு என வைத்து படையலிட வேண்டும். ‘ஆதித்ய பகவானை உனக்கு சமர்ப்பிக்கிறேன், எடுத்துக்கொள்’ என்று சூரியனாரை அழைத்து வேண்டிக்கொள்ளவேண்டும். ‘எங்கள் குடும்பத்தில் உள்ள வறுமை, நோய், கவலை, துக்கம் என அனைத்தும் விலகச் செய்வாயாக’ என்று குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றாக இருந்து பிரார்த்தனை செய்து நமஸ்கரிக்க வேண்டும்.
தை மாதப் பிறப்பு என்பது நாளை 14ம் தேதி வியாழக்கிழமை காலை 11 மணிக்கு பிறக்கிறது. எனவே, காலை 11 முதல் 12 மணிக்குள் பொங்கல் வைத்து வழிபடலாம் என்கிறார்கள் ஆச்சர்யர்கள்.
இயற்கைக்கும் உழவர்களுக்கும் நன்றி சொல்லுவோம். பொங்கலைக் கொண்டாடுவோம். குடும்பமாகக் கொண்டாடுவோம். கூடிக்களித்துக் கொண்டாடுவோம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT