Published : 08 Jan 2021 06:35 PM
Last Updated : 08 Jan 2021 06:35 PM
ஏகாதசியும் சனிக்கிழமையும் இணைந்திருக்கும் அற்புத நாளில், மார்கழி மாதத்தில், மார்கழி மாதத்தின் கடைசி சனிக்கிழமையில், பெருமாளுக்கு துளசி மாலை சார்த்துங்கள். மனதில் நிம்மதியும் தெளிவும் பிறக்கும். மங்கல காரியங்களுக்கு இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும்.
மார்கழி மாதம் என்பது வழிபாடுகளுக்கும் பூஜைகளுக்கும் உரிய மாதம். வேறு எந்த நிகழ்வுகளிலும் கவனம் செலுத்தாமல், உரிய முறையில் காலையும் மாலையும் பூஜைகளிலும் வழிபாடுகளிலும் ஈடுபடுவது மிக உன்னதப் பலன்களையெல்லாம் வழங்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
‘மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்’ என கீதையில், கிருஷ்ணவதாரத்தில் தெரிவித்துள்ளார் பகவான். மார்கழி மாதம் முழுவதுமே பெருமாளுக்கு உரிய மாதம். மார்கழி மாதத்தில்தான் வைகுண்ட ஏகாதசி எனும் சொர்க்கவாசல் திறப்பு வைபவம் விமரிசையாக நடைபெறுகிறது. வைகுண்ட ஏகாதசிக்கு முன்னதாகவும் பின்னதாகவும் ராப்பத்து பகல் பத்து என பூஜைகளும் விழாக்களும் திருவீதியுலாவும் அமர்க்களப்படும்.
மார்கழி மாதம் முழுவதுமே, பனியும் குளிரும் பரவிக்கிடக்கிற பிரம்ம முகூர்த்தத்தில், ஆண்டாளின் திருப்பாவை பாடி அனந்தனை, அரங்கனை, மாலோனை, மகாவிஷ்ணுவை வழிபடுவார்கள் பக்தர்கள்.
வைகுண்ட ஏகாதசி என்பது மட்டுமின்றி, ஒவ்வொரு மாதமும் வருகிற ஏகாதசி திதியில், பெருமாள் கோயிலுக்குச் சென்று தரிசிக்கும் பக்தர்கள் ஏராளம். அதேசமயம், ஏகாதசி நன்னாளில், விரதம் மேற்கொள்ளும் பக்தர்களும் இருக்கிறார்கள்.
ஏகாதசி நன்னாளில், விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வதும் அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்வதும் பெருமாளுக்கு உகந்த புளியோதரை நைவேத்தியம் செய்து வேண்டிக்கொள்வதும் எண்ணற்ற பலன்களை வாரி வழங்கும்.
ஏகாதசி விசேஷம். சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாள். ஏகாதசியும் சனிக்கிழமையும் இணைந்து வருவது இன்னும் இன்னுமான சாந்நித்தியமான நாள். மார்கழி மாதமும் மகாவிஷ்ணுவுக்கு உரிய மாதம்தானே.
ஆக, மார்கழி மாதம், ஏகாதசி திதி, சனிக்கிழமை. இந்த மூன்றும் இணைந்த மிக அருமையான நாள், நாளைய தினம் 9.1.2021. அற்புத நாளில்... பெருமாள் கோயிலுக்குச் செல்லுங்கள். துளசி மாலை சார்த்துங்கள். துளசி தீர்த்தம் பருகுங்கள். பாவங்களையெல்லாம் விலக்கித் தந்து, புண்ணியங்களையெல்லாம் போக்கி அருளுவார். மங்கல காரியங்களை நடத்தித் தந்தருளுவார். மங்காத செல்வம் தந்தருளுவார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT