Published : 08 Jan 2021 07:38 PM
Last Updated : 08 Jan 2021 07:38 PM
திருத்தணி மலைக்கு சென்று தணிகைவேலனை வணங்க வேண்டும் என்று நினைத்தாலோ, திருத்தணி இருக்கும் திசை நோக்கி மானசீகமாக வேண்டிக்கொண்டாலோ, திருத்தணியை நோக்கி பத்தடி நடந்து, மனதார பிரார்த்தனை செய்துகொண்டாலோ, தீராத நோய் அனைத்தையும் தீர்த்துத் தருவான் வேலவன். பிரிந்த தம்பதி, ஒன்றிணைவார்கள். பிளவுபட்ட குடும்பம் மீண்டும் இணையும் என்கிறார்கள் முருக பக்தர்கள்!
கிழக்கில் திருவாலங்காடு, மேற்கில் சோளிங்கபுரம், வடக்கில் திருக்காளத்தி - திருப்பதி,தெற்கில் காஞ்சிபுரம் என திருத்தலங்கள் இருக்க, நடுநாயகமாக அமைந்திருக்கிறது திருத்தணி திருத்தலம். மலைகளில் சிறந்தது திருத்தணி என்கிறது கந்தபுராணம்.
‘திருத்தணிகை’ என்றும் ‘திருத்தணி’ என்றும் புகழப்படுகிற அற்புதமான ஊர். ஆறுபடைவீடுகளில் திருத்தணியும் ஒன்று. ஆறுபடை வீடுகளில் ஐந்தாம்படை வீடு, திருத்தணி திருத்தலம்.
‘திருத்தணிகை திருத்தலத்தில், ஐந்துநாட்கள் தங்கி, என் திருவடியை வழிபடுபவர்கள் வீடு பேறு உள்ளிட்ட புண்ணியங்களை அடைவார்கள்’ என திருத்தணி மலையின் மகோன்னதத்தை, ஸ்ரீவள்ளியிடம் முருகப்பெருமானே குறிப்பிட்டு உணர்த்தினார் என கச்சியப்ப சிவாச்சார்யர் கந்தபுராணத்தில் விவரித்துள்ளார்.
‘திருத்தணி’ எனப் பெயர் அமைந்தது எதனால்?
தேவர்களுக்கு நேர்ந்த கொடுமையையும் துயரத்தையும் அழிக்கும் பொருட்டு, சூரபத்மனுடன் போரிட்டார். அதேபோல், ஸ்ரீவள்ளியை மணம் முடிப்பதற்கு, வேடர்களுடன் சிறிய அளவில் போரிட்டார். போர் முடிந்தும் கூட, கடும் சீற்றத்தில் இருந்த முருகப்பெருமான், சீற்றத்தையும் கோபத்தையும் தணித்துக் கொண்டு நின்ற இடம் இது. எனவே, திருத்தணிகை எனும் பெயர் அமைந்தது என்கிறது ஸ்தல புராணம்.
அதுமட்டுமா?
தேவர்களின் அச்சத்தையும் பயத்தையும் கலக்கத்தையும் தணித்த தலம், தன்னை நாடி வருவோரின் கவலைகளையும் நோயையும் துக்கத்தையும் வறுமை நிலையையும் தணித்து அருளுகிற தலம் என்பவற்றாலும் திருத்தணிகை என பெயர் அமைந்ததாம்.
மேலும், திருத்தணிக்கு ஏகப்பட்ட பெயர்கள் உள்ளன. ஸ்கந்தகிரி என்று திருத்தணிக்கு பெயர் உண்டு. முருகக் கடவுள் தானே விரும்பித் தேர்ந்தெடுத்த மலை என்பதால், ஸ்கந்தகிரி என்று பெயர் அமைந்தது. சகல செல்வங்கள் அனைத்தையும் முருகப்பெருமான் தன்னகத்தே கொண்டுள்ளார் என்பதால், பரிபூரண கிரி என்று பெயர் அமைந்தது. உலகின் மூலக்கடவுள் சிவபெருமான் என்கிறோம். அந்த சிவபெருமானே தணிகாசலமான முருகப் பெருமானை வணங்கி வழிபட்டதால், இந்தத் தலத்துக்கு மூலாத்திரி எனப் பெயர் அமைந்தது.
இங்கே உள்ள கந்தபெருமான், க்ஷண நேரத்தில் பக்தர்களின் குறைகளை ஏற்றுக்கொண்டு நிவர்த்தி செய்துவிடுவாராம். அதனால், க்ஷணிகாசலம் எனப் பெயர் அமைந்ததாகவும் இதுவே பின்னர் மருவி, தணிகாசலம் என்றானதாகவும் சொல்கிறது ஸ்தல புராணம்.
இப்படி புராண - புராதன பெருமைகள் கொண்ட திருத்தணி திருத்தலம் என்று போற்றுகிறார்கள் பக்தர்கள். தன்னை நாடிவரும் பக்தர்களின் வேண்டுகோளை உடனே நிறைவேற்றி அருளுகிறார். காரியத் தடையால் கலங்குவோர், எதிர்ப்புகளால் தோல்வியையே தழுவிக்கொண்டிருக்கிறோம் என வருந்துவோர், இந்தத் தலத்துக்கு வந்து தணிகைவேலனை வேண்டிக்கொண்டால், அவற்றை உடனே நிறைவேற்றித் தருவார். காரியத்தடைகள் விலக்கித் தருவார். எதிலும் வெற்றியைத் தந்தருளுவார் வெற்றிவேலன்.
திருமண பாக்கியம் தந்தருளும் தலம் திருத்தணி. வீடு மனை வாங்கும் யோகம் தந்தருளும் க்ஷேத்திரம் இது.
திருத்தணி மலைக்கு சென்று தணிகைவேலனை வணங்க வேண்டும் என்று நினைத்தாலோ, திருத்தணி இருக்கும் திசை நோக்கி மானசீகமாக வேண்டிக்கொண்டாலோ, திருத்தணியை நோக்கி பத்தடி நடந்து, மனதார பிரார்த்தனை செய்துகொண்டாலோ, தீராத நோய் அனைத்தையும் தீர்த்துத் தருவான் வேலவன். பிரிந்த தம்பதி, ஒன்றிணைவார்கள். பிளவுபட்ட குடும்பம் மீண்டும் இணையும் என்கிறார்கள் முருக பக்தர்கள்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT