Published : 12 Jan 2021 06:03 PM
Last Updated : 12 Jan 2021 06:03 PM
தை பிறந்தால் வழி பிறக்கும் என்றொரு முதுமொழி உண்டு. அதன்படி வாழ்க்கைக்கு நல்ல வழிகளையெல்லாம் காட்டியருளுவார் சூரிய பகவான். பொங்கும் மங்கலத் திருநாளை ஆத்மார்த்தமாகக் கொண்டாடுவோம்.
உத்தராயன புண்ய காலம் தை மாதத்தில் தொடங்குகிறது. இந்த மாதப் பிறப்பானது, பொங்கல் நன்னாளாகக் கொண்டாடப்படுகிறது!
போகிப் பண்டிகை, பொங்கல் திருநாள், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என நான்கு நாள் விழாவாக பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. பொங்கலன்று வரக் கூடிய சூரிய பூஜையையும், அதன் மங்கலங்களையும் வரவேற்கும் முகமாக போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதத்தின் கடைசி நாள் மட்டுமல்ல. தட்சிணாயன புண்ணிய காலத்தின் கடைசி நாளும் கூட.
அப்போது, பழைய, தேவையற்ற பொருட்களை தீயில் இட்டுப் பொசுக்கி, வீட்டைத் தூய்மை செய்து வெள்ளை அடிப்பது நம்முடைய மிக முக்கியமான வழக்கமாக இருந்தது.
ஆக, பண்டிகைக்கு முன்னதாக நம் இல்லங்களைத் தூய்மைப்படுத்துவது வழக்கமான ஒன்றுதான். அதேசமயம், தூய்மைப்படுத்துவதையே ஒரு பண்டிகையாகக் கொண்டிருப்பது நம் வைபவங்களில் மிக முக்கியத்துவம் பெறுகிறது.
வீட்டில் உள்ள குப்பைகள், கிழிந்துவிட்ட ஆடைகள், உடைந்துவிட்ட பொருட்கள் ஆகியவற்றையெல்லாம் அகற்றி அப்புறப்படுத்தி, தீயிட்டுக் கொளுத்துவதே போகிப் பண்டிகையின் தாத்பர்யம். நம் முன்னேற்றத்துக்குத் தடையாக இருக்கிற, நம்மை வாழ விடாத, நமக்கு உதவாத, நமக்கும் நம் குடும்பத்துக்கும் கெடுதல்கள் செய்யக் கூடிய தீய குணங்களை எல்லாம் அகற்றுகின்ற வகையில், அழிக்கின்ற வகையில், தூய்மையான அறிவு எனும் ஞானத் தீயில் இட்டுப் பொசுக்க வேண்டும். உள்ளத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதையே போகி எனும் பண்டிகை உணர்த்துகிறது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். இதன் தாத்பரியம்... தீயவற்றைப் போக்குவதால், இது ‘போக்கி’ என்று அழைக்கப்பட்டு வந்தது. பின்னாளில், ‘போகி’ என மருவியது என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
மறுநாள்... பொங்கல் திருநாள். இதுவே தை மாதப் பிறப்பு. மார்கழியின் கடைசி நாள் போகி. போகிப் பண்டிகைக்கு அடுத்த நாள், தை மாதப் பிறப்பு. இதுவே சங்கராந்தி எனப்படும் பொங்கல் பண்டிகை. சூரிய பகவானை வணங்கும் நன்னாள். சூரிய பகவானுக்கு நன்றி சொல்லும் திருநாள்.
காலையில் எழுந்து சூரிய பகவானை வணங்கிவிட்டு, இந்த தை மாதத்தை சூரிய வணக்கத்துடன் தொடங்க வேண்டும். சூரிய பகவானின் காயத்ரி மந்திரத்தைச் சொல்லிவிட்டு பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவது இன்னும் பலம் வாய்ந்தது. வளமும் நலமும் தந்தருளும் என்கிறார்கள்.
ஓம் ஏக சக்ராய வித்மஹே
மஹத் யுதிகராய தீமஹி
தந்நோ ஆதித்ய ப்ரசோதயாத்
எனும் சூரிய பகவானின் காயத்ரி மந்திரத்தை 11 முறை சொல்லிவிட்டு, பொங்கல் நன்னாளைக் கொண்டாடுங்கள். பொங்கலிட்டு, ‘பொங்கலோ பொங்கல்’ என்று சொல்லி வழிபடுங்கள்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்றொரு முதுமொழி உண்டு. அதன்படி வாழ்க்கைக்கு நல்ல வழிகளையெல்லாம் காட்டியருளுவார் சூரிய பகவான். பொங்கும் மங்கலத் திருநாளை ஆத்மார்த்தமாகக் கொண்டாடுவோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT