Published : 08 Jan 2021 08:50 PM
Last Updated : 08 Jan 2021 08:50 PM
ஸ்ரீரங்கம் தலத்துக்கு ஒரேயொரு முறை வந்து அரங்கனையும் ரங்கநாயகி தாயாரையும் ஸேவித்தால், ஜென்மப் பாவங்கள் மொத்தமும் விலகும் என்கிறார்கள் பட்டாச்சார்யர்கள்.
ரங்கா... ரங்கா என மனமுருக பிரார்த்தனை செய்யுங்கள். சுக்கிர யோகம் தரக்கூடிய ஸ்ரீரங்கம் தலம், சகல ஐஸ்வரியங்களையும் தந்தருளும் ஒப்பற்ற திருத்தலம்!
காவிரிக்கும் கொள்ளிடத்துக்கும் நடுவே அமைந்துள்ள அற்புதமான திருத்தலம் ஸ்ரீரங்கம். வைணவத்தில்... ‘கோயில்’ என்றாலே ஸ்ரீரங்கம் என்பார்கள். புராணப் பெருமைகள் கொண்ட புண்ணிய க்ஷேத்திரம் ஸ்ரீரங்கம் திருத்தலத்தை ஸ்தல புராணம் கொண்டாடுகிறது.
பாண்டிய மன்னர்களில் மிக முக்கியமான மன்னரான சுந்தர பாண்டிய ராஜா, பெருமாள் மீது கொண்ட பக்தியால், ரங்கநாதருக்கு கிரீடம் ஒன்றை காணிக்கையாக அளித்தான். அந்தக் கிரீடத்துக்கு ‘பாண்டியன் கொண்டை’ பெயர் அமைந்தது. அந்த ‘பாண்டியன் கொண்டை’ கிரீடம், இன்றளவும் பெருமாளுக்கு அணிவிக்கப்படுகிறது.
அதேசமயம், வங்காள அரசன் ஒருவன், ஸ்ரீரங்கம் தலத்தின் பெருமையை உணர்ந்து, மிகப்பெருஞ்செல்வத்தை அரங்கனுக்கு வழங்கினான். ஆனால் ரங்கன் இதனைப் பெற்றுக்கொள்ளவில்லை. அது அப்படியே வாசலில் வைக்கப்பட்டது. இதனை ஆரியர்கள் காவல் காத்தார்கள் என்றும் அப்படி ஆரியர்கள் வாசலில் காவல் காத்த அந்த வாசல், ஆர்யப்பட்டாள் வாசல், ஆர்யப்பட்டாள் நுழைவாயில் என்றே இன்றளவும் அழைக்கப்படுகிறது என்றும் விவரிக்கிறது ஸ்தல புராணம்.
நாத பிரம்மம் என்று புகழப்படும் தியாகராஜ சுவாமிகள், ஸ்ரீரங்கம் திருத்தலத்துக்கு வந்தார். அரங்கனைத் தொழுதார். அப்போது அரங்கனின் மீது கீர்த்தனைகள் பாடினார். அதேபோல, தொண்டரடிப் பொடி ஆழ்வாரும் திருப்பாணாழ்வாரும் இங்கே, திருவரங்கம் திருத்தலத்தில் தொண்டுகள் புரிந்து வாழ்ந்தார்கள்.
வைகுண்ட ஏகாதசிப் பெருவிழாவுக்கு பெயர் பெற்ற திருத்தலம் ஸ்ரீரங்கம். வைகுண்ட ஏகாதசி அன்று, ரத்னாங்கி அணிந்து உலா வருவார் நம்பெருமாள். படிதாண்டாத தாயார், தன் இருப்பிடத்தில் இருந்தே, திருச்சந்நிதிக்கு முன்னே தரையில் உள்ள ஐந்து குழிகளில், ஐந்து விரல்களையும் வைத்து, மூன்று வாயில்கள் வழியே கண்டு மகிழ்வார் என்பது ஐதீகம். இதை நினைவுபடுத்தும் வகையில், ஸ்ரீரங்கம் தலத்தில் ரங்கநாயகி தாயாரின் சந்நிதிக்குச் செல்லும் வழியில், ஐந்து குழிகள் தரையில் உள்ளன என்பதை சிலிர்ப்புடன் தெரிவிக்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
ஸ்ரீரங்கம் தலத்தில், நான்கு பிரம்மோத்ஸவங்கள் நடைபெறுகின்றன. உத்தர வீதியில் இரண்டு பிரம்மோத்ஸவங்கள் நடைபெறும். சித்திரை வீதியில் இரண்டு பிரம்மோத்ஸவங்கள் நடைபெறும். ஆக, வருடத்தில் நான்கு பிரம்மோத்ஸவங்கள் நடைபெறும் பிரமாண்டத் தலம் இது. அதுமட்டுமா? வருடத்தின் 365 நாளில், இந்தத் தலத்தில் 114 நாட்கள் திருவிழாக்கள் நடைபெறும் க்ஷேத்திரம் என்கிறார்கள் பட்டாச்சார்யர்கள்.
அனைத்து பெருமாள் கோயில்களிலும் ஒரேயொரு முறைதான் தைலக்காப்பு நடைபெறுவது வழக்கம். ஆனி மாதத்தில் நடைபெறும் ஜ்யேஷ்டாஷ்பிகேத்தின் போது மட்டுமே தைலக்காப்பு நிகழும். ஆனால், திருவரங்கம் திருத்தலத்தில், ஆனி ஜ்யேஷ்டாஷ்பிகேத்திலும் ஆவணி பவித்ரோத்ஸவத்தின் நிறைவு நாளிலும் என இரண்டு முறை தைலக்காப்பு நிகழ்வு நடைபெறும்.
ஸ்ரீரங்கம் தலத்துக்கு ஒரேயொரு முறை வந்து அரங்கனையும் ரங்கநாயகி தாயாரையும் ஸேவித்தால், ஜென்மப் பாவங்கள் மொத்தமும் விலகும் என்கிறார்கள் பட்டாச்சார்யர்கள்.
ரங்கா... ரங்கா என மனமுருக பிரார்த்தனை செய்யுங்கள். சுக்கிர யோகம் தரக்கூடிய ஸ்ரீரங்கம் தலம், சகல ஐஸ்வரியங்களையும் தந்தருளும் ஒப்பற்ற திருத்தலம் எனும் பெருமைக் கொண்ட க்ஷேத்திரத்துக்கு வாருங்கள்.
!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT