Published : 07 Jan 2021 09:22 PM
Last Updated : 07 Jan 2021 09:22 PM
மார்கழி கடைசி வெள்ளிக்கிழமையில், மகாலக்ஷ்மி தாயாரை மனமுருக வேண்டுவோம். மங்கல வாழ்வு தந்தருளுவாள் தேவி. மங்காத செல்வம் கிடைக்கச் செய்வாள். சகல ஐஸ்வரியத்துடனும் சுபிட்சத்துடன் நம்மை வாழச் செய்வாள்.
சகல கல்யாண குணங்களுடன் திகழ்பவள் மகாலக்ஷ்மி தாயார். அவளின் கண்கள் கருணையே உருவெனக் கொண்டவை. அவளின் திருமுகம், எப்போதும் சாந்தமாகவே இருக்கிறது. அவளின் திருக்கரங்கள், நல்லுள்ளம் கொண்டவர்களின் இல்லங்களுக்குச் செல்வதையே விரும்புகின்றன என்கின்றன ஞானநூல்கள்.
எந்த வீட்டில், துஷ்ட வார்த்தைகள் பேசப்படுகிறதோ... அங்கே மகாலக்ஷ்மி வருவதே இல்லை என்கிறது சாஸ்திரம். ‘எழவு கொட்டாதே’, ‘ஏன் உயிரை வாங்கறே’, ‘சனியன் மாதிரி வந்துட்டான்’, ‘என் பிராணனே போயிரும் போல இருக்கு’, ‘இப்படி கழுத்தறுக்கறதே உனக்கு வேலையாப் போச்சு’, என்றெல்லாம் சர்வசாதாரணமாகப் பேசிவிடுகிறோம். ஆனால் ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு வீரியம் இருக்கிறது. அந்த வீரியம் வார்த்தையாக இருந்து, நம்மையும் நம் வீட்டையும் வேலை செய்யும் இடத்தையும் சூழ்ந்து, அந்த வார்த்தையை செயலாக்கும் விஷயங்களில் இறங்கும்.
துர்தேவதைகள் என்பவர்கள், நம்மைச் சூழ்ந்துகொள்வார்கள். நம்முடைய செயல்களையெல்லாம் முடக்கிவிடுகிறார்கள் என்கிறது தர்மசாஸ்திரம். எனவே, சொல்லுக்கு மிகப்பெரிய வலிமை இருக்கிறது. நாம் எது சொன்னாலும் ‘ததாஸ்து’ என்று சொல்வதற்கு பூதகணங்கள் தயாராக இருக்கும். ‘ததாஸ்து’ என்றால் ‘அப்படியே ஆகட்டும்’ என்று அர்த்தம். இந்த ‘அப்படியே ஆகட்டும்’ என்பதைச் சொல்வதற்கு, நல்ல தேவதைகளும் உண்டு. கெட்ட தேவதைகளும் சூழ்ந்திருப்பார்கள்.
அதனால்தான், எண்ணம் போல் வாழ்வு என்று சொல்லிவைத்தார்கள் தத்துவ அறிஞர்கள். ‘நீ என்னவாக வேண்டும் என நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்’ என்றார்கள் ஞானிகள்.
‘பொண்ணு மகாலக்ஷ்மி மாதிரி இருக்காப்பா’ என்று சொல்லுவார்கள். இதற்கு அர்த்தம், மகாலக்ஷ்மி போல் அழகுற அமைந்திருக்கிறாள் என்று மட்டுமே அர்த்தமல்ல. மகாலக்ஷ்மியிடம் இருக்கிற நற்குணங்கள் யாவும் இவளிடம் பொதிந்திருக்கின்றன என்று அர்த்தம். அப்படி எல்லா குணங்களும் இவளிடம் இருக்கவேண்டுமே என்கிற வேண்டுதல்.
அப்பேர்ப்பட்ட மகாலக்ஷ்மியை வெள்ளிக்கிழமைகளில் காலையும் மாலையும் விளக்கேற்றி வழிபடுவது மகோன்னதமான பலன்களை தந்தருளும் என்கிறது சாஸ்திரம்.
மார்கழி மாதம் வழிபாட்டுக்கு உரிய மாதம். மார்கழி மாதம் என்பது பூஜைக்கு உரிய மாதம். மார்கழி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை நாளைய தினம் (8.1.2021). இந்த நாளில், மார்கழி நாளில், வெள்ளிக்கிழமையில், மகாலக்ஷ்மியை வழிபடுங்கள். பால் பாயசம் நைவேத்தியம் செய்து வேண்டிக்கொள்ளுங்கள்.
மங்கல வாழ்வு தருவாள். மங்காத செல்வம் தந்தருள்வாள். சகல ஐஸ்வரியங்களையும் அருளிக் காப்பாள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT