Last Updated : 12 Jan, 2021 03:45 PM

 

Published : 12 Jan 2021 03:45 PM
Last Updated : 12 Jan 2021 03:45 PM

பொங்கல் வைக்க உகந்த நேரம்! 

பண்டிகைகள் அனைத்துமே குதுகலத்துக்காகவும் மகிழ்ச்சிக்காகவும் கொண்டாட்டத்துக்காகவும் ஏற்பட்டவையே. மேலும் நன்றி சொல்லும் விதமாகவும் பண்டிகைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இயற்கைக்கும் கடவுளுக்கும் நன்றி சொல்லும் விதமாகவும் கால்நடைகளுக்கு நன்றி சொல்லும் விதமாகவும் உழவுக்கு நன்றி சொல்லும் விதமாகவும் உள்ளதுதான் பொங்கல் திருநாள்.

தை மாதத்தின் பிறப்புதான் சங்கராந்தி பண்டிகை என்றும் தைத்திருநாள் என்றும் பொங்கல் திருநாள் என்றும் கொண்டாடப்படுகிறது.

குடும்பமும் உறவுமாகச் சேர்ந்து கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகை பொங்கல் பண்டிகை. இதனை சூரியப் பொங்கல் என்றும் சொல்லுவார்கள். சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் கொண்டாடப்படுகிறது பொங்கல் பண்டிகை.

புதுப்பானையில் பொங்கலிடுவார்கள். புதிதாக மண்பானை வாங்குவதும் அதில் பொங்கல் வைப்பதும் தொன்றுதொட்டு நிகழ்ந்து வருகிறது.வீட்டில் சமையலறையில், கியாஸ் ஸ்டவ்வில் பொங்கல் வைப்பது வழக்கமாகிவிட்டது என்றாலும் பெரும்பாலான வீடுகளில், வாசலில் அடுப்பிட்டு பொங்கல் வைக்கிற வழக்கம் இன்றைக்கும் நடைமுறையில் உள்ளது.

அரிசியும் வெல்லமும் இட்டு பொங்கல் வைத்து, சூரிய பகவானுக்கு அதைப் படைத்துவிட்டு, பொங்கும் தருணத்தில் ‘பொங்கலோ பொங்கல்’ என்று கோஷங்கள் எழுப்பி பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவார்கள் மக்கள்.

இயற்கையான சூரியனை வணங்கும் பொங்கல் பண்டிகை, மறுநாள் கால்நடைகளைக் கொண்டாடி வணங்கிப் போற்றும்விதமாக மாட்டுப் பொங்கல் என்றெல்லாம் கொண்டாடப்படுகிறது.

இதன் பின்னர், சொந்தபந்தங்களுடனும் உறவுகளுடனும் இணைந்து வம்சம் செழிக்கவும் தலைமுறை செழித்தோங்கவும் காணும் பொங்கல் எனும் வைபவமும் நடைபெறும்.

இப்படி, உணர்வுடன் கலந்த விழாவாகக் கொண்டாடப்படுகிறது பொங்கல் திருநாள்.

வருகின்ற 14ம் தேதி வியாழக்கிழமை பொங்கல் திருநாள். அன்றைய நாளில், பொங்கல் வைக்கும் நேரமாக, உகந்த நேரமாக, சிறப்புக்கு உரிய நேரமாக... ஆச்சார்யர்கள் நல்லநேரத்தைக் குறிப்பிட்டுள்ளனர்.

பொங்கல் வைக்க உகந்த நேரம் :

காலை :- 11.00 - 12.00

அல்லது

காலை :- 08.09 - 09.00.

அதாவது காலை 11 மணி முதல் 12 மணிக்குள் பொங்கல் வைக்கலாம். வழிபடலாம். அதற்கு முன்னதாகவே பொங்கல் வைத்து பூஜிக்க நினைப்பவர்கள், காலை 8.09 மணி முதல் 9 மணிக்குள் பொங்கல் வைத்து வழிபடலாம் என்று தெரிவிக்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

இயற்கையை வழிபடுவோம். சூரிய நமஸ்காரம் செய்வோம். சூரியப் படையலிடுவோம். பொங்கல் படையலிட்டு, ஒற்றுமையுடன் கொண்டாடுவோம். உலக நன்மைக்காகப் பிரார்த்தனை செய்வோம்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x