Published : 08 Jan 2021 03:00 PM
Last Updated : 08 Jan 2021 03:00 PM
அம்பாளுக்கு ஆயிரம் திருமாங்கள் உண்டு. ஒவ்வொரு தலத்திலும் ஒவ்வொரு விதமாகக் காட்சி தருகிறாள் தேவி. அம்பாள், அன்னை, தேவி, சக்தி, அம்பிகை என்றெல்லாம் போற்றப்படுகிற அம்பாளுக்கு ஒவ்வொரு திருநாமமும் ஒவ்வொரு விதமான சக்தியை வெளிப்படுத்துகின்றன என்பார்கள்.
அந்த வடிவங்களில் மிகவும் வித்தியாசமானது... வித்தியாசமானவள்... ஸ்ரீபாலா திரிபுரசுந்தரி. நம்மையெல்லாம், பக்தர்களையெல்லாம் குழந்தையைப் போல் பாவித்து அருள்பாலிக்கும் அன்னையே, குழந்தையாக, சிறுமியாக இருந்து அருள்பாலிக்கும் தெய்வம்... ஸ்ரீபாலா திரிபுரசுந்தரி.
பாலா திரிபுரசுந்தரி கருணையே உருவானவள். அன்பே வடிவானவள். அருளைப் பொழிந்து கொண்டிருப்பவள். ஒரு செவ்வரளிச் சரம் சார்த்தினாலே குதூலத்துடன் நம்மைத் தேடி வந்து அருளுவாள்.
பாலா எனும் திருநாமம், குழந்தைக்கான சொல். பாலா என்பவள் ஒரு குழந்தைதான். ஒன்பது வயது சிறுமிதான். ஆனால், உலகில் சூழ்ந்திருக்கும் தீயசக்திகளையெல்லாம் அழித்தொழிப்பவள்.
சாக்த வழிபாட்டில், சக்தி வழிபாட்டில் ஸ்ரீபாலா வழிபாடு மிக மிக முக்கியமானது. ஸ்ரீராஜேஸ்வரியின் அவதாரமே குழந்தை பாலாவின் திருவடிவம். பாலா திரிபுரசுந்தரியை வணங்குங்கள். அவளின் காயத்ரியைச் சொல்லுங்கள். ஒரு பத்துநிமிடம் கண்கள் மூடி, எந்தநாளாக இருந்தாலும் அவளிடம் உங்கள் குறைகளையெல்லாம் சொல்லி முறையிடுங்கள். நாம் சொன்ன சொல் கேட்டதும் ஒரு குழந்தையைப் போல் ஓடிவந்து நம்மைக் காத்தருள்வாள்.
குழந்தை பாலாவின் காயத்ரியைச் சொல்லுங்கள்.
ஓம் பால ரூபாயை வித்மஹே
ஸதா நவ வர்ஷாயை தீமஹி
தந்நோ பாலா ப்ரசோதயாத்
குழந்தை உருவான அன்னையே. அழல்கண் அரனின் தேவியே. கருணையை மழையாகப் பொழிபவளே. எங்கள் பாலா திரிபுரசுந்தரியே உன்னை வணங்குகிறேன் என்று அர்த்தம்.
செவ்வாய்க் கிழமைகளிலும் வெள்ளிக்கிழமைகளிலும் பாலா திரிபுர சுந்தரியை வணங்குங்கள். பாலா திரிபுரசுந்தரிக்கு சாக்லெட்டுகள் நைவேத்தியம் செய்வது விசேஷம். நைவேத்தியம் செய்த சாக்லெட்டுகளை அக்கம்பக்கத்தில் உள்ள குழந்தைகளுக்கு வழங்குங்கள்.
ஸ்ரீபாலாவின் காயத்ரியை 108 முறை சொல்லி பிரார்த்தனை செய்யுங்கள். வாழ்வில் சகல செளபாக்கியங்களையும் தந்தருள்வாள் பாலா! இல்லத்தில் ஒற்றுமையையும் நம்பிக்கையையும் தந்திடுவாள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT