Published : 06 Jan 2021 05:33 PM
Last Updated : 06 Jan 2021 05:33 PM

எறும்புக்கு பச்சரிசி; ஏழு தலைமுறை பாவமும் விலகும்!  - காஞ்சி மகான் அறிவுரை

பச்சரிசியின் மகத்துவம் குறித்தும் ஏழு தலைமுறையின் பாவங்களைப் போக்கவல்லது பச்சரிசி என்றும் காஞ்சி மகான் அறிவுறுத்தியுள்ளார்.

தெரிந்தும் தெரியாமலும் அறிந்தும் அறியாமலும் நம்மை மீறியும் ஏதேனும் பாவங்களைச் செய்துவிடுகிறோம். எவர் மனதை காயப்படுத்தி, நோகடித்துவிடுகிறோம். நம் இன்றைய பிறப்பு என்பதே கர்மா எனப்படுகிறது. இந்தப் பிறப்பு எடுத்ததற்குக் காரணமே, முந்தைய பிறவியில் செய்த வினைகளைத் தீர்ப்பதற்குத்தான் என்கிறது சாஸ்திரம். ஒருவரின் பிறப்பில், ஏழு தலைமுறை பாவமும் சேர்ந்திருக்கும் என்றும் அறிவுறுத்துகிறது சாஸ்திரம்.

இத்தனை பாவங்களில் இருந்தும் நாம் விடுபடுவதற்கு, காஞ்சி மகாபெரியவா, அருளியுள்ள விஷயம் மிக மிக எளிதானது.

’’ஒருவர் ஏழு தலைமுறைக்கு முன் செய்த பாவங்களும், இந்த தலைமுறையில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களும் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களும் என சகலமும் தீருவதற்கு ஒரு வழி இருக்கிறது.

சனிக்கிழமையன்று பச்சரிசியை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ளுங்கள். அதனை நன்கு பொடியாக்கிக் கொள்ளுங்கள். அதனை கையில் வைத்துக்கொண்டு சூரிய நமஸ்காரம் செய்யுங்கள். மனதார வேண்டிக் கொண்ட பிறகு, அருகில் உள்ள விநாயகர் கோயிலுக்குச் செல்லுங்கள்.

மரத்தடி விநாயகர், தெருமுனை விநாயகரை தரிசித்து பிரார்த்தனை செய்யுங்கள். மூன்று முறை வலம் வந்து விநாயகரைச் சுற்றிலும் பச்சரிசிப் பொடியைத் தூவிவிடுங்கள்.

அந்தப் பொடியை நோக்கி எறும்புகள் வரும். வரிசையாக வந்து எறும்புகள் அதனை எடுத்துச் செல்லும். நீங்கள் போடுகிற பச்சரிசியை, பச்சரிசிப் பொடியை எறும்புகள் தூக்கிச் சென்றாலே உங்களுடைய பல பாவங்கள், நீங்கள் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் நீங்கிவிடும்.

அதுமட்டுமா? அப்படி தூக்கிச் சென்ற பச்சரிசிப் பொடியை, எறும்புகள் முழுவதுமாக சாப்பிட்டு தீர்த்துவிடாது. மழைக்காலத்திற்கு உணவு வேண்டுமே என்று தன் புற்றுக்குள் சேமித்துவைத்துக் கொள்ளும்.

அதெப்படி... பச்சரிசிப் பொடி கெடாமல் இருக்குமா? என்று கேள்வி எழலாம். எறும்பின் எச்சில் பட்டதுமே அரிசி மாவு கெடும் தன்மையை இழந்துவிடுகிறது. இந்த மாவு அல்லது பொடி இரண்டேகால் வருடங்கள் கெடாமல் இருக்கும். இப்படி எறும்புகள் எடுத்து வந்த பொடியை, புற்றுக்குள் இருக்கும் பொடியை, இரண்டே கால் வருடங்களாக இருக்கும் பொடியை முப்பத்து முக்கோடி தேவர்களும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இரண்டரை ஆண்டுக்கு ஒருமுறை கிரக நிலை மாறும். அப்போது அரிசிப் பொடியின் குணமும் மாறிவிடும். இதனால்தான், எறும்புக்கு அடிக்கடி பச்சரிசி பொடி இடவேண்டும் என்கிறது சாஸ்திரம்.

ஒரேயொரு எறும்பு நாம் இடுகிற ஒரேயொரு துளி பச்சரிசிப் பொடியைச் சாப்பிட்டால், அது நூறு அந்தணர்களுக்கு உணவிட்டதற்குச் சமம். மேலும் சனி பகவானின் தொல்லையில் இருந்தும் விடுபடலாம். ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டமச் சனி முதலான சனிதோஷமும் பெரிய தாக்கத்தையோ கெடு பலனையோ உண்டாக்காது.

அதனால்தான், அரிசிமாவில் கோலமிடுவது வழக்கமாகவே இருக்கிறது. அந்த அரிசிமாவு எறும்புக்கும் பூச்சிகளுக்கும் உணவாகின்றன’’ என்று காஞ்சி மகான் அறிவுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x