Last Updated : 07 Jan, 2021 06:15 PM

 

Published : 07 Jan 2021 06:15 PM
Last Updated : 07 Jan 2021 06:15 PM

மோட்சம் தரும் காஞ்சி வரதா! 

முக்தி தரும் தலங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உறுப்புகளைக் கொண்டு சொல்லப்பட்டிருக்கிறது. நகரேஷு காஞ்சி என்று சொல்லப்படும் காஞ்சி மாநகரம், ஸ்ரீநாராயணரின் இடுப்புப் பகுதி என்று அழைக்கப்படுகிறது. அவந்தி திருத்தலம் காலடி என்றும் துவாரகை திருத்தலம் தொப்புள் என்றும் ஹரித்வார் மார்புப் பகுதி என்றும் மதுரா கழுத்துப்பகுதி என்றும் காசி நாசிப்பகுதி என்றும் அயோத்தி நகரம் சிரசுப்பகுதி என்றும் போற்றப்படுகிறது.

காஞ்சி மாநகரில் பிரமாண்டமானதொரு கோயிலில் சேவை சாதிக்கிறார் ஸ்ரீவரதராஜ பெருமாள். அகத்தியர் பெருமானுக்கு ஸ்ரீஹயக்ரீவர், ‘ஸ்ரீவித்யை’யை உபதேசித்த திருத்தலம் இதுதான். சக்தி பீடங்களில் ஸ்ரீசக்ர பீடம் என்று போற்றப்படுகிற, புகழப்படுகிற, வணங்கப்படுகிற திருத்தலம் காஞ்சி மாநகரம் என்கிறது காஞ்சி ஸ்தல புராணம்.

பஞ்சமூர்த்தி தலங்கள், பஞ்சாமிர்த தலங்கள் என்றும் கொண்டாடப்படுகிறது காஞ்சி க்ஷேத்திரம். பஞ்ச மூர்த்தி தலங்களில், மற்ற திருத்தலங்கள் ஸ்ரீரங்கம், திருப்பதி, திருவல்லிக்கேணி, திருநாராயணபுரம் என்று விவரிக்கிறது.

பிரளய காலத்திலும் அழியாத தலங்களில் காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலும் ஒன்று. அதனால்தான் பிரளய சித்து, கம்பை ஆற்றின் வெள்ளம் கண்டு அஞ்சிய அம்பிகை, பிரம்மா தவம் செய்ததால் தபோவனம், பிரம்மாவின் வேள்விக்கு மகாவிஷ்ணு மகிழ்ந்ததால் விண்டுமாபுரம், மகாவிஷ்ணு, பிரம்மா, ஈசன் முதலானோர் வசிக்கும் க்ஷேத்திரம் என்பதால், திருமூர்த்திவாசம் எனப் பெருமைகளுடன் அழைக்கப்படும் திருத்தலம் காஞ்சி வரதாராஜ பெருமாள் கோயில் க்ஷேத்திரமும் காஞ்சியம்பதியும்!

இங்கே காட்சி தரும் ஸ்ரீவரதராஜ பெருமாளை, பிரம்மா கிருதயுகத்தில் வணங்கினார். கஜேந்திரன் எனப்படும் யானையானது திரேதாயுகத்தில் வணங்கி வழிபட்டது. துவாபர யுகத்தில் பிரகஸ்பதி எனப்படும் தேவகுரு வணங்கி வழிபட்டார். கலியுகத்தில் அனந்தசேஷன் வழிபட்டார் என்கிறது ஸ்தல புராணம்.
இவர்கள் மட்டுமா? நாரதர் பெருமான், ஸ்ரீசரஸ்வதி தேவி, ஆதிசேஷன், இந்திரன், பிருகு முனிவர் முதலானோரும் வழிபட்டு அருள்பெற்ற திருத்தலம் என்று போற்றுகிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

இன்னொரு முக்கியமான விஷயம்... இன்றைக்கும் வைகாசி விசாகத்தின் போதும் ஆடி மாதத்தின் வளர்பிறை தசமி திதியிலும் ஆதிசேஷன், வரதராஜ பெருமாளை வணங்கி வழிபடுவதாக ஐதீகம்.

இந்தத் தலத்தில், பிரம்மோத்ஸவப் பெருவிழாவின் போது, பெருமாள் மட்டுமே திருவீதியுலா வருவார். இங்கே தாயாரின் திருநாமம் ஸ்ரீபெருந்தேவித் தாயார். திருவீதியுலாவில் பெருந்தேவி தாயார் வரமாட்டார். அதனால்தான் இந்த தாயாரை படிதாண்டா பத்தினி என்பார்கள்.

நகரேஷு காஞ்சி... அதாவது நகரங்களில் சிறந்தது காஞ்சி என்று பெருமைக்கு உரிய காஞ்சி திருத்தலத்தில், தடுக்கி விழுந்தால் கோயில்கள்தான். திரும்பிய பக்கமெல்லாம் கோயில்கள்தான். சிவ காஞ்சி, விஷ்ணு காஞ்சி என்று சிவா - விஷ்ணு கோயில்களும் சக்தி பீடமாகத் திகழும் காமாட்சி அன்னை ஆலயமும் குமரக்கோட்டம் எனப்படும் முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் ஆலயமும் சித்திர குப்தன் கோயிலும் என கோயில் நகரமாகத் திகழும் காஞ்சியம்பதி, அதனால்தான் தமிழகத்தின் தொன்மையான, புராதனமான, புராணத் தொடர்புகள் கொண்ட இந்தத் திருத்தலம்... மோட்ச பூமி என்று போற்றப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x