Published : 08 Jan 2021 12:23 PM
Last Updated : 08 Jan 2021 12:23 PM
தஞ்சையில் இருந்து கொண்டு தரணியைக் காக்கும் தெய்வமாகத் திகழும் நிசும்பசூதனியை மனதார வழிபடுவோம். மங்கல காரியங்கள் அனைத்தையும் தட்டாமல் நிகழ்த்தித் தந்தருளுவாள் தேவி!
வழிபாடுகளில் சாந்த தெய்வ வழிபாடு, உக்கிர தெய்வ வழிபாடு என்றெல்லாம் உண்டு. இதிலொரு ஒற்றுமையும் சந்தோஷமும் என்ன தெரியுமா? சாந்தமும் கருணையும் கொண்ட தெய்வங்களும் நமக்கு அருளை அள்ளிவழங்குகின்றன. உக்கிரமாகவும் ஆக்ரோஷத்துடனும் இருக்கிற தெய்வங்களும் நமக்கு அருளையே வழங்குகின்றன.
கண்டிப்பான பெற்றவர்கள், கனிவுடன் வழிநடத்தும் பெற்றவர்கள் என்று இருப்பது போலவே, நம்மை வழிநடத்துகிற, வழிகாட்டுகிற, வழிக்குத் துணையாக வருகிற தெய்வங்களிலும் சாந்தமும் உக்கிரமும் என்றிருக்கும் தெய்வங்கள் இருக்கிறார்கள்.
தஞ்சைத்தரணியில் உள்ள நிசும்பசூதனி எனும் தெய்வமும் அப்படித்தான் நமக்கு அருளை அள்ளி வழங்கிக் கொண்டிருக்கிறாள்.
அது ஒன்பதாம் நூற்றாண்டு. சோழ தேசத்தை விஜயாலய சோழன் ஆட்சி செய்து கொண்டிருந்த காலத்தில், தஞ்சைப் பகுதி மக்கள், திடீர் நோய் தாக்கி படுத்தபடுக்கையானார்கள். என்ன காரணம்... இந்த நோய் எப்படி வந்தது.. என்றெல்லாம் எவருக்கும் தெரியவில்லை. குழம்பிப் போனார்கள் மக்கள். தவித்துப்போனார் மன்னர்.
இந்த நிலையில், மன்னனின் கனவில் சிவனார் தோன்றினார். ‘அசுரர்களை அழிக்க சிருஷ்டிக்கப்பட்ட நிசும்பசூதனி, இங்கே எல்லையில் கடும் உக்கிரத்துடன் இருக்கிறாள். அவளுக்கு பூஜைகள் செய். வழிபாடுகள் நடத்து. அப்போதுதான் அவளின் உக்கிரம் தணியும். சாந்தமாவாள்’ என்று அருளினார்.
சும்ப நிசும்பரர்கள் எனும் அசுரர்களை அழித்தொழித்தவள்தான் நிசும்பசூதனி. அசுரர்களை அழித்த இடத்தில், நிசும்பசூதனிக்கு ஆலயம் எழுப்பி வழிபட்டு பூஜிக்கத் தொடங்கினான் மன்னன். மக்களும் நோயிலில் இருந்து விடுபட்டனர். ஆரோக்கியம் பெற்றனர் என்கிறது நிசும்ப சூதனியின் ஸ்தல வரலாறு.
இன்றளவும் என்ன குறை இருந்தாலும் தன்னை நாடிவரும் பக்தர்களின் குறைகள் அனைத்தையும் போக்கி அருளுகிறாள் நிசும்பசூதனி.
தஞ்சையின் எல்லைதெய்வமாகக் கோயில் கொண்டிருக்கிறாள் நிசும்பசூதனி.
கருவறையில், கையில் சூலம் ஏந்தி, வலது காலை மடக்கி, இடது காலால் அசுரனின் தலையை மிதித்தபடி ஆக்ரோஷத்துடனும் கடும் உக்கிரத்துடனும் அற்புதமாகக் காட்சி தருகிறாள். கடும் உக்கிரத்த்துடன் இருந்தாலும் வாழ்வில் எண்ணற்ற துரோகங்களை சந்தித்தவர்களையும் பொன்னையும் பொருளையும் இழந்தவர்களையும் கனிவுடன் பார்த்துக் கொண்டிருக்கிறாள்; அவர்களுக்கு அருளிக் கொண்டிருக்கிறாள்.
மனதில் குறையுடன் தடைப்பட்ட வாழ்க்கையால் கலங்கித் தவிப்பவர்களுக்கு நிசும்ப சூதனியே கண்கண்ட தெய்வம் என்று போற்றுகின்றனர் பக்தர்கள். நோய்வாய்ப்பட்டவர்களுக்காக இவளிடம் வந்து வேண்டிக்கொண்டால், விரைவில் குணமாகிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
ஆலயத்தில், விநாயகப் பெருமானுக்கும் சிவனாருக்கும் சந்நிதிகள் அமைந்துள்ளன. ஆதியில் உள்ள காளியையும் கருவறையில் பின்னர் பிரதிஷ்டை செய்யப்பட்டு மூலவராக இருக்கும் நிசும்ப சூதனியையும் தரிசிக்கலாம்.
திருமணத் தடையால் அவதிப்படுபவர்கள், தொடர்ந்து ஒன்பது வெள்ளிக்கிழமைகள் கோயிலுக்கு வந்து, ராகு கால வேளையில் காளியம்மனுக்கு விளக்கேற்றி, வேப்ப மரத்தில் மஞ்சள் சரடு கட்டிப் பிரார்த்தனை செய்தால், சீக்கிரமே மாங்கல்ய வரம் கிடைக்கும், திருமண வரம் கைகூடும் என்பது ஐதீகம்.
கருத்து வேற்றுமையால் பிரிந்த தம்பதியை ஒன்று சேர்த்து வைப்பாள் நிசும்ப சூதனி. வழக்கில் சிக்கல்களும் பிரச்சினைகளும் இருப்பவர்கள், இவளிடம் வந்து முறையிட்டு பிரார்த்தனை செய்து கொண்டால், வழக்கில் வெற்றி கிடைக்கும் என்பது உறுதி என்கிறார்கள் பக்தர்கள்.
தஞ்சையில் இருந்து கொண்டு தரணியைக் காக்கும் தெய்வமாகத் திகழும் நிசும்பசூதனியை மனதார வழிபடுவோம். மங்கல காரியங்கள் அனைத்தையும் தட்டாமல் நிகழ்த்தித் தந்தருளுவாள் தேவி!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT