Published : 10 Jan 2021 11:37 AM
Last Updated : 10 Jan 2021 11:37 AM
திருப்பாவை தந்த ஆண்டாளை, சூடிக்கொடுத்த சுடர்க்கொடியை, பாசுரங்களால் பரந்தாமனை மெய்யுருகப் பாடிய ஆண்டாள் நாச்சியாரை நாம் கொண்டாட வேண்டாமா. அவளை ஆடிப்பூரத்தில் கொண்டாடுவது போல், கொண்டாடி மகிழ்வது போல், வணங்கிப் போற்றுவது போல், இன்னொரு தினமும் இருக்கிறது. அது... கூடாரை வல்லி விழா! மனம் போல் மாங்கல்யம் கிடைக்கச் செய்வாள் ஆண்டாள். தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்
இந்த விழா நாளைய தினம். அதாவது... மார்கழி 27ம் நாள். ஜனவரி 11ம் தேதி. நாளைய தினம் திங்கட்கிழமை நன்னாளில், ஆண்டாளைக் கொண்டாடுவோம்.
நாளைய தினம் கூடாரைவல்லித் திருநாள்.
'கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா’ எனும் பாசுரம், மார்கழி மாதம் 27ம் நாள் அனுசந்தனம் செய்யப்படுகிறது. அதாவது இந்தப் பாடலைப் பாடி, மகாவிஷ்ணுவை, மாலவனை, திருமாலை வழிபடுவார்கள் பக்தர்கள். அதாவது நாளைய தினமான, ஜனவரி 11ம் தேதி.
ஆண்டாள்... சிறந்த பக்தை; தமிழ்மொழியை அத்தனை அழகுடனும் நேர்த்தியுடனும் ஆட்சி செய்திருக்கிறாள் பாருங்கள்.
முதல் ஐந்து பாடல்களில், நோன்பு நோற்பதன் மாண்பைச் சொல்லுகிறார் ஆண்டாள். அடுத்து, ஆறு முதல் பதினைந்தாவது பாடல் வரை கண்ணனது லீலாவிநோதங்களை விவரிக்கிறாள். அறியாமையில் மூழ்கி, உறங்கிக் கொண்டிருக்கும் ஆயர்குலப் பெண்களை உறக்கத்தில் இருந்து விழித்தெழுவதற்காகப் பாடுகிறாள். இறைவனின் அனுபவங்களைப் பெறாமல் அறியாமையில் தவழும் மானிடர்களை விழித்தெழக் கூறுவதாக அமைந்துள்ளன இந்தப் பாடல்கள்!
பதினாறாம் பாசுரம் முதல் இருபத்தி ஐந்தாம் பாசுரம் வரை, கண்ணனின் மாளிகையிலும் மற்றும் சுற்றுப் புறத்திலும் இருக்கும் பலரையும் துயிலெழுப்புவதற்காகப் அதாவது, நந்தகோபன், வாயிற்காப்போன், யசோதாபிராட்டி, திருமகள்... அதையடுத்து நிறைவாக கண்ணபிரான் ஆகியோரை துயிலெழுப்புகிறாள். இருபத்தி ஆறாவது பாசுரத்தில், கண்ணபிரானை நேரடியாக அழைத்து, ’நாங்கள் நோன்பு நோற்கத் தேவையானவற்றைப் பரிசாக அளிப்பாயாக’ என்று வேண்டுகிறாள்.
இருபத்தி ஏழாம் நாள் பாசுரத்தில், அதாவது மார்கழி 27ம் தேதிக்கான பாசுரத்தில், கண்ணபிரான் தன் பேரருளை தங்களுக்குத் தந்துவிடுவான் என்கிற நம்பிக்கையான எண்ணத்தில், அவன் கைத்தலம் பற்றுவது உறுதியாகிவிட்ட நிலையில், அவனைக் கைத்தலம் பற்றினால், தாமும் ஓரளவேனும் அவனுக்கு ஒப்பாக, நிகராக, இணையாக இருக்கவேண்டுமே என ஏக்கத்துடன் நினைக்கிறாள்.
ஏனெனில், இரண்டாம் நாள் பாசுரத்தில், அவனுடைய நினைப்பில் வருந்தி கண்களுக்கு மை தீட்ட மாட்டோம், பெண்களுக்கே உரிய வகையில் தன்னை அலங்கரித்துக்கொள்ளும் சுபாவத்தில் இருந்து மாறுபட்டு, வளையல்கள் அணியாமல், பாலுண்ணாமல், நெய் சேர்த்துக் கொள்ளாமல், அழகிய ஆடைகளை உடுத்திக் கொள்ளாமல் இருப்போம் என்று உறுதிபடச் சொல்கிறாள்.
ஆனால், 26 நாட்கள் கழித்து, 27ம் நாளன்று பாடகம் என்னும் தண்டை (சிலம்பு) கால்களுக்கும் சூடகம் எனும் வளையல்களை கைகளுக்கும் அணிவோம். புஜகீர்த்தி எனும் தோள்வளை அணிவோம். காதுகளுக்கு அழகூட்டுவதற்காக, தோடுகள் அணிவோம். மேலும் முகத்தில் பொலிவூட்ட தோடுக்கு மேலாகவே, சிறிய பூப்போன்ற தோடு அணிந்துகொள்வோம்.
மேலும் காதுகளில் உள்ள தோடுகளின் பாரம் தாங்காமல், காது இழுத்துக் கொண்டு போகுமாம். அதைச் சரிசெய்ய, ‘மாட்டல்’ எனும் அணிகலன், கழுத்தில் பலவிதமான ஆரங்கள், மணிமாலைகள் அணிந்துகொள்வார்களாம்! புத்தாடையை உடுத்திக் கொள்வோம். கூந்தலுக்கு நறுமணம் கமழும் மலர்களைச் சூடிக்கொள்ளலாம் என்கிறாள் சுடர்க்கொடி ஆண்டாள்!
கண்ணபிரான் எம்மைக் காண , என்னுடைய வேண்டுகோளை ஏற்று, தன் திருமாளிகையை விட்டு நேரில் வர இருக்கிறான். ஆகவே, அவன் பார்க்கும் போது, நாம் அமங்கலமாக இருக்கக் கூடாது. அவனுடைய கண்களுக்கு நிறைவாக, கண்டதும் மனம் பூரித்து, நெகிழ்ந்து, என்னை அவன் ஆட்கொள்ளவேண்டும். இதற்காகத்தான் இத்தனை அலங்காரங்களும் பண்ணிக் கொள்கிறாளாம் ஆண்டாள்!
இத்தனை புராணப் பெருமைகொண்ட நன்னாள் தான் மார்கழி 27ம் நாள். நாளைய தினம் மார்கழி 27ம் தேதி. திங்கட்கிழமை. ஒவ்வொரு வருடமும் மார்கழி 27ம் தேதி கூடாரைவல்லி எனும் திருநாள், பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது.
கூடாரைவல்லித் திருநாளைக் கொண்டாடுவோம். ஆண்டாளைப் போற்றுவோம்! இந்தநாளில் ஆண்டாளைத் தரிசித்துப் பிரார்த்தனை செய்தால், மனம் போல் மாங்கல்யம் கிடைக்கச் செய்வாள். தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT