Published : 06 Jan 2021 09:21 PM
Last Updated : 06 Jan 2021 09:21 PM
தீப வழிபாடு என்பது மிக மிக முக்கியமானது. எந்தவொரு பூஜையை மேற்கொண்டாலும் விளக்கேற்றிவிட்டுத்தான் பூஜையைத் தொடங்குவோம். வியாபார ஸ்தலங்களாகட்டும், கம்பெட்னிகளாகட்டும் அலுவலகங்களாகட்டும்... நம் வீட்டைப் போலவே பூஜையறையோ சுவாமி படங்களோ வைத்திருப்பார்கள். தினமும் விளக்கேற்றுவதும் பூக்களிடுவதும் வணங்குவதும் செய்வார்கள்.
விளக்கேற்றுவதில் பல நியமங்கள் இருக்கின்றன என்கிறார்கள் ஆச்சார்யர்கள். விளக்கேற்றும் போது தீபமானது கிழக்கு முகமாக ஏற்றிவைத்து வேண்டினால், துன்பங்கள் அனைத்தும் நீங்கும். முகத்தில் பொலிவு கூடும். இல்லத்தில் நிம்மதி நிறைந்திருக்கும்.
மேற்கு திசை பார்த்து தீபம் எரிவது போல் ஏற்றக்கூடாது. அப்படி ஏற்றினால், கிரக தோஷங்கள் உண்டாகும். உறவுகளிடையே சண்டையும் சச்சரவும் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதி இல்லாத நிலை ஏற்படும் என்கிறது சாஸ்திரம்.
பூஜையறையில் தீபம் ஏற்றும் போது, வடக்கு முகமாக தீபம் எரிவது போல் ஏற்றினால் இல்லத்தில் சுபகாரியங்கள் அனைத்தும் தடையின்றி நடைபெறும். வீட்டில் உள்ள குழந்தைகள், கல்வியில் சிறந்துவிளங்குவார்கள். காரியத்தடைகள் என்பதே இல்லாத நிலை ஏற்படும். வீட்டில் செல்வத்துக்குக் குறைவிருக்காது.
பூஜைகள் செய்யும்போது, தெற்கு முகமாக தீபமேற்றினால், மனதில் சஞ்சல எண்ணங்களும் குழப்பங்களும் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
அதேபோல், தாமரைத் தண்டு கொண்டு திரியேற்றுவது விசேஷமானது. தாமரைத் தண்டு கொண்ட திரியில், தீபமேற்றி வழிபட்டால், இந்த ஜென்மத்துப் பாவங்கள் அனைத்தும் நீங்கப் பெறலாம்.
வாழைத்தண்டு நூல் கொண்டு திரியேற்றி வழிபட்டு வணங்கினால், இதுவரை குலதெய்வ வழிபாடுகள் மேற்கொள்ளாத பாவங்களெல்லாம் தொலைந்துவிடும். குலதெய்வத்தின் பேரருளைப் பெறலாம்.
புதிய வெள்ளை வஸ்திரம் கொண்டு, பன்னீர் விட்டு உலரச் செய்து, திரியிட்டு வேண்டிக்கொண்டால், இல்லத்தில் லக்ஷ்மி கடாட்சம் நிறைந்திருக்கும். கடன் முதலான பிரச்சினைகள் இல்லாத நிலை இருக்கும். வீட்டில் தரித்திரத்துக்கு இடமிருக்காது. தனம் தானியம் பெருகும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT