Published : 11 Jan 2021 09:47 PM
Last Updated : 11 Jan 2021 09:47 PM
சுசீந்திர நாயகனாக, பிரமாண்ட ரூபத்தில் அற்புதமாகக் காட்சி தருகிறார் அனுமன். சுசீந்திரம் அனுமனை மனதார வழிபட்டு, நம்முடைய பிரார்த்தனைகளை அவரிடம் சமர்ப்பித்தால், சகல காரியங்களையும் ஈடேற்றிக் கொடுப்பார் அனுமன். சங்கடங்கள் அனைத்தையும் களைந்து அருளுவார்!
குமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சுசீந்திரம் தாணுமாலயன் திருக்கோயில்.
அடிமுடி தேடிய கதை தெரியும்தானே. ஆதியும், அந்தமும் இல்லாமல் உயர்ந்து நின்ற சிவபெருமானின் திருவடியையும், திருமுடியையும் காண முடியாமல் விஷ்ணும், பிரம்மனும் திணறித் தவித்தார்கள்.
அவர்களில் திருமாலை முடியிலும், பிரம்மாவை அடியிலும் வைத்து, தன்னை நடுவில் இணைத்துக் கொண்டு சிவலிங்க வடிவமாக, ஈசன் அருள்புரியும் இடமே சுசீந்திரம் திருத்தலம் என்கிறது ஸ்தல புராணம். இங்கு இறைவன் மும்மூர்த்திகளின் வடிவமாக தாணுமாலயன் என்ற பெயர் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தாணு (சிவபெருமான்), மால் (மகாவிஷ்ணு), அயன் (ஸ்ரீபிரம்மா) ஆகியோர் இணைந்த உருவமே தாணுமாலயன் என விவரிக்கிறது ஸ்தல புராணம்.
தன்னுடைய அடியையும், முடியையும் காண முடியாத விஷ்ணுவுக்கும், பிரம்மனுக்கும், கார்த்திகை திருநாளில் தன்னை வழிபட்டதால், தனது முடியிலும், அடியிலும் இடமளித்து அருள்புரிந்தார். ஆகையால் அந்த திருக்கார்த்திகை திரு நாளில் சுசீந்திரம் சென்று, தாணுமாலயனை வழிபட்டு வந்தால், நம் வாழ்வும், நம் சந்ததியினரின் வாழ்வும் ஒளிமயமாகும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். .
இன்னொன்றும் சொல்லுவார்கள்.
அத்ரி மகரிஷிக்காகவும், அவருடைய மனைவி அனுசுயாதேவிக்காகவும், தென்னாடுடைய சிவனார், இங்கு மும்மூர்த்திகளாகத் திருக்காட்சி தருகிறார். இந்தத் தலத்து தாணுமாலய சுவாமியின் லிங்க வடிவில் சாத்தப்பட்டுள்ள தங்கக் கவசத்தில், சுவாமியின் திருமுகம், அதன் மேற்புறம் 14 சந்திரப் பிறைகள், அதன் மேல் ஆதிசேஷன் என வித்தியாசமான காட்சி தருவது சிறப்பு!
தாணுமாலய சுவாமியின் கருவறை கோஷ்டத்தின் பின்புறம், உள்பிரகாரத்தில் மரச் சட்டத்தினால் ஆன 27 நட்சத்திரத்துக்கான தீபக் குழிகள் உள்ளன. பெளர்ணமி நாட்களில் தூய பசு நெய் கொண்டு, தாமரைத் திரி போட்டு, 27 நட்சத்திர தீபக் குழிகளிலும் தீபமேற்றி வழிபட்டால், ஜாதகத்தில் உள்ள தோஷங்கள், நம் கர்மவினைகள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம்!
கருவறை கோஷ்டத்தைச் சுற்றியுள்ள பிரகாரத்தில் மூடு விநாயகர், ஸ்ரீதுர்கை, அமர புஜங்கப் பெருமாள், சங்கரநாராயணர், சண்டேஸ்வரர், நடராஜர் முதலானோரின் சந்நிதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மூடு விநாயகரையும், சங்கரநாராயணரையும் தொடர்ந்து எட்டு பெளர்ணமிகளில் ஐந்து அகல் விளக்கில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால், சுப காரியத் தடைகள் அகலும். மங்கல காரியங்கள் இனிதே நடந்தேறும். பிரிந்த தம்பதி ஒன்றிணைவார்கள்.
ஏழு நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது ஆலயம். கோபுரத்தை வணங்கி உள்ளே சென்றால் நந்தீஸ்வரரையும், சிதம்பரேஸ்வரரையும் வழிபடலாம். பின்னர் கிழக்கு பிரகாரத்தில் உள்ள தட்சிணாமூர்த்தியை வழிபட்டு, ஆதிசந்நிதி எனப்படும் கொன்றையடியில் உள்ள மும்மூர்த்திகளை வழிபடலாம்.
இங்குள்ள அலங்கார மண்டபத் தூணில் உள்ள விநாயகியை, தொடர்ந்து அமாவாசை தினங்களில் தீபம் ஏற்றி வழிபட்டால், பெண்களின் மாதவிலக்கு முதலான உடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீரும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
வசந்த மண்டபத்தின் மேற்கூரையில் பனிரெண்டு ராசிகளும், நவக்கிரகங்களும் உள்ளன. இந்த வசந்த மண்டபத் தூணில் கால பைரவர் சிற்பம் உள்ளது. இங்கு செவ்வாய்க் கிழமைகளில் தீபமேற்றி வழிபட, வீடு கட்டும் யோகம் உண்டாகும். தடைபட்ட கட்டிட வேலைகளும் தடையின்றி நடைபெறும். வீடு மனை, சொத்து முதலான பிரச்சினைகளில் நல்ல முடிவு கிடைக்கப் பெறலாம்.
சிவா, விஷ்ணு, பிரம்மா முதலான மும்மூர்த்திகள் குடிகொண்டிருந்தாலும் சுசீந்திரத்தின் நாயகனாக, ஆஞ்சநேயர் போற்றப்படுகிறார். சுமார் 18 அடி உயரத்தில் பிரமாண்டமாக காட்சி தந்து அருள்பாலிக்கிறார். இவருக்கு வெண்ணெய் சாத்தி வழிபட்டால், உடல் நோய்கள், கிரக தோஷங்கள் அகலும். செவ்வாய், சனி, மூல நட்சத்திர நாள், அமாவாசை நாட்களில் வெண்ணெய் சாத்தி வழிபடுவது விசேஷமானது.
அனுமன் ஜயந்தி நன்னாளில், சுசீந்திரம் அனுமனை மனதார வழிபட்டு, நம்முடைய பிரார்த்தனைகளை அவரிடம் சமர்ப்பித்தால், சகல காரியங்களையும் ஈடேற்றிக் கொடுப்பார் அனுமன். சங்கடங்கள் அனைத்தையும் களைந்து அருளுவார்!
12.1.2021 செவ்வாய்க்கிழமை, அனுமன் ஜயந்தி நன்னாளில், அஞ்சனை மைந்தனை, அனுமனை, ஆஞ்சநேயரை வழிபடுவோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT