Published : 06 Jan 2021 01:12 PM
Last Updated : 06 Jan 2021 01:12 PM
பஞ்ச பூத தலங்களுள் நிலத்துக்கு உரிய திருத்தலம் திருவாரூர். ‘நினைத்தாலே முக்தி திருவண்ணாமலை’ என்பார்கள். அதேபோல், திருவாரூரில் பிறந்தாலே முக்தி என்றொரு வாசகம் உண்டு. மிகப்பிரமாண்டமாகத் திகழும் ஆலயங்களில், திருவாரூர் திருத்தலமும் ஒன்று.
புராணங்களுடனும் புராதனப் பெருமைகளுடனும் திகழ்கிறது திருவாரூர். இங்கே உள்ள சிவனாரின் திருநாமம் ஸ்ரீதியாகராஜ சுவாமி. விடங்கம் என்றால், உளியால் செதுக்கப்படாதது என்று அர்த்தம். விடங்கத் தலங்கள் ஏழு என்பார்கள். அதை சப்த விடங்க தலங்கள் என்று போற்றுவார்கள். சப்த விடங்கத் தலங்களில் திருவாரூரும் ஒன்று.
சுமார் 1300 வருடப் பழைமை வாய்ந்த திருத்தலம் திருவாரூர். சிவபெருமானின் ஆணைப்படி, விஸ்வகர்மா இந்தக் கோயிலை நிர்மாணித்ததாக விவரிக்கிறது ஸ்தல புராணம். ‘அஞ்சணை வேலி ஆரூர் ஆதரித்து இடம் கொண்டார்’ என்று அப்பர் பெருமான் திருவாரூர்க் கோயிலை சிலாகித்துள்ளார். ‘கோயில் ஐந்து வேலி நிலம், தீர்த்தக்குளம் ஐந்து வேலி, செங்கழுநீர் ஓடை நந்தவனம் ஐந்து வேலி’ என்பார்கள்.
வருடத்தின் ஆரம்பமான வசந்தகாலத்தில், பெளர்ணமி திதியன்று, குரு சந்திர யோகத்தில், கடக லக்கினத்தில், புண்ணியபுரம் என்று போற்றப்படும் திருவாரூரில், ஊருக்கு நடுவே அருள்பாலிக்கத் தொடங்கினார் தியாகராஜ பெருமான். கோயிலின் நடுவே லிங்கத் திருமேனியாகவும் தியாகராஜ ரூபமாகவும் தோன்றினார் என்கிறது ஸ்தல புராணம்.
திருவாரூர் தியாகராஜ பெருமானுக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. மகாவிஷ்ணு வழிபட்ட சிவபெருமான் இவர். திருப்பாற்கடலில் மகாவிஷ்ணு தியாகராஜரை வழிபட்டு வந்தார். பின்னர் மகாவிஷ்ணு, இந்திரனுக்கு பரிசளித்தார். தினமும் தியாகராஜப் பெருமானை இந்திரன் வழிபட்டு வந்தார். இதையடுத்து முசுகுந்தச் சக்கரவர்த்திக்கு தியாகராஜப் பெருமானை வழிபட்டார் என விவரிக்கிறது ஸ்தல புராணம்.
இத்தனைப் பெருமைகளுடன் கொண்டது திருவாரூர்த் திருத்தலம். மகாவிஷ்ணு வழிபட்ட தியாகராஜரை, தேவர்களின் தலைவனான இந்திரன் வழிபட்ட தியாகராஜரை, முசுகுந்த சக்கரவர்த்தி வழிபட்ட தியாகராஜரை இன்றைக்கும் தரிசித்துக் கொண்டிருக்கிறோம்.
செங்கல் கட்டுமானக் கோயிலாகத்தான் இருந்ததாம். சோழ ராணி செம்பியன் மாதேவியால் கற்றளியாக மாற்றி அமைத்தார். முதலாம் ஆதித்த சோழன் கி.பி. 9ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கோயிலுக்கு, முதலாம் ராஜராஜ சோழன், நாயக்க மன்னர்கள் மற்றும் விஜய நகரப் பேரரசர்கள், மராட்டிய மன்னர்கள் முதலானோரால் கோயில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன என விவரிக்கிறது ஆரூர் ஸ்தல புராணம்.
ஆரூர்த் தலத்தின் இறைவன் மூலவரின் திருநாமம் வன்மீகநாதர். உத்ஸவரின் திருநாமம் தியாகராஜர். இந்தக் கோயிலின் மற்றுமொரு சிறப்பு... இந்தக் கோயிலில் எப்போது வழிபாடுகள் நடந்தாலும் ‘ஆரூரா... தியாகேசா... ஆரூரா... தியாகேசா’ என்று இரண்டு முறை சொல்லிவிட்டுத்தான் பூஜைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஆரூரும் அழகு. ஆரூர் கமலாலயமும் அழகு. ஆரூர்த் தேரும் பேரழகு!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT